search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி அடுத்த பையூர் அண்ணாநகர் பகுதியில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    ஆரணி அடுத்த பையூர் அண்ணாநகர் பகுதியில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ள காட்சி.

    ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட ஆரணி பெண்ணின் உறவினர்கள் 6 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

    ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட பெண்ணின் கணவர், மகன், தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    ஆரணி:

    ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருந்து சென்னை வந்த ஆரணி பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    காங்கோ நாட்டில் இருந்து சென்னைக்கு 38 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் மகனுடன் கடந்த 12-ந்தேதி வந்தார். அவர்கள் 3 பேருக்கும் விமான நிலையத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது கணவர் மற்றும் மகனுக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து செய்யாறு சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் கவச உடை அணிந்து அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ஒமைக்ரான் அறிகுறி உள்ளதென கூறப்பட்ட பெண்ணை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    2 அல்லது 3 நாட்களில் அதன் தகவல் தெரியவரும். பின்னரே அந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளதா என்பது தெரியவரும்.

    இதைத் தொடர்ந்து ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட பெண்ணின் கணவர், மகன், தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதன் முடிவுகள் வெளியாகும் வரை, அவர்கள் அனைவரும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் அவர்களை கண்காணிக்கும் பணியில் மருத்துவக் குழுவினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த தெருவில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

    Next Story
    ×