என் மலர்
திருவள்ளூர்
- பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
- அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உறி அடித்தார்.
திருவள்ளூர்:
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.

மேலும் விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சியர் பிரபு சங்கர் குத்தாடம் போட அனைவரும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.
- குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது.
- தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
செங்குன்றம்:
சென்னை அடுத்த புழல் அம்பத்தூர் சாலை சூரப்பட்டு அருகே நங்கநல்லூரைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 80 ஆயிரம் சதுர அடியில் குடோன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த குடோனில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், வெளிநாட்டு மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இறக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம், மணலி, பிராட்வே, செம்பியம், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 11-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று காலை 200 கனஅடியாக இருந்த நீர் வரத்து பின்னர் மதியம் 1000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 3073 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3132 மில்லியன் கனஅடியாக உள்ளது.
ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.05 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
தொடர்ந்து ஏரியை கண்காணித்து வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல்.
- போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
- சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது70). அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவர் தனது சைக்கிளில் பெட்டேரால் பங்க் நோக்கி சென்றார். வல்லூர் சந்திப்பில் வந்தபோது சென்னை துறைமுகம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ஆசீர்வாதம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்லும் போது குண்டும் குழியுமான சாலையில் மண், தூசி பரந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், கண்டெய்னர் லாரிகளை சாலையில் நிறுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி பொன்னேரி- திருவெற்றியூர் சாலையில் திடீர்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியையும் சிறை பிடித்தனர். வாகனங்கள் மணலி புதுநகர் சாலை, மீஞ்சூர் சாலையில் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல் மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை குருவி மேடு சாலையில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் மிகவும் பழுதடைந்து வீடுகள் முழுவதும் தூசி படிந்து சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தூசு பறக்கும் சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் குருவி மேடு கொண்டக்கரை-மணலி புதுநகர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல்துறை பணிக்கு தேர்வான 429 போலீசாருக்கு கடந்த 8 மாதங்களாக திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.
இதில் விழுப்பரம், திருவண்ணாமலை, சேலம், கடலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலுார், காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், ஆவடி, சேலம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளை சேர்ந்த 429 பேருக்கு காவலர் பயிற்சி மற்றும் நீச்சல், ஓட்டுனர், முதலுதவி, தீயணைப்பு, கமாண்டோ மற்றும் இதர பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பயிற்சி வகுப்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த இரண்டாம் நிலை காவலர் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், கனகவல்லிபுரம் காவலர் பயிற்சி பள்ளி முதல்வரும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான வீரபெருமாள், திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் பேசியதாவது:-
தமிழ்நாடு காவல்துறையில் இளம் காவலர்கள் இணைந்து உள்ளனர். இந்த 429 பயிற்சி பெற்ற காவலர்களை மட்டுமல்லாது அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்துகிறேன். இந்த பயிற்சி பள்ளியில் 429 பேரில் 204 பேர் பட்டப்படிப்பு, 27 பேர் மேல்பட்டபடிப்பு, 83 பேர் பொறியியல். 57 பேர் பட்டயபடிப்பு, 5 பேர் ஐ.டி.ஐ. படிப்பு, 3 பேர் உடற்பயிற்சியில் பட்டய படிப்பு, 45 பேர் மேல்நிலை வகுப்பு, 9 பேர் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார்கள்.
இது மிகப்பெரிய மாற்றமாகும். ஒரு காலத்தில் 8-ம் வகுப்பு படித்து போலீஸ் பணியில் சேர்ந்தனர். போலீஸ் பணியில் இருக்கக்கூடிய நன்மதிப்பு காரணமாக தற்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது. இது பொதுமக்களிடையே போலீசாரின் மதிப்பை அதிகப்படுத்தும்.
பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நியாயமான சட்டத்திற்கு உட்பட்டு, எல்லா வகையிலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயிற்சி கல்லூரி துணை முதல்வர் கணேஷ் குமார், கவாத்து பயிற்சியாளர் பாஸ்கர், முதன்மை சட்ட பயிற்சியாளர் கலிய சுந்தரம் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது.
- ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
பொன்னேரி,ஜன.5-
மீஞ்சூரை அடுத்த வெள்ளி வாயல் சாவடி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை ஒட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கல் சூளை மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
வெள்ளிவாயல் வரை செல்வதற்கு பயன்படுத்தும் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
வெள்ளிவாயல்சாவடி கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்போது எதிரே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர் உள்ளிட்ட கிராமமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை உள்ளது.
எனவே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று சுற்றி உள்ள 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ள னர். மேலும் மேம்பாலம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.
- மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும்.
- நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1991-ல் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது.
அப்போது கட்டிடம் அருகில் உள்ள 51 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமித்து மேல் வாடகைக்கு சைக்கிள் ஸ்டான்ட் நடத்த குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.
நகரின் முக்கிய சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிட்டத்தட்ட 32 வருடமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, நகர அமைப்பு அலுவலர் குணசேகரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரத்துடன் இன்று காலை வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர். முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும். அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.
- பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.
- மழை முழுவதுமாக நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்தது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கடந்த ஆண்டு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 மில்லியன் கன அடி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 3064 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 34.75 அடியாகவும் உள்ளது. தற்போது மழை முழுவதுமாக நின்று விட்டதால் ஏரிக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
- அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
- கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 2-வது நிலையின் 1-வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
- அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம்.
பூந்தமல்லி:
குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூரில் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று பிற்பகலில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க உடல் ஒன்று ஏரியில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு போலீஸ் படையுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்த பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அழுகிய நிலையில் காணப்பட்ட வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாகவே உடல் காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட வாலிபரை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளிகள் உடலை 6 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் உடலை மட்டும் ஏரியில் வீசியுள்ளனர். ஒரு காலையும் அங்கேயே போட்டுவிட்டு மற்ற உடல் பாகங்களை வேறு எங்கேயோ வீசியுள்ளனர்.
தலையில்லாத உடல் பகுதி மற்றும் ஒரு காலை மட்டுமே அங்கு சிக்கியுள்ள நிலையில் தலை மற்றும் இன்னொரு கால், கைகள் ஆகியவை ஏரிக்குள்ளேயே வீசப்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மூலமாக உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காண்பதற்கான பணிகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாயமாகியுள்ள வாலிபர்களின் பட்டியலை சேகரித்துள்ள போலீசார் அவர்களின் கதி என்ன? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

கொலையாளிகள் வேறு எங்கேயாவது வைத்து கொலை செய்துவிட்டு உடலை மட்டும் கல்லால் கட்டி ஏரியில் தூக்கி வீசி இருக்கலாம் என்றும், மற்ற உடல் பாகங்களை ஏதாவது காட்டுப் பகுதியிலோ, அல்லது குப்பை மேடுகளிலோ வீசி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து சுற்று வட்டார பகுதிகளில் குப்பை மேடுகள் மற்றும் புதர்கள் மண்டியுள்ள இடங்களிலும் போலீசார் உடல் பாகங்களை தேடி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தனிப் படை போலீசார் அந்த பகுதி முழுவதுமே கண் காணித்து வருகிறார்கள்.
3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே வாலிபரை கொன்று இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஏரியில் உடலை வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தலை மற்றும் கைகள், கால் ஆகியவை கிடைத்தால் மட்டுமே கொலை வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் அதை வைத்தும் துப்பு துலக்கி வருகிறார்கள்.
இந்த டி.சர்ட்டில் "தி டிரம்மர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த அடையாளங்களும் இல்லை. இதுபோன்று ஆடைகள் கிடைக்கும்போது காலரின் பின்னால் டெய்லர் கடையின் பெயர் இருக்கும். அதை வைத்து இதற்கு முன்பு பல வழக்குகளில் போலீசார் துப்புதுலக்கி உள்ளனர்.
ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியில் கைப்பற்றப்பட்ட டி.சர்ட் ரெடிமேட் டிசர்ட்டாக உள்ளது. இதனால் அதனை வைத்து துப்பு துலக்க முடியாத நிலையே இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் இது கொலையுண்ட நபர் அணிந்திருந்த 'டி.சர்ட்' தானா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் போலீசாரை சுற்றவிட வேண்டும் என்கிற எண்ணத்திலும், கொலையுண்ட நபரை எந்த வழியிலும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த உஷாராக செயல்பட்டுள்ளனர்.
இதன்காரணமாகவே கொலையாளிகள் தலை மற்றும் உடல் பாகங்கள் இல்லாத உடலை மட்டும் ஏரியில் வீசிட்டு சென்றிருக்கிறார்கள்.
இதையடுத்து இந்த கொலை வழக்கை போலீசார் சவாலாக ஏற்றுக் கொண்டு துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் நிலங்களே அதிக அளவில் உள்ளதால் கேமராக்களும் பொறுத்தப்படவில்லை. இருப்பினும் வாலிபர் கொலை வழக்கில் சரியான துப்பு எதுவும் துலங்காததால் பொலீசார் தவியாய் தவித்து வருகிறார்கள்.






