என் மலர்
திருப்பூர்
- தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.
- பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பி.என். ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி உள்ளது. இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மதியம் சுமார் 1 மணி அளவில் கம்பெனியின் 3-வது மாடியில் இருந்து கரும்புகை குபு குபு என வந்தது. உடனே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மாடியில் இருந்து அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மேலும் அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
உடனே இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
- வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.
திருப்பூர்:
நாடு முழுவதும் இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய 181 என்ற எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா தேவி கலந்து கொண்டு துவக்கி வைத்து கையெழுத்திட்டு, கைரேகை பதிவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகள், பெண்கள் கைரேகையை பதிவு செய்து கையெழுத்திட்டனர்.
- பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் தெற்கு வீதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் வசித்து வருபவர் நந்தகுமார் ( 28). இவரது மனைவி பிரியா (வயது 27). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். கணவன், மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று நந்தகுமார் வேலைக்கு சென்று விட்டார். பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக சென்ற டிராக்டர் நந்தகுமாரின் வீட்டு சுவரில் மோதி, இரும்பு கதவை உடைத்து கொண்டு நிற்காமல் வீட்டுக்குள் புகுந்து பிரியா மீது ஏறியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் அறிந்த நந்தகுமார், வீட்டிற்கு விரைந்து வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் டிராக்டர் அடியில் சிக்கி தவித்த பிரியாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரியாவுக்கு வலது கால் முறிந்ததாக தெரிகிறது. இதற்கிடையே டிராக்டரை ஓட்டி வந்த காடையூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகன் லோகநாதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லோகநாதன் மது போதையில் டிராக்டர் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
- ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி, நல்லூர் மற்றும் மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. அவ்வகையில், 3 போலீஸ் நிலையங்களை சேர்ந்த, 163 வாகனங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 7-ந் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர விருப்பமுள்ள நபர்கள் ஆதார் கார்டு, வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் மோட்டார் சைக்கிள் ஏலம் எடுக்க விரும்புவர்கள் வீரபாண்டி, நல்லூர், மங்கலம் போலீஸ் நிலையங்களை அணுகி, ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு தெற்கு தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பாலாஜிநகர், அய்யப்பாநகர் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின்நிலையப்பகுதிகளில் நாளை 28-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முதலிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார்பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம் மற்றும் நல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு. பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யப்பாநகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
- அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் நேற்று மாலை பெரும்பாலான வீடுகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். வீட்டின் முற்றம், வாசல், மாடி என எங்கு திரும்பினாலும் தீபமாகவே காட்சியளித்தது. பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சில வீடுகளில் ஓலை கொலுக்கட்டை செய்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதனால் திருப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா களை கட்டியது.
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத வாலீஸ்வரர் சாமிக்கு, பால், தயிர், இளநீர் உள்பட 32 வகை திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேவூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில், அஞ்சநேயர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில்களில் கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.
இதுபோல் ஊத்துக்குளி பகுதியில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி கைலாசநாதர் கோவில், அம்மன் கோவில்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை பெண்கள் புத்தாடை அணிந்து கோவில்களில் தீபம் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அவரவர் வீடுகளில் வண்ண கோலமிட்டு மண் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனர்.
- மின் உற்பத்திக்கு தேவையான மின்சாதன பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
- சிசிடிவி., கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே மூலனூர்-தாராபுரம் சாலை சோமன்கோட்டையில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான மின்சாதன பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சம்பவத்தன்று காற்றாலை அமைக்க வைத்து இருந்த பொருட்களில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பியை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மூலனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி., கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் லிங்கதுரை (வயது 28), திருநெல்வேலி நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவரின் மகன் வீரராஜ் (21), வெள்ளகோவில் ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செந்தில்குமார் (32), பொள்ளாச்சி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பெற்றான் என்பவரின் மகன் பிரபு (23), வெள்ளகோவில் எல்.ஐ.சி நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் செல்வகுமார் (37) ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை மீட்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து தாராபுரம் கிளை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.
- கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.
- 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் லட்சத்து எட்டு தீபத்திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 1000 லிட்டர் நல்லெண்ணெய், லட்சத்து எட்டு விளக்கு மற்றும் திரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட உடன், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.
ஒரே இடத்தில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு, எங்கும் ஒளிமயமாக காட்சி அளித்தது பக்தர்கள் மனதில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக திருமுருகநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நவபாரதி ராமநாதன், உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிச்சாமி, கோவில் செயல் அலுவலர் விமலா, நகராட்சி தலைவர் குமார் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சத்து எட்டு தீபத்திருவிழா நடைபெறும் நிலையில் திருமுருகநாத சுவாமி கோவிலில் 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் -17, திருப்பூர் தெற்கு -26, கலெக்டர் அலுவலகம் -29, மடத்துக்குளம் -3, தாராபுரம்-2, மூலனூர்-1,குண்டடம் -17, உப்பாறு அணை-14, நல்லதங்காள் ஓடை-2, உடுமலைப்பேட்டை- 3.30, அமராவதி-4, திருமூர்த்தி அணை -5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, காங்கயம்-6, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம்-2, வட்டமலைக்கரை அணை -3, பல்லடம்-29. மாவட்டம் முழுவதும் மொத்தம் 167.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
- ஆய்வு கட்டணம் மண் ரூ.20, நீர் ரூ.20 ஆகும்.
- 3 நாட்களுக்கு பிறகு வந்து ஆய்வின் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
திருப்பூர்:
அவினாசி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் வட்டத்தில் விவசாயிகள் தங்களது மண்ணை பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசின் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம். உழவன் செயலியில் தமிழ் மண்வளம் பகுதியில் மண்மாதிரி ஆய்வு முன்பதிவு பகுதியில், தங்களது ஆதார் எண், தொலைபேசி எண், ஓ.டி.பி. பெயர், முகவரி, நில விவரங்கள், பயிர் விவரங்கள் கொடுத்து மண் பரிசோதனை நிலையம், திருப்பூர் என பதிவு செய்து கொள்ளலாம். பிறகு மண்ணை ஆய்வகத்துக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு சமர்ப்பிக்கலாம். ஆய்வு கட்டணம் மண் ரூ.20, நீர் ரூ.20 ஆகும். பரிசோதனை செய்யப்பட்ட பின் 3 நாட்களுக்கு பிறகு வந்து ஆய்வின் முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.
- மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி, ஜூலை 1-ந்தேதி அக்டோபர் 1-ந்தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புகிறவர்கள், பெயர் நீக்கம் செய்ய விரும்புகிறவர்கள் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாற்றியவர்கள், முகவரி அல்லது புகைப்படம் மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பான படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் -6ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி திருத்தம் செய்யவும், ஒரே சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் திருத்தம் செய்ய படிவம்-8 ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.
காங்கயம்:
மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டம் வழியாக 172 கிலோ மீட்டர் தூரம் கடந்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் ஒரத்துப்பாளையம் அணை அருகே கத்தாங்கண்ணி, வயக்காட்டுப்புதூர், கணபதிபாளையம், வெங்கலப்பாளையம உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமமக்கள் போதிய சாலை வசதி இல்லாததால் பரிசல் மூலம் நொய்யல் ஆற்றை கடந்து சென்னிமலை, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாகியும் சாலை வசதி மற்றும் ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் ஆற்றின் இரு கரையிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டியுள்ளனர். பரிசலில் ஏறியபின் அந்த கம்பிகளை பிடித்து கொண்டு பரிசல் மூலம் ஆற்றை கடந்து வருகின்றனர்.
சாலை வழியாக சென்றால் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் வெங்கலப்பாளையம் பகுதியில் பரிசலில் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு குறையும் என்பதால் இவ்வாறு பரிசலை பயன்படுத்தி ஆற்றை கடப்பதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் 2 ஆயிரம் கன அடி வரை சென்று கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் நொய்யல் ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, பரிசலில் செல்ல முடியாத நிலையில் இன்றும் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு ஊத்துக்குளி, சென்னிமலை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு பாலம் அமைக்க கோரி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர்.






