என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை 4-ந்தேதி புதன்கிழமை காலை 9 முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூா்,:

    திருப்பூர் திருநகா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 4-ந்தேதி புதன்கிழமை காலை 9 முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருநகா், பாரப்பாளையம், செங்குந்தாபுரம், பூச்சக்காடு, கிரி நகா், எருகாடு (ஒரு பகுதி), கே.வி.ஆா்.நகா் பிரதான சாலை, மங்கலம் சாலை, அமா்ஜோதி காா்டன், கே.என்.எஸ்.காா்டன், ஆலங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆா்.ஆா்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப் பள்ளி 1, 2-ஆவது தெரு, பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதி, எஸ்.ஆா்.நகா் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகா், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், திரு.வி.க.நகா், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகா், புவனேஸ்வரி நகா், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகா், திருவள்ளுவா் நகா், கொங்கணகிரி கோயில், ஆா்.என்.புரம் (ஒரு பகுதி), கல்லூரி சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    • அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா ( வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியா மணியம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பெருந்தொழுவு கரியாம்பாளையம் என்ற இடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகவரி கேட்டு மோகனப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை தள்ளி விட்டு சென்றனர். இதில் நிலைத்தடுமாறி விழுந்த மோகன பிரியாவுக்கும் குழந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து மர்மநபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    பல்லடம்:

    தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன்படி பல்லடம் வட்டாரம் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்

    இந்த முகாமில், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சுகாதாரத்துறையினருக்கு வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே போல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கவும் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது.
    • வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    பல்லடம்,

    பல்லடம் கடைவீதியில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில்,தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பொன்காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், பல்லடம் அறநிலையத்துறை ஆணையர் ராமசாமி, திருப்பணிகுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்தும், வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    • திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியில் செத்த கோழிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • அவர்களிடம் இருந்து 22 கிலோ செத்த கோழிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அழித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியில் செத்த கோழிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாநகர அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் பாண்டியன்நகர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பெண்கள் சாலையோரம் அமர்ந்து சிக்கன் என்ற பெயரில் கோழிகளை விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அந்த இருவரும் செத்த கோழிகளை மஞ்சள் நிற பவுடர் மற்றும் மஞ்சள் பூசி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 22 கிலோ செத்த கோழிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அழித்தனர். மேலும் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறும்போது "பொதுமக்கள் பொதுவாக கோழிகள் வாங்கும்போது தங்கள் கண்முன்பே கோழியை உரித்து புதிதாக வாங்க வேண்டும். கோழியின் தோல் கடினமாகவும், வெளுத்து போயும் இருந்தால் அது செத்த கோழி என்று அறிந்து கொள்ளலாம்.

    இதுபோன்ற செத்த கோழிகள் விற்பனை மற்றும் உணவு தொடர்பான எந்த புகாராக இருந்தாலும் 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

    மங்கலம்,அக்.2-

    திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமானது சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.முகாமிற்கு திருப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். நித்யா முருகேசன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி இலவச சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வகித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திமுக., கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன், திருப்பூர் ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, பெருமாநல்லூர் வட்டார மேற்பார்வையாளர் வரதராசன், மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.சங்கவி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் முகமது இத்ரீஸ், ராதாநந்தகுமார், பால்ராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் இருதய நோய் , சர்க்கரை நோய், தோல் நோய், காசநோய், கண் நோய்,பொது மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

    • சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
    • போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

     அவிநாசி

    அவிநாசி நகரப் பகுதியில் வைக்கப்படும் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.

    இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், சாலையோர கடைகள் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.

    இதனைக் கண்டித்தும், சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.சங்க பொருளாளா் தனசேகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் காா்த்திகேயன், மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் ஈசுவரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    • சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன
    • தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும்

    காங்கயம்,அக்.2-

    காங்கயம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கனிராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. நேரடி ஆய்வின்போது, கடைகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி நீட்டித்து வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் தங்களது கடைகளுக்கு முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாவே அகற்றி கொள்ள வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் அபராத தொகையும் வசூலிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும்
    • ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும்

    திருப்பூர்:

    காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஒரு நாள் ஒரு மணி நேரம் தூய்மைக்காக நம்மை ஈடுப்படுத்திக்கொள்வோம் என்ற திட்டத்தை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே, திருப்பூர் ரெயில் நிலையம் சார்பில் திருப்பூர் ெரயில் நிலையத்தில் தூய்மைக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தூய்மை பணியும் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ெரயில்வே உதவி வணிக மேலாளர் ஷியாமல் குமார் கோஷ், சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசகர் குழு உறுப்பினர் சுரேஷ் குமார், துணை மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    உதவி வணிக மேலாளர் பேசுகையில், ெரயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர்
    • திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி முதல் நவராத்திரி தொடங்குகிறது. இதையொட்டி 9 நாட்கள் வீடுகளில் கொலு வைப்பதை, பல தலைமுறை கடந்து பலரும் பின்பற்றி வருகின்றனர். கடவுள்களின் சிலைகள், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், புராண கதைகளை கண்முன் கொண்டு வரும் பொம்மைகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், பறவை, விலங்கினங்கள் என பல வகை பொம்மைகளை அலங்கரித்து வைப்பர். தற்போது அவற்றோடு சேர்ந்து மத சகிப்புத்தன்மையை போற்றும் வகையில் மும்மத கடவுள்களின் சிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த வனங்களின் தோற்றம், வளம் நிறைந்த எதிர்காலம் நம் தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் நிறுத்தி பொம்மை அலங்காரங்களை வைக்கின்றனர். நவராத்திரி தொடங்க உள்ளதையடுத்து பொதுமக்கள் விதவிதமான பொம்மைகளை வாங்க தொடங்கி உள்ளனர்.

    அதற்கேற்ப பொம்மை தயாரிப்பாளர்களும், மக்களை ஈர்க்கும் வகையிலான பல்வேறு பொம்மைகளை அழகழகாக தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர்.திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதயா சங்கத்தில் 60 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விலை மதிப்புள்ள பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    விநாயகர் கேரம் போர்டு விளையாடுவது, தசாவதார தோற்றம், ராமர் பாலம், சுப நிகழ்ச்சிகளில் கீழே அமர்ந்து உணவருந்துவது, காவிரியாறு உருவான வரலாறு, விஸ்வகர்மா உள்ளிட்ட பொம்மைகள் உள்ளன.

    நவராத்திரிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள போதும், கொலு அலங்காரத்துக்கு பெண்கள் பொம்மைகளை சேகரிக்க தொடங்கி உள்ளனர்.

    • 1031 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளூர் திட்டக் குழும பகுதியாக உத்தேசிக்கப்பட்டு, கடந்த 2019 ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
    • முழுமையாக கம்ப்யூட்டரில், இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 1031 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளூர் திட்டக் குழும பகுதியாக உத்தேசிக்கப்பட்டு, கடந்த 2019 ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து குடியிருப்புகள் அதிகரிக்கும் பகுதிகள், முழுமை திட்டப்பகுதிகளாக கண்டறிந்து அறிவிக்கும் விதமாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    இதில் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள் இணைந்து பகுதி வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8 மீ., அளவுக்கும் குறைவான பொது வழிப்பாதை அமைந்த குடியிருப்பு பகுதிகள் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டது.

    இதில் முதல் மண்டலத்தில் 229 குடியிருப்பு பகுதிகள்,2 வது மண்டலத்தில் 109 பகுதிகள், 3 வது மண்டலத்தில் 274 பகுதிகளும், நான்காவது மண்டலத்தில் 100 குடியிருப்பு பகுதிகள் இந்த வரையறைக்குள் உள்ளது கண்டறியப்பட்டது.மண்டல வாரியாக இக்குடியிருப்பு பகுதி அமைந்துள்ள வார்டு எண், வீதி பெயர், வீதியின் அகலம் ஆகியன கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு பகுதி வாரியாக குறியீட்டு எண்ணும் வழங்கப்பட்டது. இப்பணி முழுமையாக கம்ப்யூட்டரில், இதற்கான பிரத்யேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள், நகராட்சி நிர்வாக ஆணையகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இப்பகுதிகள் முழுமைத் திட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கட்டட அனுமதி வழங்குவதில் சில நடைமுறைகள் எளிதாக்கப்படும்.முழுமைத்திட்ட பகுதி மற்றும் குறுகலான வீதிகள் அமைந்த பகுதி என்ற நிலையில் கட்டடங்களின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் திறந்த வெளியிடங்கள் விடுவதில் விதிமுறைகளில் தளர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும்.

    திருப்பூர்,அக். 2-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு, இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு கட்டணமாக 200 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், பங்கேற்க அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் சேர்க்கை கட்டணமாக 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் கட்டணம் செலுத்தவோ, சான்றிதழ் சமர்ப்பிக்கவோ தவறினால் சேர்க்கை ரத்தாகி விடும்.

    மேலும் விபரங்களுக்கு 94886 35077/94864 25076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×