என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணி அருகே குடும்ப தகராறில் தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 50), தச்சுத்தொழிலாளி. இவருக்கும் மனைவி சிவசங்கரிக்கும் இடையே வேலையில்லாமல் இருந்து வந்ததால் குடும்பத்தை நடத்த முடியாமல் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வேடியப்பன் நேற்று காலை விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக, தெரிவித்தனர்.

    இதுகுறித்து மனைவி சிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த வேடியப்பனுக்கு சரஸ்வதி, பவித்ரா என்ற 2 மகளும், அருண்குமார் என்ற மகனும் உள்ளனர்.
    ஆரணி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் அருகே கடந்த 21-ந்தேதி இரவு 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்தவரும் வாத்து மேய்க்கும் தொழிலாளியின் மகனுமான அற்புதராஜ் (வயது 19) என்பவரும், மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அற்புதராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் கார்த்திக் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    வெம்பாக்கம் தாலுகா பெருங்கோட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், நெசவுத்தொழிலாளி. இவரின் மனைவி அஞ்சலை (வயது 39). இவர், கடந்தசில நாட்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அஞ்சலை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரி அன்னபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு முதல்கட்டமாக தரமாக தயாரிக்கப்பட்ட 1000 முக கவசங்கள் வழங்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    உலகம் முழுவதும் கொரானா வைரஸ் உருமாறி 3-வது அலையாக ஓமைக்ரான் வைரஸ் பரவிவருகிறது. தமிழகத்திலும் பரவத்தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தப் பிரச்சினைக்கு அரசு மட்டும் தீர்வு காண முடியாது .சமூக அக்கறை கொண்ட பலரின் உதவியும் தேவைப்படுகிறது.

    இதனைப் புரிந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் செயல்படும் ஒரு அரசு பள்ளியில் பகுதிநேர உடல் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் எஸ்.குணசீலன் என்பவர் அரசு பள்ளி மாணவிகளுக்கு 3000 முகக்கவசங்கள் வழங்க முடிவு செய்துள்ளார்.

    அதன்படி திருவண்ணாமலை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு முதல்கட்டமாக தரமாக தயாரிக்கப்பட்ட 1000 முக கவசங்களை நேற்று வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் கலந்து கொண்டு மாணவிகளுக்கு முக கவசங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வக்கீல் ஷோபனா ராணி, தொழிலதிபர் கே.சுரேஷ், பொறியாளர் ஆர்.கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியை கல்பனா செய்திருந்தார்.
    வெம்பாக்கம் அருகே ஆசிட் கேன் வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உக்கம் பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 29). இவர் ஆக்கூர் கூட்ரோட்டில் சிமெண்டு ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மகாஜனபக்கம் காலனியை சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகன் சுகுமார் (28). என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மதியம் சுமார் 12 மணி அளவில் அங்குள்ள சுவற்றின் ஓரம் பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆசிட் கேனை திறக்க முயன்றார். முடியாததால் சிறிய கத்தியால் கேனை அறுக்க முயன்றார்.

    அப்போது திடீரென ஆசிட் கேன் வெடித்து சிதறியது. இதில் சுகுமார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அவருடைய உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதுபற்றி தகவலறிந்ததும் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு உடல்சிதறி இறந்து கிடந்த சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் உள்பட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது வடுகசாத்து கிராமத்தில் அரசு பள்ளி எதிரே உள்ள யாதவர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 41) என்பவருடைய கடையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் செல்வகுமார், கடையில் பணிபுரிந்த கல்லூரி மாணவன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் கிராமம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 40), இவர் பட்டுத்தறி நெய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி. இவருக்கு அடிக்கடி உடல் நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை அளித்தும் சரியாகாததால் மனமுடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாலசுந்தரம் மோரணம்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாரி அன்ன பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆரணியில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 150 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 13-ந்தேதி காங்கோ நாட்டிலிருந்து வந்த ஆரணி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மேலும் அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தற்போது அவரது தந்தைக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    2 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவர்கள் ராணிப்பேட்டை பகுதிக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர்.

    ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 150 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களை சுகாதார குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

    பரிசோதனை முடிவில் மேலும் யாருக்கும் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும். 
    கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா முடிவடைந்ததும் மகா தீப கொப்பரையில் சேமிக்கப்பட்ட தீபம் பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்படும். மேலும் நெய் காணிக்கை வழங்கியவர்களுக்கு இலவசமாக தீப மை வழங்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் பக்தர்களுக்கு காட்சி அளித்தது. அதன் பின்னர் பரிகார பூஜைகள் செய்து தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் ஆருத்ரா தரிசனத்தன்று தீப மையால் நடராஜருக்கு திலகமிட்டு பக்தர்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள தீப மை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பேக்கிங் செய்யப்பட்ட தீப மை இன்று காலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. ரூ.10 க்கு விற்பனை செய்யப்படும் இந்த தீப மையை வெளியூர் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உள்ளூர் பக்தர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாங்கி சென்றனர்.

    கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் தீப மை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த தீப மையை வைத்துக் கொள்வதால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    தூசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அலெக்ஸ் (வயது 25). செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி (23) என்ற மனைவியும், ஒரு வயதில் ஷர்மிதா என்ற குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஷிப்ட் வேலை முடித்துவிட்டு அலெக்ஸ் மோட்டார்சைக்கிளில் இரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தூசி அருகே புதுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் தலையில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் அனைத்துப் போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
    ஆரணி:

    ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் மதனரசன் தலைமையில் களப்பணியாளர்கள் கவச உடை அணிந்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரூபன் குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்பட அனைத்துப் போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    தேசூர் அருகே குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    தேசூரை அடுத்த உடையான்தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் சிவா (வயது 31). இவரின் மனைவி ஜோதி (25). இவர்களுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். 15-ந்தேதி லட்சுமி நகர் அருகே உள்ள குளத்தில் சிவா, அவரின் நண்பர்களான சிவசங்கரன், சதீஷ் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சிவா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவர் நீந்தி கரையேற முடியாமல் தவித்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார். அவரை, சக நண்பர்கள் காப்பாற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×