என் மலர்
திருப்பூர்
- மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது.
- தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5வது வார்டுக்கு உட்பட்ட நியூ டவுன் பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிறுவர்கள், சிறுமியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உச்சத்தில் இருந்த போது, அறுவடை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து பலர் லட்சத்தில் சம்பாதித்தனர்.
இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிக்கவே இங்கிருந்து ஏற்றுமதியான தக்காளி குறையத்தொடங்கிய நிலையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ. 400-க்கு விற்கப்படுகிறது.
திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த தக்காளி மொத்த வியாபாரி எஸ்.ஆர்.எம். ரவி கூறும்போது, தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது ஒரு டிப்பர் தக்காளி நல்ல ரகம் ரூ. 400-க்கு விற்பனையாகிறது. ரூ. 28 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படும் தக்காளி, தற்போது வெளிச்சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. 2 மற்றும் 3-ம் ரக தக்காளிகள் ஒரு டிப்பர் ரூ. 200க்கு கொள்முதல் செய்யப்பட்டு, வெளிச்சந்தைகளில் ரூ. 20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விலை உச்சத்தில் இருந்தபோது, விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இங்கிருந்து சென்ற தக்காளி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறுவடை தொடங்கிவிட்டதால், இங்கு பற்றாக்குறை இல்லை. ஆகவே விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது.
- 2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் சாலையில் உள்ள 63 வேலம்பாளையம் பகுதியில் இன்று காலை பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் நிறுவன வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.2 பேர் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
- சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் சிதறி கிடக்கிறது.
- பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில் 7 சென்ட் நிலத்தில் பொது சுடுகாடு செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 200 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்த நிலையில் தற்போது 3000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வாரத்தில் 4,5 உடல்கள் இந்த சுடுகாட்டில் புதைக்கப்படும்.
இந்தநிலையில் அங்கு உடல்களை புதைக்க இடம் இல்லாததால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட உடல்களை வெளியே எடுத்து போட்டு புதிய உடலை புதைத்து வருகின்றனர். இதன் காரணமாக சிதிலமடைந்த உடல்கள் சுடுகாட்டில் சிதறி கிடக்கிறது. இதனை நாய்கள் கவ்வி இழுத்து செல்கின்றன.
அழுகிய நிலையில் உள்ள உடல்களை நாய்கள் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு இழுத்து செல்வதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பெண்கள்- குழந்தைகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அழுகிய உடல்கள் மீட்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார்
உடுமலை
திருமாவளவனின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்குமாவட்டம் சார்பில் நடைபெற்றது.
உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட எலையமுத்தூர்,செல்வபுரம், கல்லாபுரம், பூளவாடி, கண்ணவ நாயக்கனூர் ,தளி, தீபாலப்பட்டி, வல்லகுண்டபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம் தலைமையில் விழா நடைபெற்றது .கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார் . சிறப்பு அழைப்பாளராக ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் , மாநில நிர்வாகிகள் கிப்டன் டேவிட் பால், சத்தியமூர்த்தி,உடுமலை ஒன்றிய பொருளாளர் சக்திவேல்,எல்லை முத்தூர் ராமலிங்கம் ,செல்வபுரம் மாரிமுத்து ,தீபாலபட்டி திருமூர்த்தி, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, கடத்தூர் குணசேகரன், மாதவராஜ் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகின்றனர்.
- ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணையை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகின்றனர். முதல் நாள் கோனேரிபட்டி கிராமத்தில் நல்லதங்காள் அணையில் இருந்து மண் எடுத்து வந்து அதை பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.5-வது நாளன்று வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6-வது நாளான நேற்று நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 7-வது நாளான இன்று சேலையை அவிழ்க்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி விவசாயி ஒருவர் சேலை கட்டியிருந்த நிலையில், அதனை மற்ற விவசாயிகள் அவிழ்த்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தா
- தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வெங்காய விதைகளையும் அமைச்சர் வழங்கினார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற வேலைதிட்டம், நகர்புற சாலைகள் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம், செல்லப்பிள்ளை பாளையத்தில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செல்லப்பிள்ளை பாளையம் முதல் கொடுவாய் - நாச்சிபாளையம் ரோடு வரை மற்றும் பொல்லிகாளிபாளையம் ரோடு முதல் வரக்குட்டைபாளையம் வரை தார்சாலை மேம்பாட்டுப்பணி,
பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி முதல் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் பழைய அனுப்பட்டி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.3.06 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் செங்கோடம்பாளையம் மதுரைவீரன்கோவில் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.31 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் பள்ளி வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காமநாயக்கன்பாளையம் ஆசிரியர் காலணி மூன்றாம்வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ,
கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கரடிவாவி கதர்கடை முதல் வீதியில் கான்கிரீட் தளம்அமைக்கும் பணி , சாமளாபுரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற வேலைத்திட்டத்தின் கீழ் வார்டு எண் 1 -ல் சாமளாபுரம் தோட்டத்து சாலை வீதியில் தார் சாலை அமைக்கும் பணி , ரூ.45.24 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புறசாலைகள் திட்டத்தின் கீழ் வார்டு எண் 6 மற்றும் 7-ல் மலைக்கோவில் முதல்பெருமாம்பாளையம் வரை மற்றும் மலைக்கோவில் சுற்றி தார் சாலை அமைக்கும்பணி என மொத்தம் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 27பயனாளிகளுக்கு ரூ.80,890 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும்,தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வெங்காய விதைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார் (பொங்கலூர்), மனோகரன் (பல்லடம்), உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், குருபிரசாத், மகாலட்சுமி, கார்த்திக்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்
- கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- 24-ந்தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அறை எண்.20) நடைபெறும்.
- அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அறை எண்.20)திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
- நீதிமன்றங்களில் சில குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்கள், இனிமேல் இ- பைலிங் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
- எந்தெந்த வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
நீதிமன்றங்களில் சில குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்கள், இனிமேல் இ- பைலிங் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இப்புதிய நடைமுறை செப்டம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகள் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், சிவில் வழக்குகள் மற்றும் மேல்முறையீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்களை நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இவற்றில், இ- கோர்ட்டு திட்டத்தின் கீழ், சென்னை ஐகோர்ட்டு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி குறிப்பிட்ட வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் வாயிலாக தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் எந்தெந்த வழக்குகள் மற்றும் மனுக்களை இ- பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் மனுக்கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், வாடகை கட்டுப்பாடு மற்றும் வாடகை கட்டுப்பாடு மேல்முறையீடு வழக்குகள், மறுசீராய்வு மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் தனிநபர் புகார், டிரஸ்ட் ஒரிஜினல் மனுக்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனம் சார்ந்த மனுக்களை இ-பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.
இது தொடர்பான முழு விவரங்களை மாவட்ட நீதிமன்ற வெப்சைட் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
- எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்:
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் கல்லூரிகளில் 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன்படி 9 கல்லூரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரிகளில், 9 கல்லூரிகளில் இருந்து 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர்.கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன.
மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு புதிதாக தேர் செய்யப்பட்டு விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது.
- விழா காலங்களில் மட்டுமே பொது மக்களை தேரை பார்த்து தரிசனம் செய்ய இயலும்.
உடுமலை:
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கி வருகின்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சூலத்தேவரை தரிசனம் செய்து மகிழ்வார்கள். பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு புதிதாக தேர் செய்யப்பட்டு விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலையில் நிறுத்தப்பட்டுள்ள தேரை பாதுகாக்கும் பணி கோவில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் தேரை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடியில் செய்யப்பட்ட கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக கொட்டகை அமைத்து தேர் மூடப்பட்டிருக்கும். இதனால் விழா காலங்களில் மட்டுமே பொது மக்களை தேரை பார்த்து தரிசனம் செய்ய இயலும்.
ஆனால் கோவில் நிர்வாகத்தின் புதிய முயற்சியால் நாள்தோறும் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் ஆண்டு முழுவதும் 3 புறங்களில் இருந்து தேரை பார்த்து தரிசனம் செய்யலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






