search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வீடுகளில்  விளக்கேற்றி வழிபாடு
    X

    திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு விளக்கேற்றிய பக்தர்களை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு

    • தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் நேற்று மாலை பெரும்பாலான வீடுகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். வீட்டின் முற்றம், வாசல், மாடி என எங்கு திரும்பினாலும் தீபமாகவே காட்சியளித்தது. பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சில வீடுகளில் ஓலை கொலுக்கட்டை செய்து சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதனால் திருப்பூரில் கார்த்திகை தீபத் திருவிழா களை கட்டியது.

    சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத வாலீஸ்வரர் சாமிக்கு, பால், தயிர், இளநீர் உள்பட 32 வகை திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேவூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில், அஞ்சநேயர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில்களில் கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.

    இதுபோல் ஊத்துக்குளி பகுதியில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி கைலாசநாதர் கோவில், அம்மன் கோவில்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை பெண்கள் புத்தாடை அணிந்து கோவில்களில் தீபம் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அவரவர் வீடுகளில் வண்ண கோலமிட்டு மண் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனர்.

    Next Story
    ×