என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டில் கல்லூரி மாணவிகள் திடீர் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினந்தோறும் காலையில் சேத்துப்பட்டில் இருந்து அரசு பஸ் மூலம் திருவண்ணாமலை கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இவர்களுக்கு காலையில் 422 வழித்தடம் எண் கொண்ட திருவண்ணாமலை செல்லும் அரசுப் பஸ் சரியான நேரத்தில் வருவதில்லை மேலும் சில நாட்கள் மிகவும் தாமதமாக வருகிறது.
சில நாட்கள் பஸ் வருவதே இல்லை என்று பல நாட்களாக குற்றம்சாட்டி வந்தனர். இதனால் கல்லூரிக்கு செல்வது நேரம் தாமதம் ஆகிறது.
இன்று காலையில் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ மாணவிகள் செஞ்சி சாலையில் திடீர் என்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ- மாணவிகளிடையே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பஸ் சரியான நேரத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனர்.
இதையடுத்து மாணவ -மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சரியான நேரத்திற்கு பஸ்சை இயக்க வேண்டும். மேலும் சேத்துப்பட்டு திருவண்ணாமலை வழித்தடத்தில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் அனைவருமே அரசு கலைக்கல்லூரி நம்பித்தான் படித்து வருகிறோம். எங்களுக்கு சரியான நேரத்தில் பஸ் வர வேண்டும். மேலும் அதிகப்படியான மாணவர்கள் உள்ளதால் பஸ்சில் இடவசதி பற்றாக்குறையால் தொங்கியபடி செல்லும் அவலநிலை உள்ளது.
எங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்களை கல்லூரி நேரத்தில் இயக்க அரசு முன்வர வேண்டும். மேலும் சேத்துப்பட்டில் பணிமனை இருந்தும் இந்த அவல நிலை உள்ளதால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பஸ் சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றனர்.
மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.






