பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசம்: 2 ஆயிரம் முட்டைகளை அரிவாளால் வெட்டி உடைத்த கும்பல்

கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பொன்னேரியில் ரவுடிகள் அட்டகாசம்: 2 ஆயிரம் முட்டைகளை அரிவாளால் வெட்டி உடைத்த கும்பல்
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த உப்புரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்.இவர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் முட்டை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முட்டை கடையின் முதல் மாடியில் உள்ள பேனர் கடையின் செல்போன் நம்பர் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.மேலும் சேவியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனை சேவியர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் முட்டை கடைக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த முட்டைகளை அரிவாளால் வெட்டி உடைத்து வெளியே வீசினர். சுமார் 2 ஆயிரம் முட்டைகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனை கண்ட கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சேவியர் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து முட்டை கடையை சூறையாடி தப்பிய ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏலியம்பேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது 6 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பி ஓடிய மற்றவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் புதிய பஸ் நிலையம் தேரடி தெருவில் மர்மகும்பல் கத்தியுடன் 4 கடைகளை அடித்து சூறையாடினர். ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகள் குறித்து போலீசாரிடம் புகார் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com