என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    முழு ஊரடங்கால் திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு 2-வது முறையாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கில் பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு நேர ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டது. அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் திருவண்ணாமலை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து வீட்டில் இருக்குமாறு அனுப்பி வைத்தனர். சில இடங்களில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    மேலும் நடந்து முடிந்த வாக்குப்பதிவையொட்டி நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனால் திருவண்ணாமலை சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர்.

    முழு ஊரடங்களில் பொது மக்கள் வீ்ட்டிலேயே முடங்கினர்.

    கண்ணமங்கலம், படவேடு, சந்தவாசல் ஆகிய பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்துச் சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. வாகனப் போக்குவரத்தும் இல்லாததால் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    கண்ணமங்கலம், படவேடு, சந்தவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அந்தப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்பு எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ரேணுகாம்பாள் கோவில் முன்பு பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் எதிரே உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

    கீழ்பென்னாத்தூரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இல்லாததால் கடைவீதிகள், அனைத்துத் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    அதேபோல் கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, அவலூர்பேட்டை சாலை, வேட்டவலம் சாலை போன்ற முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
    தூசி அருகே செல்லியம்மன் கோவில் திருவிழாவில் கைவிரல் நசுங்கி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமம் மீனவர் தெருவைச் சேர்ந்தவர் ராமன் (வயது 48), கூலித்தொழிலாளி. கிராமத்தில் 3 மாதங்களுக்கு முன்பு நடந்த செல்லியம்மன் கோவில் திருவிழாவில் இவருடைய கைவிரல் நசுங்கி 3 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் சங்க கீழ்பென்னாத்தூர் தாலுகா செயலாளர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் செல்வம், மாநில துணை தலைவர் சண்முகம் ஆகியோர் பேசுகையில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளில் கொரோனா காலத்தை முன்னிட்டு 100 நாள் வேலையை தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெள்ளை நிற அடையாள அட்டையை நீல நிற அடையாள அட்டையாக மாற்றிவழங்க வேண்டும், ஒன்றியத்தைச் சேர்ந்த கொளத்தூர், செவரபூண்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக பேசி வருவதை கண்டிக்க வேண்டும் என்றனர். பி்ன்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டனர்.

    அதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் ஆணையாளர் பழனியை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அனைத்து கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் பழனி உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
    சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் பேரூராட்சி ஊழியர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.2,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் சந்திக்கக் கூடிய இடங்களில் ஒலிபெருக்கி மூலம் வீட்டிலிருந்து வரும்போது முககவசம் அணிந்து வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 ஆயிரத்து 246 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 2054 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 197 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 ஆயிரத்து 29 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,042 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், 3 தொகுதியில் அதிமுக கூட்டணி பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

    வந்தவாசி

    பாமக

    செய்யாறு

    திமுக

    ஆரணி

    அதிமுக

    போளூர்

    திமுக

    கலசப்பாக்கம்

    அதிமுக

    கீழ்பென்னாத்தூர்

    திமுக

    செங்கம்

    திமுக

    திருவண்ணாமலை

    திமுக

    இரவுநேர ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமை முழுநேர ஊரடங்கு காரணமாகவும், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டதாலும் கோவிலில் உண்டியல் வசூல் மிகவும் குறைந்து விட்டது.
    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் நடந்து கிரிவலம் சென்று வழிபடுவார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியதால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 26-ந்தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    மேலும் இரவுநேர ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமை முழுநேர ஊரடங்கு காரணமாகவும், கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டதாலும் கோவிலில் உண்டியல் வசூல் மிகவும் குறைந்து விட்டது.

    கடந்த சில மாதங்களாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வசூல் ரூ.1 கோடி வரை கிடைத்து வந்தது.

    சித்ரா பவுர்ணமி முடிந்து நேற்று கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.

    இதில் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.38,28,292 லட்சம் ரொக்கம், 170 கிராம் தங்கம், 713 கிராம் வெள்ளி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

    கடந்த மாதங்களை விட இந்த மாதம் உண்டியல் வசூல் பாதியாக குறைந்துள்ளது. இதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
    திருவண்ணாமலையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் அருணை ஆனந்தன் (வயது 43). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் பா.ஜ.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவர் தனது கட்சி பிரமுகர் ஒருவருக்கு சிறுக, சிறுக ரூ.28 லட்சம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் முடிந்த பிறகு பணத்தை திருப்பி கொடுப்பதாக பணம் பெற்றவர் ஆனந்தனிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் பணத்தை கொடுக்கவில்லை எனவும், இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆனந்தனின் வீட்டின் கதவை சிலர் வேகமாக தட்டியுள்ளனர். உடனே ஆனந்தன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வெளியில் பா.ஜ.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளரான திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த அஜித்குமார் (26) மற்றும் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    வீட்டில் இருந்து வெளியே வந்த ஆனந்தனை அஜித்குமார் போன் அடித்தால் எடுக்க மாட்டியா? என்றும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு அசிங்கப்படுத்துவியா? என்றும் கேட்டு திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரிடம் இருந்து ஆனந்தனை மீட்டு வீட்டிற்குள் அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் பெட்ரோல் குண்டை வீட்டு கதவில் வீசி விட்டு குடும்பத்தோடு கொளுத்தி விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். ஆனால் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் உடையாமல் வீட்டின் வெளியே விழுந்தது.

    இது குறித்து ஆனந்தன் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    மேலும் அங்கு கீழே விழுந்து கிடந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலையும் கைப்பற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த அஜித்குமார், ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் சதீஷ்குமார் (23), தாமரை நகரை சேர்ந்த பாபு என்ற சதீஷ்குமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரையும், சதீஷ்குமாரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என அரசு அறிவித்ததையடுத்து அருணாசலேஸ்வரர், அஷ்டலிங்க கோவில்களில் பக்தர்கள் வெளியிலேயே நின்று தரிசித்து சென்றனர்.
    கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை அதிகரித்து வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.

    அரசின் உத்தரவின் பேரில் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முகூர்த்த நாளாகும். இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும் அம்மணி அம்மன் கோபுர வாசல், ராஜகோபுர வாசல் மற்றும் திருமஞ்சன கோபுர வாசல் ஆகியவை அடைக்கப்பட்டு காணப்பட்டது.

    தினமும் உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு பின் தங்கள் பணியை தொடங்குவார்கள். கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் கோவிலின் ராஜகோபுர வாசல் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு நின்று சாமியை மனதில் நினைத்த படி கை கூப்பி வணங்கிவிட்டு செல்கின்றனர்.

    கோவில் கோபுர வாசல்கள் அடைக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் கோவிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    இருப்பினும் கோவிலுக்குள் சாமிக்கு வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவிலின் சார்பு கோவில்களான கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள், சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவில், சோமாசிபாடியில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் பக்தர்கள் வாசலிலேயே நின்று வணங்கி விட்டு சென்றனர்.
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் இன்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்ரா பவுர்ணமி தினத்தில் அதிகப்படியான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு மே மாதத்தில் வந்த சித்ரா பவுர்ணமியின் போதும் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் பெரும் எதிப்பார்ப்பில் இருந்தனர்.

    போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்களை திருப்பி அனுப்பிய காட்சி.

    ஆனால் தற்போது கொரோனா தொற்றின் 2-ம் அலை மிகவும் தீவிரமாக உள்ளதால் சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளித்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருவார்கள். லட்சகணக்கானோர் திருவண்ணாமலையில் கூடினால் மேலும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

    சித்ரா பவுர்ணமி நேற்று மதியம் 12.18 மணிக்கு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) காைல 9.58 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி கிரிவலப்பாதையில் செங்கம் சாலை, அபய மண்டபம் எதிரில் என முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் யாரையும் கிரிவலம் செல்ல விடமால் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. சிலர் குறுக்கு வழியாக கிரிவலப்பாதைக்கு வந்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
    பெரணமல்லூர் அருகே திருமணம் செய்துவைக்கக்கோரி குடித்துவிட்டு தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அக்காள் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் அருகே உள்ள சஞ்சீவிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் ஏழுமலை (வயது 42). கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவருடைய அக்காள் மஞ்சுளா (46), தம்பி திருமலை (32). இவருக்கு திருமணமாகிவிட்டது. மஞ்சுளாவுக்கு திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் தாய்வீட்டுக்கு வந்து தம்பிகளுடன் வசித்து வந்தார். ஏழுமலை தினமும் குடித்து விட்டு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்துவந்துள்ளார்.

    வழக்கம்போல நேற்றுமுன்தினம் இரவும் ஏழுமலை மதுகுடித்துவிட்டு வந்து திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மஞ்சுளாவும், திருமலையும் சேர்ந்து ஏழுமலையை கட்டையால் அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த ஏழுமலை மயங்கி விழுந்துள்ளார்.

    உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, |சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிரு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏழுமலை தடியால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ஏழுமலையை அடித்து கொலை செய்ததாக அவருடைய அக்காள் மஞ்சுளா, தம்பி திருமலை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    ×