என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    கண்ணமங்கலம் அருகே நடந்த திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலத்தை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் நகைகள் திருட்டுப்போனது. இதுகுறித்து கண்மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் கேசவன் (வயது 21) என்பவரை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை அருகே ஏரியில் கூலி தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள கிளியாப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட குண்ணுமுறிஞ்சி இரட்டை ஏரியில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் களஸ்தம்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி காமராஜ் (வயது 50) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை ஏரிக்கரையில் சிலர் பார்த்ததாகவும், குடிபோதையில் தவறி ஏரியில் விழுந்து இறந்து இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஆரணி:

    ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சங்கர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொந்தரவு இருந்து வந்தது.

    அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவு நேற்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீப கொப்பரையிலிருந்து சேமிக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்று வந்தது.

    இதன் நிறைவாக நேற்று மாலை நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி - அம்மன் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவில் ராஜ கோபுரம் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று அதிகாலை நடராஜர் -சிவகாமி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதன்பின்னர் ராகுகாலம் தொடங்கியதால் 7.30 முதல் 9 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற ஆருத்ரா சிறப்பு வழிபாடுகள் நிறுத்தப்பட்டது.ஆயிரங்கால் மண்டபத்தின் நடை மூடப்பட்டது.

    இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    இதனால் தொடர்ந்து நடைபெறும் அலங்கார தீபாராதனையை காண உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபம் முன்பு 9மணிவரை காத்திருந்தனர். ஏராளமான.போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9 மணிக்கு மீண்டும் ஆயிரங்கால் மண்டபத்தின் நடை திறக்கப்பட்டு நடராஜர் -சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளின் போது மாணிக்கவாசகர் பாடல்கள் ஓதுவார்கள் மூலம் பாடப்பட்டது.

    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகா தீப கொப்பரையிலிருந்து சேமிக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    அங்கு வழிபாடுகள் நிறைவு பெற்றதும் நடராஜர் சிவகாமியம்மன் நடனமாடி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது பஞ்ச வாத்தியங்கள் முழங்க பட்டன.

    பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் -சிவகாமி அம்மன் மாணிக்கவாசகர் மாட வீதியில் உலா வந்தனர்.அங்கு திரண்ட பக்தர்கள் சுவாமி -அம்மனுக்கு புத்தாடைகள் வழங்கியும், அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 8.15 மணிக்கு தொடங்கி நேற்று காலை 10.22 மணிக்கு நிறைவடைந்தது. இந்த பவுர்ணமிக்கும் கொரோனா காரணமாக பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலையில் இருந்து நேற்று காலை வரை போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் ஏராளமான பக்தர்கள் தடையை மீறி மாற்றுப் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று முன்தினம் கிரிவலப்பாதையில் சென்றவர்களை தடுத்த போலீசாரிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். தொடர்ந்து நேற்றும் ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்றனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுத் தரிசனம் மட்டுமின்றி, கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொதுத் தரிசனம் வழியில் சென்றவர்கள் நீண்ட நேரமானதால் குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 48 ஆயிரத்து 137 பேருக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 23 ஆயிரத்து 6 பேருக்கும் என மாவட்டத்தில் 71 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாரத்திற்கு ஒரு நாள் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது. அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 48 ஆயிரத்து 137 பேருக்கும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 23 ஆயிரத்து 6 பேருக்கும் என மாவட்டத்தில் 71 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    சேத்துப்பட்டில் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் கல்லூரி மாணவ மாணவிகள் செஞ்சி சாலையில் திடீர் என்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் தினந்தோறும் காலையில் சேத்துப்பட்டில் இருந்து அரசு பஸ் மூலம் திருவண்ணாமலை கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இவர்களுக்கு காலையில் 422 வழித்தடம் எண் கொண்ட திருவண்ணாமலை செல்லும் அரசுப் பஸ் சரியான நேரத்தில் வருவதில்லை மேலும் சில நாட்கள் மிகவும் தாமதமாக வருகிறது.

    சில நாட்கள் பஸ் வருவதே இல்லை என்று பல நாட்களாக குற்றம்சாட்டி வந்தனர். இதனால் கல்லூரிக்கு செல்வது நேரம் தாமதம் ஆகிறது.

    இன்று காலையில் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ மாணவிகள் செஞ்சி சாலையில் திடீர் என்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ- மாணவிகளிடையே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பஸ் சரியான நேரத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனர்.

    இதையடுத்து மாணவ -மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சரியான நேரத்திற்கு பஸ்சை இயக்க வேண்டும். மேலும் சேத்துப்பட்டு திருவண்ணாமலை வழித்தடத்தில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் அனைவருமே அரசு கலைக்கல்லூரி நம்பித்தான் படித்து வருகிறோம். எங்களுக்கு சரியான நேரத்தில் பஸ் வர வேண்டும். மேலும் அதிகப்படியான மாணவர்கள் உள்ளதால் பஸ்சில் இடவசதி பற்றாக்குறையால் தொங்கியபடி செல்லும் அவலநிலை உள்ளது.

    எங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்களை கல்லூரி நேரத்தில் இயக்க அரசு முன்வர வேண்டும். மேலும் சேத்துப்பட்டில் பணிமனை இருந்தும் இந்த அவல நிலை உள்ளதால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பஸ் சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றனர்.

    மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    பையூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது பெண். இவர் கடந்த 15-ந்தேதி காங்கோ நாட்டில் இருந்து தனது கணவர் மற்றும் மகனுடன் சென்னை விமானம் நிலையத்திற்கு வந்தார்.

    அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதியானது. கணவர் மற்றும் மகனுக்கு தொற்று இல்லை. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்தப்பெண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 15 பேருக்கு நேற்று முன்தினம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பையூர் கிராமத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து செய்யாறு சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பையூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பையூர் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. பையூர் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே ஆத்தூரை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா (38), இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் இருந்த சரவணன் விஷம் குடித்து விட்டார். இதையறிந்த அவரது மனைவி அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தூசி அருகே கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் குளத்தங்கரை தெருவைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரின் மகன் தினேஷ் (வயது 23). இவர் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தூசி பஸ் நிறுத்தம் அருகில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பின்னால் சென்னையில் இருந்து அழிஞ்சல்பட்டு கிராமத்தை நோக்கி வந்த ஒரு கன்டெய்னர் லாரி திடீரென தினேஷ் மீது மோதியது. அதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் தினேஷ் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வழக்கமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்கின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமியில் இன்றும், நாளையும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதனை மீறி பக்தர்கள் அதிகாலை முதல் இன்று கிரிவலம் வருகின்றனர். கிரிவலப்பாதையில் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்த போதிலும் மாற்று வழியில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகளவில் வருகை தரும் பக்தர்கள் கிரிவலம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். போலீசார் முயன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க முடியவில்லை.

    வழக்கமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்கின்றனர். சில பக்தர்கள் மாட வீதிகளை வலம் வந்து விட்டு சென்று விடுகின்றனர்.

    பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொது தரிசனத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் வருகை காரணமாக திருவண்ணாமலையில் வியாபாரம் களைகட்டியுள்ளது.
    செங்கம் அருகே பஸ்சில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ்சில் குட்கா பான்மசாலா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து தனிப்படை போலீசார் கோணாகுட்டை அருகே அரசு பஸ்சை மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் பயணித்த திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் (வயது 55) என்பவர் சோதனை செய்தபோது 32000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பான் மசாலா பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை செங்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்து ரமேசை போலீசார் கைது செய்தனர்.

    ×