என் மலர்
திருவள்ளூர்
- சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சூரத் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
- திருவள்ளூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சூரத் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வெங்கடேசன், ஏகாட்டூர் ஆனந்தன், மோகன்தாஸ், திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஜான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வேப்பம்பட்டு:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது30). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஜெபராஜ் இன்று காலை வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்னை மார்க்கத்தில் உள்ள தண்டவாளம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது ஒரு கால் மற்றும் தலையில் மட்டும் பலத்த காயம் உள்ளது. எனவே மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அவருடன் மோதலில் உள்ளவர்கள் யார்? யார்? கடைசியாக யாருடன் சென்றார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.
- வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம் ஆகிய 3 இடங்களில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள், நோயாளிகள், முதியவர்கள், ஊன முற்றவர்கள், ரெயில் பயணிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை- அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.
இதன் காரணமாக திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.
இதனால், வேப்பம்பட்டு பகுதியில் இருந்து பெருமாள்பட்டு, அயத்தூர், சிவன்வாயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், ரெயில்கள் மற்றும் பஸ்கள் உள்ளிட்டவை மூலம் குறித்த நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணியிடங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக ரெயில்வே கேட் பாதை அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த 2009 - 2010-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்தது.
இதைத்தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட் பாதையின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன.
ரெயில்வே கடவுப் பாதையின் மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது.
பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வேப்பம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
அந்த வழக்கு விசாரணை அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மேம்பால பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கை வாபஸ் பெற்றனர். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.
இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது.
இப்படி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணி முழுமை பெறாமல் பாதியாக அந்தரத்தில் நிற்கிறது.
இதேபோல் செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டே அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணியை 2 ஆண்டுக்குள் ரெயில்வே நிர்வாகம் முடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மாநில நெடுஞ்சாலைத் துறையால் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அப்பணியில் ரெயில்வே பாதையின் ஒரு புறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்தது. மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலத்தின் உரிமையாளர்கள் கையகப்படுத்தப்படும் தங்கள் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வந்தும் நெடுஞ்சாலைத் துறை இன்னும் மேம்பால பணியை தொடங்காமல் உள்ளது.
இதே போல் பட்டாபிராம் வழியாக சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2010-11-ம் ஆண்டு ரூ.33 கோடி செலவில் நான்கு வழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது.
இதற்கிடையே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனால் ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை இந்த திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது. இதன்படி திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.
தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. பட்டாபிராம் காவல் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
இதனால் வாகனங்கள் சுமார் 10 கி.மீ. தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் மற்றும் பயண நேரமும் அதிகரிக்கிறது. ஆண்டுகள் உருண்டோடினாலும் மேம்பால பணி இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
எனவே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
- கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பஜார், வேளாளர் தெருவில் அரிசி கடை நடத்தி வருபவர் சுரேஷ். இவர் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடை மூடிவிட்டு சென்றார்.
காலையில் கடையில் வேலை செய்து வரும் முருகன் என்பவர் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கடை உரிமையாளர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- மொட்டைமாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளிவழியாக 2-வது குழந்தை சியோன் வெளியே வந்தான்.
- மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
மாதவரம் நேருநகர், பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீட்டின் 3-வது மாடியில் மேல் தளத்தில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி பூஜா. இவர்களது மகன்கள் பருண், சியோன் (வயது2). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இங்கு வந்து தங்கினர்.
இந்நிலையில் நேற்று மதியம் பூஜா வீட்டின் மாடியில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அவரது அருகே குழந்தைககள் பருண், சியோன் அகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மொட்டைமாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளிவழியாக 2-வது குழந்தை சியோன் வெளியே வந்தான். இதில் குழந்தை சியோன் 3-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்தான். இதனை கண்டு தாய் பூஜா அதிர்ச்சி அடைந்தார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை சியோனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை சியோன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
- ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த உப்புரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்.இவர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் முட்டை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முட்டை கடையின் முதல் மாடியில் உள்ள பேனர் கடையின் செல்போன் நம்பர் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.மேலும் சேவியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனை சேவியர் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் முட்டை கடைக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த முட்டைகளை அரிவாளால் வெட்டி உடைத்து வெளியே வீசினர். சுமார் 2 ஆயிரம் முட்டைகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனை கண்ட கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சேவியர் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து முட்டை கடையை சூறையாடி தப்பிய ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏலியம்பேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது 6 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பி ஓடிய மற்றவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் புதிய பஸ் நிலையம் தேரடி தெருவில் மர்மகும்பல் கத்தியுடன் 4 கடைகளை அடித்து சூறையாடினர். ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகள் குறித்து போலீசாரிடம் புகார் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- மணிகண்டன் ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் உள்ள பூக்கடையில் மாலை கட்டும் வேலை செய்து வந்தார்.
- பலத்த காயம் அடைந்த மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த குண்டலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன்(வயது23). இவர் ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் உள்ள பூக்கடையில் மாலை கட்டும்வேலை செய்து வந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் அவர் வேலை முடிந்து திருத்தணி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
பொன்பாடி அருகே திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
- அவர்யார்? ரெயில் மோதி இறந்தாரா?
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருநின்றவூர் – வேப்பம்பட்டு ரயில் நிலையம் இடையே சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் இளம்பெண் இறந்து கிடப்பதாக திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது ரயில்வே பாதையை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு பலியானாரா என்பது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
- வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் பட்டாசு வெடித்து ஒருவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த பட்டறை பள்ளத்தெருவில் உள்ள வீட்டில் உரிமம் இன்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், வருவாய் துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பட்டறைபள்ளத் தெருவைச் சேர்ந்த சுகுமார்(41) என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தது தெரிந்தது. கோவில் திருவிழாவிற்காக அவர் பட்டாசு தயாரித்ததாக கூறி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிலோ வெடிமருந்தை பறிமுதல் செய்தனர்.
வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.
- இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.
- முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல் ஆட்டோமெட்ரி சர்வீஸ் மற்றும் ஜான் டி நுல் ட்ரேடஜிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்தியசிறு மற்றும் ஒரு தொழிலாளர்களுக்கான நிறுவனம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை தலைவர் விஜயலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் வெற்றி (எ) ராஜேஷ் தொண்டு நிறுவனம் பத்மநாபன் ரகுநாத், வரதன், சசிபாபு, சோம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளர் தமிழரசன், தனியார் கண் மருத்துவமனை டாக்டர் ராஷிமா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
- செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
- தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
திருவள்ளூர்:
செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வட சென்னை பகுதியிலேயே அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறும் அலுவலகமாக செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் இருந்து வருகிறது.
செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இதனால் தினமும் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் பத்திர பதிவு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுபோன்று பத்திர பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. இதில் பத்திரபதிவு அலுவலகத்தில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனை இன்று காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனை காரணமாக செங்குன்றம் பகுதியில் விடிய விடிய பரபரப்பு நிலவியது.
இதே போன்று தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
- போதை வாலிபர்கள் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
திருவள்ளூர்:
மதுபோதையில் போதை ஆசாமிகள் செய்யும் ரகளை ஒவ்வொரு ரகமாக இருக்கும். சில நேரங்களில் யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் வசமாக சிக்கிக்கொண்டு வாங்கி கட்டி செல்வார்கள்.
இதேபோல் திருவள்ளூர் அருகே போதை வாலிபர்கள் ரோந்து சென்ற உதவி போலீஸ்சூப்பிரண்டிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டு சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் விவேகானந்த சுக்லா. இவர் தனது வாகனத்தில் திருப்பாச்சூர் அருேக ரோந்து பணியில் இருந்தார்.
அப்போது சாலையோரத்தில் மதுபோதையில் இருந்த 3 வாலிபர்கள் திடீரென உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்த வாகனத்தை வழிமறித்தனர். பின்னர் நாங்களும் இந்த வாகனத்தில் வருவோம் லிப்ட் வேண்டும் என்று கேட்டனர்.
மதுபோதையில் வாலிபர்கள் இருந்ததால் உதவி போலீஸ்சூப்பிரண்டுடன் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள், போலீசார் உங்கள் நண்பன் என்று சொல்கிறீர்கள்... லிப்ட் கொடுக்க மாட்டீர்களா... என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டு வாகனத்தில் செல்ல அடம் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து போதை வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் பிறையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. போதை தெளிந்ததும் அவர்களிடம் போலீசார் தங்களது பாணியில் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






