என் மலர்
திருவள்ளூர்
- விநாயகர், முருகர், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
- ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி விசேஷ அலங்காரத்துடன் கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியில் காந்தி சிலை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை புனரமைத்து இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதை முன்னிட்டு வியாழக்கிழமை காலை கோ பூஜை,கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.
அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம் சம்ஹிதா ஹோமம், யாகசாலை அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. அன்று மாலை கும்ப அலங்காரம், யாத்ரா ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. சனிக்கிழமை காலை விசேஷ சந்தி, சன்னவதி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை தத்வார்சனை நடைபெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள், யாத்ரா தானம், மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த வைத்தியநாத குருக்கள் தலைமையில் 10 பேர் கொண்ட வேத விற்பனர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். காலை 10 மணிக்கு கோபுர கலசங்கள், விநாயகர், முருகர், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மகா அலங்காரம், மகா தீபாராதனையும், தீர்த்தம்-பிரசாதம் வினியோகம் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் பின்னர், கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும்,ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி விசேஷ அலங்காரத்துடன் கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், எல்லாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி, எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் அம்மினிமகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன்,வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன்,ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் பாக்கியலட்சுமிரமேஷ் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா தியாகராஜன் முதலியார் தலைமையில் மணி குருக்கள், சம்பத் குருக்கள், குமரேசன் மற்றும் விழா குழுவினர்கள்,பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். நாளை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- டாக்டர் அம்பேத்கார் நினைவு நுழைவுவாயில் ஒன்றினை ஒன்றிய குழு உறுப்பினர் தனது சொந்த நிதியில் அமைத்துக்கொடுத்தார்.
- பேண்ட்-வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் பெருமாள் கோவில் வரையில் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. எல்லாபுரம் ஒன்றிய குழு 18-வது வார்டு உறுப்பினர் ஜி.சரவணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில், ரூ.7 லட்சம் செலவில் டாக்டர் அம்பேத்கார் நினைவு நுழைவுவாயில் ஒன்றினை ஒன்றிய குழு உறுப்பினர் தனது சொந்த நிதியில் அமைத்துக்கொடுத்தார்.
இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக (ஓபிஎஸ் அணி) செயலாளரும், எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினருமான ஜி.சரவணன் தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் கட்சியின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் லிட்டில், 5-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், அதிமுக அம்மா பேரவை மாநில செயலாளர் வேதாரண்யம் மோகன்குமார், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம் ஆகியோர் கலந்து கொண்டு சிமெண்ட் சாலை மற்றும் நுழைவுவாயிலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர்.
இதன் பின்னர், பேண்ட்-வாத்தியம் முழங்க வாணவேடிக்கையுடன் பெருமாள் கோவில் வரையில் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், தாமரைப்பாக்கம் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது.
- முதல் யூனிட் 3-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மீஞ்சூர்:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் முதல் யூனிட் 3-வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- சுந்தர் ராஜா பெருமாள் கோவில் தனியாருக்கு சொந்தமான கோவில்.
- ஆள் நடமாட்டம் இருந்ததால் கலசத்தை திருட முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த திருமணம் கிராமத்தில் சுந்தர் ராஜா பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தனியாருக்கு சொந்தமான கோவில். இக்கோவில் கோபுரத்தில் கலசம் இருந்தது. நேற்று இரவு கோவில் கலசத்தை திருட மர்மநபர்கள் திருட முயன்றனர்.
அப்போது அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் கலசத்தை திருட முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கலசம் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பஸ் எர்ணாவூர் அருகே நின்ற போது வெள்ளத்துரை பஸ்சில் படுத்து கிடந்தார்.
- மருமகன் மோகன் பஸ்சில் ஏறி சென்று பார்த்த போது வெள்ளத்துரை பஸ்சில் பிணமாக கிடந்தார்.
திருவொற்றியூர்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 56). பழைய இரும்பு வியாபாரியான இவர் சென்னை எர்ணாவூரில் உள்ள மகள் விஜயராணி வீட்டிற்கு வருவதற்காக நேற்று தென்காசியில் இருந்து தனியார் பஸ்சில் வந்துள்ளார். இன்று காலை பஸ் எர்ணாவூர் அருகே நின்ற போது வெள்ளத்துரை பஸ்சில் படுத்து கிடந்தார்.
உடனே அவரை அழைத்து செல்ல வந்த அவரது மருமகன் மோகன் பஸ்சில் ஏறி சென்று பார்த்த போது வெள்ளத்துரை பஸ்சில் பிணமாக கிடந்தார். உடனே அவரை கீழே இறக்கி சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- 40 அடி உயரத்தில் பணியில் இருந்தபோது சக்திவேல் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.
- சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாதவரம்:
மாதவரம் தட்டான்குளம் சாலையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு குடோனில் மேற்கூரை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சக்திவேல் (வயது 25) உட்பட 4 பேர் கொண்ட ஒப்பந்த ஊழியர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.
நேற்று மதியம் 40 அடி உயரத்தில் பணியில் இருந்தபோது சக்திவேல் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார். தலை, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கசவராஜப்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் பின்னால் வேகமாக மோதியது.
- மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா தூக்கி எறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே பலியானார்.
திருத்தணி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா நீலகண்டாபுரம் இருளர் காலனியில் வசிப்பவர் சிவா(34). இவரது மனைவி மகேஸ்வரி. (25) இருவரும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் நெசவு தொழிலான தறி ஓட்டும் பணி செய்து வருகின்றனர்.
இருவரும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் இருந்து வேலை முடிந்து நேற்று இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கசவராஜப்பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோட்டார் சைக்கிள் பின்னால் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா தூக்கி எறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே பலியானார்.
அவரது மனைவி மகேஸ்வரி பலத்த காயமடைந்த நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு சிவாவின் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும்.
- கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னை நகரப் பகுதியில் 2035-ம் ஆண்டுக்குள் தினசரி குடிநீர் தேவை 2,522 மில்லியன் லிட்டராக உயரும் என்று அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் ஆதாரங்களை அதிகரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். இதனால் பல லட்சம் கனஅடி உபரி நீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. மேலும் அதிக அளவு உபரி நீர் திறக்கப்படும்போது கரையோர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பலத்த வெள்ள சேதமும் ஏற்படுகிறது.
இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆய்வுகள் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீரை சேமித்து வைக்க பூண்டி ஏரியில் இருந்து மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளில் மொத்தம் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள மானாவூர் ரெயில் பாதை மற்றும் காவேரிப்பாக்கம் குளம், பட்டரை பெருமந்தூர் இடையே 2 இடங்களில் தடுப்பு அணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தின் கீழ்நிலையில் இருளிப்பட்டு தடுப்பணைக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும் இடையிலும், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் அணைக் கட்டுக்கு இடையே 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிக்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
உபரி நீரை தேக்குவதன் மூலம் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், வட சென்னையில் சடையங் குப்பம்-எடையஞ்சாவடியில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 600 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படும் இந்த ஆய்வு இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நேற்று ஜெபராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை.
- வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது 29). திருமணமாகாத இவர் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கொலை, வழிப்பறி, கொள்ளை, அடிதடி உள்பட சுமார் 12 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஜெபராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. எனவே அவரது வீட்டார் அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் ஜெபராஜ் வேப்பம்பட்டு - திருநின்றவூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிய வந்தது.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு முல்லை நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 35). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு இரவு 10 மணிக்கு அவர் வீட்டில் இருந்தவர்களுடன் பேசி உள்ளார். ஆனால் அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில் வெள்ளை நிற அரைகை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் கட்டியிருந்தார்.
இந்த 3 சம்பவங்கள் குறித்தும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் உடலையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
- மோட்டார் சைக்கிளில் மணல் கடத்த முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
- விசாரணையில் அவர்கள் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். மங்களம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்த முயன்ற மூன்று பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர்கள் மங்களம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்(வயது29), தேவன்(வயது30), சாந்தகுமார்(வயது28) என்பது தெரியவந்தது. குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
- காணிக்கை முடிக்கான அடிப்படை ஏலத்தொகை கூடுதலாக இருப்பதாக கூறி உள்ளனர்.
- ஊராட்சி தலைவர் ஆர்த்தி ஹரி பாபு, ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காணிக்கை முடிக்கான பொது ஏலம் மற்றும் பிரசாத கடை வைக்க உரிமம் வழங்குவதற்கான ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை பொன்னேரி சரக ஆய்வர் மற்றும் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆலய வளாகத்தில் ஏலம் விடுவதற்கான நடைமுறை தொடங்கியது.
ஆனால், காணிக்கை முடிக்கான அடிப்படை ஏலத்தொகை கூடுதலாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதேபோல் பிரசாத கடை வைக்க உரிமம் ஏலம் எடுக்கவும் யாரும் வரவில்லை. இதனால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் ஆர்த்தி ஹரி பாபு, ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன், பரம்பரை அறங்காவலர் ராஜசேகர் குருக்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.
- துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.
- பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சிஅலுவலகம் துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மூன்றாவதாக இதன் அருகில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் செல்போன் டவரினால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு பள்ளி குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணி செய்யும் இடத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






