என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நடந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சி.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு 14 மணிநேரம் நடந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு 14 மணிநேரம் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ குல நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் 18-வது ஆண்டாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நேற்று நாதஸ்வர இசை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நேற்று மாலை 3 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை விடிய விடிய இடைவிடாத நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 14 மணி நேரம் நடைபெற்ற இந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள், தவில் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களின் இசை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.
இதுபற்றி சங்க நிர்வாகிகள் கூறும்போது:-
இசைக் கடவுள் சரஸ்வதி தேவியை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றோம்.
இந்த ஆண்டு 18-வது ஆண்டாக இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இதன் மூலம் மக்கள் எங்களது இசைத் திறனை அறிய முடிகிறது.
தற்போது பொதுமக்கள் மங்கல இசையான நாதஸ்வரத்தை அதிகளவு நாடாமல் பிற இசைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் பாரம்பரிய கலை நலிவடைந்து வருகிறது. செண்டை மேளம், தப்பாட்டம் போன்றவைகளை விட இனிமையானது நாதஸ்வர இசை ஆகும். இதனை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இசை விழா நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாதஸ்வர கலைஞர்கள் குடும்பமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உலகம் முழுவதும் வாழும் மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டி எங்கள் இசையை காணிக்கையாக்கி பிரார்த்தனை செய்து உள்ளோம் என்றனர்.
Next Story






