என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    மின்துறையில் உள்ள 52 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என மின்துறை அனைத்து பொது தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு மின் துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு திருவண்ணாமலையை அடுத்த வங்கிகளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

     சங்கத் தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் எல்லப்பன் வரவேற்று பேசினார். 

    மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜுபிடர் ரவி, சிங்க தமிழச்சி, ரமேஷ் குட்டி, சந்திரசேகரன், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    மாநாட்டில் உழைக்கும் மக்களை கடுமையாக பாதித்துள்ள பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும். தமிழக அரசும் மின் வாரியமும் மின்சார ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

    காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கொளத்தூரில் காளை விடும் திருவிழா அனுமதியின்றி நடத்தியதாக விழாக்குழுவினர் ராஜேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மார்கழி மாதம் அமாவாசையில் கிராம பொதுமக்கள் காளை விடும் திருவிழா நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு காளை விடும் திருவிழா நடத்த அனுமதியில்லை. இந்த நிலையில் நேற்று கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கொளத்தூர் கிராமத்தில் அனுமதியின்றி காளைவிடும் திருவிழா நடத்தினர்.

    இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.

    அப்போது காளைகள் ஓடும்போது தடுத்து நிறுத்திய இளைஞர்களை காளைகள் முட்டியதில் ஒண்ணுபுரம் கிருஷ்ணமூர்த்தி (வயது65), களம்பூர் ஜோதிவாசன் (28) கோபிநாத் (18) நடுக்குப்பம் சுப்பிரமணி (17) உள்ப சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    நெஞ்சை பதைபதைக்கும் சம்பவமாக காளை விடும் திருவிழாவின்போது மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற அதே ஊரை சேர்ந்த ராஜேஷ், அவரது மனைவி ‌ஷர்மிளா ஆகியோர் மீது காளை வேகமாக மோதி முட்டித்தள்ளியது.

    இதில் ராஜேஷ் லேசான காயங்களுடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் கொளத்தூரில் காளை விடும்  திருவிழா அனுமதியின்றி நடத்தியதாக விழாக்குழுவினர் ராஜேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    செங்கம் அருகே 8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தான்.
    செங்கம்:

    செங்கம் அடுத்த நாகப்பாடியை சேர்ந்த ஏழுமலை (37) அவரது மனைவியுடன் திருப்பூரில் பணி செய்து வருகிறார். 
    இவர்களது மகன் பிரதீஷ் (8) நாகப்பாடியில் உள்ள பள்ளியில் 4&ம் வகுப்பு படித்து வருகிறார்.
     
    ஏழுமலை திருப்பூரில் பணி செய்து வருவதால் பிரதீஷை அவரது பாட்டி பானுமதியிடம் (65) விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பானுமதி கூலி வேலைக்காக சென்றார். 

    அப்போது பானுமதி உடன் சென்ற பிரதீஷ் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு விவசாய நிலத்தின் வழியாக வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.
     
    இதில் பிரதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீஷின் உடலை மீட்டு புதுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    புதுப்பாளையம் போலீசார் பிரதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் புத்தாண்டில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பல நாட் களாக மழை பெய்யவில்லை. மார்கழி மாதத்தை முன்னிட்டு கடும் குளிர் வாட்டி வந்தது.
    இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேற்றும் இன்றும் மழை பெய்து வருகிறது.

    விட்டு விட்டு பெய்து வரும் இந்த சாரல் மழை பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புத்தாண்டில் மழை பெய்துள்ளதால் இந்த ஆண்டு வளமான ஆண்டாக இருக்கும் என்று அனைத்து தரப்பு மக்களும் கருதுகின்றனர்.

    இந்த சாரல் மழை பெய்யும் போது பொதுமக்கள் சாலை ஓரங்களில் ஒதுங்கி நின்றுவிட்டு மழை நின்றதும் தங்களது பணிகளைச் செய்ய சென்றனர். சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டனர்.
     
     திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக செய்யாறில் 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதேபோல் நேற்றும் பரவலாக மழை பெய்து. திருவண்ணாமலையில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது விட்டு விட்டு மழை பெய்தது. அதுமட்டுமின்றி குளிர்ந்த காற்றும் வீசியது.

    வந்தவாசியில் நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை 2 மணிநேரம் மழை பெய்தது. வந்தவாசி மற்றும் கொடுங்காலூர், மருதாடு, சென்னாவரம், சேதராகுப்பம், பாதிரி, சளுக்கை, தெள்ளார், மழையூர், வெளியம்பாக்கம், அம்மையப்பட்டு, வெண்குன்றம், மங்கநல்லூர், பிருதூர், வங்காரம் ஆகிய கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக செய்யாறில் 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆரணி- 33, வெம்பாக்கம்- 23, சேத்துப்பட்டு- 16.6, கலசபாக்கம்- 16, கீழ்பென்னாத்தூர்- 12.8, போளூர்- 8.6, வந்தவாசி- 8, தண்டராம்பட்டு- 6, திருவண்ணாமலை- 5.2, ஜமுனாமரத்தூர்- 5, செங்கம்- 4.2.
    வேட்டவலத்தில் தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகளை கொள்ளை கும்பல் திருடிச் சென்றுள்ளனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலம் தம்புகாரன் தெருவைச் சேர்ந்தவர் உஷா (வயது 52). இவர் அண்ணாநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் மருமகள் ஞானசவுந்தரி, பேத்தி ரியா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    உஷா பள்ளி விடுமுறை காரணமாக கடந்த 27ஆம் தேதி காலை சிதம்பரத்தில் உள்ள தனது மகள் சௌமியா வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே ஞான சௌந்தரி தனது மகளை அழைத்துக் கொண்டு ஆங்குணம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் உஷா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உஷாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனைக் கேட்ட உஷா அதிர்ச்சி அடைந்து சிதம்பரத்திலிருந்து ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அவரது மருமகளுக்கு சொந்தமான 7 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து உஷா வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லக்ஷ்மிபதி எஸ்.ஐ. ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் 36, மேசை தராசுகள் 11, எடைக்கற்கள் 9, நீட்டல் அளவைகள் 5, ஊற்றல் அளவைகள் 3 என ஆக மொத்தம் 64 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆரணி:

    தமிழக தொழிலாளர் ஆணையர் அப்துல் ஆனந்த் உத்தரவின்படி வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் தி.புனிதவதி வழிகாட்டுதலின் படியும் திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சி.மீனாட்சி தலைமையில் ஆரணியில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோட்டில் உள்ள மளிகைக் கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகளில் பயன்படுத்தப்படுகின்ற தராசுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் 36, மேசை தராசுகள் 11, எடைக்கற்கள் 9, நீட்டல் அளவைகள் 5, ஊற்றல் அளவைகள் 3 என ஆக மொத்தம் 64 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அப்போது திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ந.பிரகாஷ், ஆரணி தொழிலாளர் உதவி ஆய்வாளர் த.சாந்தி, ஆரணி முத்திரை ஆய்வாளர் பா.சிவகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆ.அத்திப்பழம், மு.தனலட்சுமி, சுபாஷ் சந்தர் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.

    உதவி ஆணையர் சி.மீனாட்சி கூறுகையில் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் தராசுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். முத்திரையிட்டு அதற்கான சான்றிதழ் பார்வையில் தெரியும் படி கட்டி வைக்க வேண்டும், கட்டி வைக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், என எச்சரித்தார்.
    கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது மகள் பூமிகா (வயது 19). இவர், கடந்த 25-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கம் சுற்றுவட்ட கிராமப்பகுதிகளில் சாராய விற்பனையை தடுப்பதற்காக போலீசார் ரோந்துப்பணியி்ல் ஈடுபட்டிருந்தனர் செங்கம் அடுத்துள்ள பி.எல்.தண்டா பகுதியில் ரோந்து சென்றபோது சாராயம் விற்பனை செய்த அஞ்சலா (வயது 45), வெங்கடேசன் (43), சங்கர் (48), தனுசு (40) உள்ளிட்ட நபர்களை அவர்கள் கைது செய்தனர்.
    ஆரணி அருகே பூட்டிய வீட்டில் 19 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன், கூலித்தொழிலாளி. இவர், கல்லேரிப்பட்டில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், கல்பனா, சங்கீதா என்ற இரு மகள்களும் உள்ளனர். கல்பனாவுக்கு திருமணமாகி வந்தவாசியில் வசித்து வருகிறார். சங்கீதா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைய மகள் சங்கீதாவை பார்ப்பதற்காக காமாட்சி சென்னை சென்றுள்ளார். தருமன் தினமும் அரிசி ஆலைக்கு வேலைக்கு போகும்போது, வீட்டுக்கு அருகில் உள்ள செங்கல் இடுக்கில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கம் ேபால் வைக்கும் இடத்தில் ைவத்து விட்டு தருமன் வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் நேற்று வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவுகள் பூட்டிய நிலையிலேயே இருந்தது.

    அவர் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் ைவத்திருந்த 19 பவுன் நகையை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்திருப்பது ெதரிய வந்தது.

    எனினும், மனைவி காமாட்சி வந்து பார்த்த பிறகு தான் நகைகள் இருக்கிறதா, இல்லையா? என விவரம் தெரிய வரும், என ஆரணி தாலுகா போலீசில் தருமன் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணாபுரம் அருகே நீர் நிரம்பி கடல்போல் காட்சியளித்த குங்கிலியநத்தம் ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    வாணாபுரம்:

    வாணாபுரத்தை மையமாகக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக உள்ளன. ஏரிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். ஏரிகள், குளம், குட்டைகளில் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலத்தில் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    வாணாபுரம் அருகில் உள்ள குங்கிலியநத்தம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஏரிஅண்மையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது. அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வளர்ப்பதற்காக குத்தகைக்கு விடப்பட்டது. ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஏரி முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. கடந்த 10 நாட்களுக்குள் தண்ணீர் முழுவதும் வடிந்து ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. ஆங்காங்கே உள்ள பள்ளத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதைப் பயன்படுத்தி கோடைக்காலத்தில் அதிகளவில் விவசாயம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ள நிலையில் தற்போது குங்கிலியநத்தம் ஏரியில் இருந்து தண்ணீர் முற்றிலும் ெவளியேறி விட்டதால், குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார். எதிர்வரும் காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாத நிலை உருவாகி விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும். ஏரிக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். தற்போது பவுர்ணமி மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பொது தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ×