என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடமதுரை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம்
- விநாயகர், முருகர், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
- ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி விசேஷ அலங்காரத்துடன் கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியில் காந்தி சிலை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை புனரமைத்து இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதை முன்னிட்டு வியாழக்கிழமை காலை கோ பூஜை,கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.
அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம் சம்ஹிதா ஹோமம், யாகசாலை அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. அன்று மாலை கும்ப அலங்காரம், யாத்ரா ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. சனிக்கிழமை காலை விசேஷ சந்தி, சன்னவதி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை தத்வார்சனை நடைபெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள், யாத்ரா தானம், மகா பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த வைத்தியநாத குருக்கள் தலைமையில் 10 பேர் கொண்ட வேத விற்பனர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். காலை 10 மணிக்கு கோபுர கலசங்கள், விநாயகர், முருகர், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மகா அலங்காரம், மகா தீபாராதனையும், தீர்த்தம்-பிரசாதம் வினியோகம் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் பின்னர், கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும்,ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி விசேஷ அலங்காரத்துடன் கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், எல்லாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி, எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் அம்மினிமகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன்,வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன்,ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் பாக்கியலட்சுமிரமேஷ் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா தியாகராஜன் முதலியார் தலைமையில் மணி குருக்கள், சம்பத் குருக்கள், குமரேசன் மற்றும் விழா குழுவினர்கள்,பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். நாளை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.






