என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவி மாடல் அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக அருகே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் (ஏ) ராஜசிம்மா மகேந்திரா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், நகரத் தலைவர் சதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் மண்டல் தலைவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற் கோப்பையுடன் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.
    • திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் 43-வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட பட்டய போட்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் உள்ள பூப்பந்தாட்ட திடலில் நேற்று தொடங்கியது. பகல் இரவு போட்டியாக இன்றும் (சனி) நாளையும் (ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடை பெறும் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை சேர்ந்த 172 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற் கோப்பையுடன் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. முதல் நாள் போட்டியினை திருவெற்றியூர் கே.பி சங்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சிவ வீ.மெய்ய நாதன், டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல். ஏ., திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசு உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக அணியில் இருந்து 20 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு கே. பி. சங்கர் எம்.எல்.ஏ. சீருடை மற்றும் காலணிகள் வழங்கி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.
    • பக்தர்கள் வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

    திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை.

    அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆடித் திருவிழா நடத்த அரசு அனுமதித்தது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஆடி கிருத்திகை விழா தொடங்கியது.

    ஆடிக் கிருத்திகையான இன்று முருகனை தரிசிக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் வசதிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணிக்கு வருகை தந்து மலைப்பாதை திருப்படிகள் வழியாக மேலே நடந்து வந்து ஆய்வு செய்தார். பின்னர் முருகனை வழிபட்டார்.

    • சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 23வது பிளாக்கை சேர்ந்தவர் உமர் பாஷா.
    • பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருவொற்றியூர்:

    சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 23வது பிளாக்கை சேர்ந்தவர் உமர் பாஷா (வயது 32). சென்னை அரும்பாக்கத்தில் பீரோ கம்பெனி வைத்து தொழில் செய்து வந்தார்.

    சென்னையை கலக்கிக் கொண்டிருக்கும் தாதாவான டிபி சத்திரம் ராதா என்பவரின் வலது கரமாக செயல்பட்டு வந்த உமர்பாஷா மீது 10-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. உமர் பாஷா நேற்றிரவு பாரதியார் நகர் 5-வது தெருவில் உள்ள மசூதியில் தொழுகை செய்து விட்டு பின் மோட்டார் சைக்கிளில் அதே தெரு வழியாக வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் உமர் பாஷாவை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடினர்.

    இதில் மூளை சிதறி வெளியே வந்த நிலையில் நிலைகுலைந்து சரிந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் உதவி கமிஷனர் பிரம்மானந்தம், எண்ணூர் இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட் மற்றும் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் டோனி வரவழைக்கப்பட்டு அது பாரதியார் நகர் மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது.

    எண்ணூர் போலீசார் இறந்த உமர்பாஷாவின் உடலை கைப்பற்றி, பிரேத சோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து அருகிலுள்ள "சிசிடிவி" காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய பட்டா கத்திகளையும், புதியதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் விட்டு கிடந்தது அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    கொலை செய்யப்பட்ட உமர் பாஷா மீது வழக்குகள் உள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாணவிகள் பயன்படுத்தும் குடிதண்ணீர், கழிவறை, சாலை வசதி, அடிப்படை வசதி குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • மாணவிகள் கழிவறை கதவில் பூட்டு இல்லை எனவும் தண்ணீர் வருவதில்லை எனவும் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் தொடர்ந்து மாணவிகள் பயன்படுத்தும் குடிதண்ணீர், கழிவறை, சாலை வசதி, அடிப்படை வசதி குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது மாணவிகள் கழிவறை கதவில் பூட்டு இல்லை எனவும் தண்ணீர் வருவதில்லை எனவும் தெரிவித்தனர். பின்னர் கழிப்பறை வசதி குடிநீர் வசதி, செய்து கொடுப்பதாகவும் பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்டு மாணவர்கள் செல்வதற்கு வசதி இல்லாமல் இருக்கின்ற சாலையை சீரமைத்து செய்து கொடுப்பதாக தெரிவித்தார். அப்போது நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, தலைமை ஆசிரியர் ஆனந்தீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமன் திடீரென கடலில் தவறி விழுந்தார்.
    • மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு தூக்கி சென்று பார்த்தனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு சாத்தான் குப்பத்தை சேர்ந்தவர் ராமன் (36). இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் சேர்ந்து படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென ராமன் கடலில் தவறி விழுந்தார். அவருடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு தூக்கி சென்று பார்த்தனர். அப்போது ராமன் இறந்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடலை போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடலில் விழுந்து பலியான மீனவர் ராமனுக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும் ரத்திஷ், ரபினேஷ் என்ற மகன்களும் உள்ளனர்.

    மீன் பிடிக்கச்சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானதால் பழவேற்காடு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    • திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு கார், பாஸ் கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வழங்கவில்லை

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு கார் பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு கார், பாஸ் கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வழங்கவில்லை என்று கூறி பா.ம.க, பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் இந்து மக்கள் முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் திருத்தணி முருகன் கோவில் துணை ஆணையர் அலுவலகம் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    • திருநின்றவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.
    • திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர்.

    திருநின்றவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி பவானி (வயது35). இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயலட்சுமியிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.

    ஆனால் பவானியால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் விஜயலட்சுமி பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    மேலும் கடந்த வாரத்தில் பணத்தை திருப்பி கேட்டு விஜயலட்சுமி தகாத வார்த்தைகளால் பவானியை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த பவானி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மதகுகளின் உறுதித்தன்மை பற்றி அதிநவீன கருவிகளைக் கொண்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும்போது உபரி நீர் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் உயரம் 35 அடி. 3.231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஏரியின் உயரத்தை 2 அடி உயர்த்தி கூடுதலாக 1.5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதைத் தொடர்ந்து உலக வங்கி ஆலோசகர் சூபே தலைமையில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் முரளிதரன், திட்டம் மற்றும் வடிவமைப்பு தலைமைப் பொறியாளர் பொன்ராஜ், கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள மதகுகளின் உறுதித்தன்மை பற்றி அதிநவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தலைமை பொறியாளர் முரளிதரன் கூறியதாவது:-

    பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் பூண்டி ஏரியில் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும். மேலும் ஏரியின் உயரத்தை உயர்த்தி கூடுதலாக 1.5 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க உள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும்போது உபரி நீர் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இப்படி திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது.

    இதனைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கொசஸ்தலை, கூவம் ஆற்று ஆறுகளில் உலக வங்கி நிதியைக் கொண்டு தடுப்பணைகள் கட்ட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவி இருந்ததாக தெரிகிறது.
    • மனவேதனையில் இருந்த மாணவி திடீரென வீட்டில் இருந்த வார்னிசை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கடந்த 17-ந்தேதி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரிய குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவி இருந்ததாக தெரிகிறது. இதில் மனவேதனையில் இருந்த மாணவி திடீரென வீட்டில் இருந்த வார்னிசை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மாணவி ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நீட் தேர்வு முடிவு பயத்தில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது.
    • பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. இந்த மழை அதிகாலை வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.

    பலத்த மழை காரணமாக திருவாலங்காடு திருவள்ளூர், சோழவரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக உருவான குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக திருவாலங்காட்டில் 10.8 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்து உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்) வருமாறு:

    திருவள்ளூர் - 63

    ஆர்.கே.பேட்டை - 2

    திருத்தணி - 2.

    பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பிரதான சாலைகள் மட்டுமின்றி பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கிநிற்கின்றது. இதனால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிப்புகுள்ளாகியுள்ளனர்.மேலும் சேற்றில் கால் வைக்காமல் செல்ல பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் தடுப்பு இரும்பு வேலியை பிடித்து தொங்கியவாறு செல்கின்றனர். மழை நின்று பல மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தேங்கி நிற்கும் மழை நீர் அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்க வில்லை என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குற்றஞ்சாட்டினர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
    • 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பொன்னேரி:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மீஞ்சூர் வட்டார கிளை சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தியதை போல் மாநில அரசு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சுவர்ணாபாய், வட்டார செயலாளர் மாலினி, பொருளாளர் அலெக்ஸ் டைனீஷியஸ், மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×