என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார் .துணைத்தலைவர் ரமணன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், எல்.எஸ். லட்சுமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவண்ணாமலை உட்பட்ட கிராமப் பகுதி களில் ஒன்றிய பொது நிதி மற்றும் மாநில நிதிக்குழு மானிய நிதி ஆகியவற்றின் மூலம் அடிப்படை வசதிகளை செய்வது எனவும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கான பணிகளை கண்டறிந்து அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் கொரோனா 3-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றியத்துக்கு உட்பட்ட 69கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக நிறைவேற்ற அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    கிராம பகுதிகளிலும் பொதுமக்கள் முக கவசம் அணிவதையும், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதையும், அவசியமின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஒருங்கிணைத்து பொதுமக்கள் பங்கேற்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலையில்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளி பதிவுத்தாரர்களுக்கு பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி.வகுப்பினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், பி.சி.மற்றும் எம்.பிசி, இதர வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

    மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 72 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை
    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் முழுவதும் ரூ.600ம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    எனவே உரிய தகுதியுள்ள நபர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அளிக்கலாம். அல்லது வேலை வாய்ப்புத் துறையின் www.tnvelaivaaippu.gov.in- என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்தும் அளிக்கலாம்.

    அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் உரிய சான்று நகல்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அடுத்த மாதம் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ.1.78 கோடி வசூலானது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    வெளிமாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் வருகை தருவார்கள்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

    இதனால் ஒவ்வொரு மாதமும் மாதம் ரூ.1கோடிக்கு மேல் இருக்கும் உண்டியல் வசூல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதியாக குறைந்தது. 

    கடந்த கார்த்திகை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல 2 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கார்த்திகை மாத உண்டியல் வசூல்ரூ.1கோடியை தாண்டியது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெளிமாநில அய்யப்ப பக்தர்கள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர். 

    இதைத்தொடர்ந்து மார்கழி மாத பவுர்ணமி, முடிவடைந்த நிலையில் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. காணிக்கை பணத்தை கோவில் ஊழியர்கள் மற்றும் மகளிர் குழு பெண்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

    இதில் பக்தர்கள் ரூ 1 கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 38ரொக்கம், 363 கிராம் தங்கம், 1,109 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்திஇருப்பது தெரியவந்தது.

    உண்டியல் திறப்பின் போது கோவில் இணை ஆணையர் அசோக்குமார், மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி, கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் உடனிருந்தனர்.
    மனைவியை கணவரை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் கஸ்தம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் ராஜா (வயது 32) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவுதமி (28) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த கவுதமியின் தாய் தனது மகள் கஷ்டப்படக்கூடாது என்று வெளிநாட்டில் வேலை பார்த்ததில் கிடைத்த ரூ.3 லட்சத்தை கவுதமிக்கு அனுப்பியுள்ளார்.

    இதுபற்றி தெரியவந்ததும் ராஜா ரூ.3 லட்சத்தையும் தன்னிடமே தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு கவுதமி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்ற கவுதமி வீடு திரும்பவில்லை. அவர் குடும்ப தகராறு காரணமாக மாயமாகி விட்டதாக கணவர் ராஜா தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாயமான கவுதமி கரும்புத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எரிந்த நிலையில் கிடந்த கவுதமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மனைவியை ராஜா அடித்து கொலை செய்து கரும்பு தோட்டத்தில் வைத்து எரித்தது தெரியவந்தது.

    ராஜா வாக்குமூலத்தில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    மனைவியை கணவரை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் கஸ்தம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆரணியில் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பரவியதால் பள்ளி மூடப்பட்டது.
    ஆரணி:-

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ- மாணவிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். 

    தலைமையாசிரியர் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது.

    ஆனால் 10 மற்றும் 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    இதையடுத்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9,10 மற்றும் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தபட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று 9-ம் வகுப்பு படிக்கும் 150 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை பள்ளியிலேயே எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசோதனையின் முடிவில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையொடுத்து பள்ளி மாணவ மாணவிகளை உடனடியாக 2 நாட்கள் விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர். 

    ஆரணியில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு 14 மணிநேரம் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது.
    திருவண்ணாமலை:


    திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ குல நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் 18-வது ஆண்டாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நேற்று நாதஸ்வர இசை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை 3 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை விடிய விடிய இடைவிடாத நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து 14 மணி நேரம் நடைபெற்ற இந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள், தவில் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களின் இசை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.

    இதுபற்றி  சங்க நிர்வாகிகள் கூறும்போது:-

    இசைக் கடவுள் சரஸ்வதி தேவியை மகிழ்விக்கும்  வகையில்  ஒவ்வொரு ஆண்டும் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றோம். 

    இந்த ஆண்டு 18-வது ஆண்டாக இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இதன் மூலம் மக்கள் எங்களது இசைத் திறனை அறிய முடிகிறது. 

    தற்போது பொதுமக்கள் மங்கல இசையான நாதஸ்வரத்தை அதிகளவு நாடாமல் பிற இசைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    இதனால் பாரம்பரிய கலை நலிவடைந்து வருகிறது. செண்டை மேளம், தப்பாட்டம் போன்றவைகளை விட இனிமையானது நாதஸ்வர இசை ஆகும். இதனை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இசை விழா நடத்தி வருகிறோம்.

    தமிழகத்தில் கொரோனா காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    நாதஸ்வர கலைஞர்கள் குடும்பமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உலகம் முழுவதும் வாழும் மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டி எங்கள் இசையை காணிக்கையாக்கி பிரார்த்தனை செய்து உள்ளோம் என்றனர்.

    ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்.
    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் சுதர்சன், உதயராஜா ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் அருணாசலேஸ்வரர் கோவிலின் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஒரு ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்.

    முருகர் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு, தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து "சிகிவாகனராக" நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்தபுராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று "சிகிவாகனர்" என்பது குறிப்பிடதகுந்தது.

    முருகரின் வலப்புறம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை.

    இடப்புறம் தெய்வானையின் அருகே சேடிப்பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது. அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது.

    அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பெற்றுள்ள சாமரம் வீசும் சேடிப்பெண் மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகிறது. அதற்கு மேல் வலப்புறமும் ஓவியம் சேதாரமாகி உள்ளது.இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு, கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.

    இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோவிலின் நாயக்கர்கால ஓவியத்துடனும், ஆந்திர மாநிலம் லேபாஷி வீரபத்திரர் கோவில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர்கால ஓவியமாகக் கருதலாம்.

    திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். எனவே இவ்ஓவியத்தை 16-ம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஓட்டியதாக இதனைக் கருதலாம்.

    400 ஆண்டு பழமையான இவ்ஓவியத்தை சிதைவிலிருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து இதனை புனரமைத்து இவ்ஓவியத்தைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    தமிழர் பண்டிகை என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இதையொட்டி திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

    கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார்.துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், எஸ். அம்பேத்குமார், ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:-
     
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ 7 லட்சத்து 76 ஆயிரத்து 391 குடும்பங்களுக்கு 1,627 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

    இந்த பரிசு தொகுப்பு எல்லா குடும்பங்களுக்கும் சென்று சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பணியை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றார்.
    கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் முக்கியமான நிகழ்வாகும். இந்த ஆண்டுக்கான உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

    இதையொட்டி விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் உற்சவ மூர்த்திகள் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். பின்னர் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது மங்கல இசை முழங்கப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொண்டனர்.

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கொடியேற்றம் நடந்தபோது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர். சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அய்யப்ப பக்தர்கள், செவ்வாடை பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் 20 ரூபாய் தரிசன கட்டணத்தில் அனுமதிக்கப்படவில்லை, ரூ.50 கட்டணத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் பொது தரிசனம் வழியாகவும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
    ஆரணியில் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணி டவுன் ஆரணி, போளூர் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பகுதியில் சாலையின் குறுக்கே அகலம் குறைவாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் தடுப்பு சுவர் அமைக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்றதால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ்  மற்றும் போலீசார்  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை முதலிடம் பிடித்துள்ளது.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் 10,11,12-ம் வகுப்புகளில் படிக்கும் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை முதலிடம் பிடித்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 544 பள்ளிகள், 17 பாலிடெக்னிக், 22 ஐ.டி.ஐ.களில் 15 முதல் 18 வயது வரையுள்ளவர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். இவர்களில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து இலக்கில் 19 சதவீதம் கடந்த நிலையில் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    விரைவில் 100 சதவீத இலக்கை அடைய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்காக சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.
    திருவண்ணாமலை:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு கோவில் வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கும் வகையில் புதிதாக சிகிச்சை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

    காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ மையத்தை தொடங்கி வைத்தார். 

    இதையொட்டி திருவண்ணாமலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி,மு.பெ.கிரி எம்.எல்.ஏ., டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் பேசும்போது, பக்தர்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட மருத்துவ மைய திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். சிகிச்சை மையத்தில் 2 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ×