என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆரணியில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா

    பையூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது பெண். இவர் கடந்த 15-ந்தேதி காங்கோ நாட்டில் இருந்து தனது கணவர் மற்றும் மகனுடன் சென்னை விமானம் நிலையத்திற்கு வந்தார்.

    அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதியானது. கணவர் மற்றும் மகனுக்கு தொற்று இல்லை. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்தப்பெண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 15 பேருக்கு நேற்று முன்தினம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

    இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பையூர் கிராமத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து செய்யாறு சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பையூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பையூர் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் அமைக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளித்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. பையூர் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×