என் மலர்
திருவண்ணாமலை
ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருந்து சென்னை வந்த ஆரணி பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
காங்கோ நாட்டில் இருந்து சென்னைக்கு 38 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மகனுடன் கடந்த 12-ந்தேதி வந்தார். அவர்கள் 3 பேருக்கும் விமான நிலையத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது கணவர் மற்றும் மகனுக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து செய்யாறு சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கவச உடை அணிந்து அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ஒமைக்ரான் அறிகுறி உள்ளதென கூறப்பட்ட பெண்ணை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2 அல்லது 3 நாட்களில் அதன் தகவல் தெரியவரும். பின்னரே அந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளதா என்பது தெரியவரும்.
இதைத் தொடர்ந்து ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட பெண்ணின் கணவர், மகன், தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் முடிவுகள் வெளியாகும் வரை, அவர்கள் அனைவரும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களை கண்காணிக்கும் பணியில் மருத்துவக் குழுவினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த தெருவில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு, தெற்கு மண்டல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை வந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வினர் வீடுகளில் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மு. க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதுதான் இப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்காக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மாரிதாஸ் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்த கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். நீதித்துறையை அரசியலுக்கு மேலே வையுங்கள் சில வழக்குகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக தீர்ப்புகள் வந்துள்ளது. நீதித்துறையில் பா.ஜ.க. தலையிடாது.
மாரிதாஸ் வழக்கை விசாரித்த நீதிபதி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பது தவறானது. அபத்தமான குற்றச்சாட்டுகளை நிறுத்தி கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம் பேர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
அதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தப்பலாம். எனவே தயவு செய்து அனைவரும் 2 கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.தற்போதைக்கு வேறு தடுப்பூசி தேவைப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: ஆய்வில் தகவல்
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு தொடங்கி மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.22 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணகிரி, நகை செய்யும் தொழிலாளி.
இவரது மனைவி மகாலட்சுமி இவர்கள் இருவரும் நேற்று இரவு பைக்கில் ஷராப் பஜார் தெருவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் தலைகவசம் அணியிருந்த வந்த 2 கொள்ளையர்கள் தம்பதியினரை பின்தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர்.
மேலும் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் மார்கழி மாதம் அதிகாலை நேரம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான மார்கழி மாதம் இன்று பிறந்தது.
இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு திருவெம்பாவை விளக்க உரை சமயச் சொற்பொழிவு நடைபெற்றது. நல்லாசிரியர் சீனிவாச வரதன் சொற்பொழிவாற்றினார். அதனை பக்தர்கள் ஆர்வமுடன் கேட்டனர்.

மேலும் திருவண்ணாமலையில் வீடுகள் தோறும் பெண்கள் அழகிய கோலங்களை போட்டு மார்கழி மாதத்தை வரவேற்று இருந்தனர். பஜனைக் குழுவினர் இசை வாத்தியங்களை முழங்கியபடி தெருத்தெருவாக சென்று பக்தி பாடல்களை பாடி சென்றனர். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் திரளாக சென்று வழிபட்டனர்.
இன்று அனைத்து பக்தர்களும் கோவிலுக்கு சென்று வந்ததால் மிகவும் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள இந்துக் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன திருவண்ணாமலையை அடுத்த பர்வதமலையில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அங்கு சென்ற பக்தர்கள் மலைகோவிலை பார்த்து வணங்கி விட்டு சென்றனர். பர்வதமலை வந்த பக்தர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள் பக்தர்கள் அன்னதானம் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார் இருந்தது. அந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசுவாமி (வயது 22), விக்னேஷ் (23), அஜித் (21) ஆகியோர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ரோந்து பணியின்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது கஞ்சா பாக்கெட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சாவை பறிமுதல் செய்து வட தண்டலம் கிராமத்தை சேர்ந்த வேலியப்பன் (வயது20), கீழ்புதுபாக்கத்தை சேர்ந்த விகல் (23), கொட நகரை சேர்ந்த கோபி (22), கண்ணியம் நகரை சார்ந்த மணி (28), வெங்கட்ராமன் பேட்டை சேர்ந்த புள்ளிமான் ராஜா (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடநத்தத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (70). முன்னாள் ராணுவ வீரர். இவரது உறவினர் சுரேஷ். 2 பேரும் நேற்று பைக்கில் திருவண்ணாமலை சென்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, வேடநத்தம் கிராமத்திற்கு திரும்பி வந்தனர்.
அப்போது கடம்பை, சிறு கொத்தான் பகுதியில் அம்மன் கோவில் அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் பைக் மீது மோதியது. இதில் சின்னதம்பி, சுரேஷ் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதில் சின்னதம்பி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசியை அடுத்த தெள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். அவரது மனைவி சிவகாமி (வயது 33). இவர், தெள்ளார் ஊராட்சியில் தினக்கூலியாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் வந்தவாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகாமி, அவரது கணவர் மாயக்கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
புதுவணக்கம்பாடி மாரியம்மன் கோவில் எதிரில் சென்றபோது, தெள்ளார் நோக்கி வந்த சரக்கு வாகனமும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டன. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாமி மட்டும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, கூட்டேரிப்பட்டை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் காளிதாஸ் என்பவரை கைது செய்தனர்.
போளூர்:
போளூர் அருகே உள்ள முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான வாலிபருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்து சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாப்பிள்ளை, அவரது தந்தை, சிறுமியின் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் துரைராஜ் நகரில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கலாவதி (வயது56) அரசியல் கட்சி பிரமுகர். இவர்களுக்கு போந்தை என்ற இடத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. அதனை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு அங்கு சென்று விட்டனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
நகை திருட்டு போன வீட்டின் உரிமையாளர் கலாவதி, அரசியல் பிரமுகர் ஆவார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதே பகுதியில் இன்னொரு வீட்டிலும் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் நகை, ரூ.2000 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
இந்த துணிகர திருட்டு தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேங்கிக்கால் பகுதியில் திருடர்கள் வியாபாரம் செய்வது போல் தெரு தெருவாக தினமும் சென்று இடங்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருகிறார்கள் என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்தநிலையில் ஒரே பகுதியில் 2 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எனவே தெருக்களில் மர்மநபர்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும். திருட்டுப்போன நகைகளை மீட்டு தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே நாளில் 2 வீடுகளில் திருட்டு நடைபெற்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






