என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    தாராபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மணக்கடவு ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மணக்கடவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் எஸ். சுப்பிரமணி, ஊராட்சி துணைத்தலைவர் மங்கலம் கு.செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி. செந்தில்குமார் கலந்து கொண்டார். தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 15 தீர்மானங்கள் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் பதிலளித்து பேசினார். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.சகுந்தலா, முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராஜதுரை, ஒன்றிய தி.மு.க. பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் சகுந்தலா, ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அதிகாரி, பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலர் ரேவதி நன்றி கூறினார்.

    • கடந்த 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல், உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டி பேசினார்கள்.

    • பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.
    • பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

    உடுமலை:

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பாரத இயக்கம் தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் முன்னிலை வகித்தார். ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி சின்னதுரை பூச்செடிகள் மற்றும் தொட்டிகளை பள்ளிக்கு வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் பூச்செடிகளை நடவு செய்தனர்.

    அப்போது பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் பற்றிய விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இதில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் கோகுலப்பிரியா, முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார். 

    • அணையின் கரையோரப் பகுதியில் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தனர்.
    • பஞ்சலிங்க அருவியில் விழுந்த மிதமான தண்ணீரில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளம் மற்றும் திருமூர்த்தி அணை பூங்கா ஆகிய பகுதிகளில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதே போல அமராவதி அணை பூங்கா மற்றும் அருகில் உள்ள முதலைப் பண்ணைகளுக்கும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட ,மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை காலை முதலில் திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்தன. அணையின் கரைகளில் அமர்ந்து இயற்கையை ரசித்த சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் விழுந்த மிதமான தண்ணீரில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அணை பகுதியில் உள்ள வண்ண மீன் காட்சியகத்தை கண்டுகளித்தனர். குழந்தைகளோடு பூங்காவில் அமர்ந்தும் அணையின் கரையோரப் பகுதியில் அமர்ந்தும் உணவு உண்டு மகிழ்ந்தனர்.

    இதே போல் அமராவதி அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அணையின் அருகே அமைந்துள்ள முதலைப்பண்ணைக்கு சென்று முதலைகளை கண்டு மகிழ்ந்ததோடு முதலைப் பண்ணைக்குள் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்கினர்.

    • தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.
    • முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    உடுமலை,அக்.3-

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகே திறக்கப்பட்டது.கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி கட்சி முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு திறந்து வைத்தார். முன்னதாக காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜல்லிபட்டி முருகன், கிறிஸ்தவ சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட் பால், எல்எல்எப்., அரசு போக்குவரத்து கழகம் மாநில துணைச் செயலாளர் சிடிசி சத்தியமூர்த்தி, துப்புரவு பணியாளர்கள் மேம்பட்டு மைய மாநில துணை செயலாளர் விடுதலைமணி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் ஈஸ்வரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சயீத் இப்ராஹிம், உடுமலை ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல்,உடுமலை நகர செயலாளர் ரவிக்குமார் , குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டி பாபு ,மகளிர் விடுதலை இயக்கம் லட்சுமி,ராமாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
    • காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பெருமாள் மலைமீது குடி கொண்டுள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை விழா மிகவும் சிறப்பாக நடந்தது.

    இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளுக்கு துளசி மாலைகளையும், வண்ண மலர்களையும் அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. முடிவில் காங்கயம் நண்பர்கள் அன்னதான கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
    • காங்கயம் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கணேஷ்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். இதுபோல் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை காங்கயத்தில் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை, குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     திருப்பூர்

    திருப்பூர் வடக்கு மாநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணப் பிரச்சாரம், பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.வடக்கு மாநகரின் கிழக்குப் பகுதியில் கருமாரம்பாளையத்தில் இருந்து ஒரு குழுவும், மேற்குப் பகுதியில் சாமுண்டிபுரம் எம்ஜிஆர் நகரில் இருந்து ஒரு குழுவும் புறப்பட்டு வடக்குப் பகுதியில் பல்வேறு மக்கள் குடியிருப்புகள் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் சென்று குமரானந்தபுரம் சிவன் தியேட்டர் சந்திப்பு அருகே சங்கமித்தனர். இதில் 60 இளைஞர்கள் பங்கேற்றனர்.

    பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பனியன் தொழிலுக்கு மூலப்பொருளாக உள்ள பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.திருப்பூரில் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரின் வடக்குப் பகுதியில் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாக்க வேண்டும். நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்த குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,

    பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமித்து, அளிக்கப்படும் சிகிச்சை விபரத்தை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் அனைத்து பேருந்து நிலையங்களையும் இணைக்கக்கூடிய வகையிலும், கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளையும் முழுமையாக இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கு பகுதியில் மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆராய்ச்சிக்கான நிதியுதவியை மாநில உயர்கல்வி மன்றம் வழங்குகிறது.
    • எம்.எஸ்சி., பயோ வேதியியல், லைப் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், பயோ வேதியியல் துறை சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்க, ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த ஆராய்ச்சிக்கான நிதியுதவியை மாநில உயர்கல்வி மன்றம் வழங்குகிறது. எம்.எஸ்சி., பயோ வேதியியல், லைப் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உரிய தகுதியுடையவர்கள், டாக்டர் சாரதாதேவி, உதவி பேராசிரியர், பயோ வேதியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை- 641046 என்ற முகவரிக்கு, கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பிற தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    தேவையான சான்றிதழ்கள், பிற விபரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 6-ந்தேதி மாலை, 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
    • குருவாயூர் - ராமேஸ்வரத்திற்கு 496 கி.மீ தூரத்தில் நேரடியாக வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.

    உடுமலை

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை ஆகிய தாலுகா மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் குருவாயூர் - ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டுமென பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ெரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பினர். மனுவுடன் எந்த வழித்தடத்தில் ெரயில் இயக்க வேண்டுமென வரைபடத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

    குருவாயூரில், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும், பாலக்காட்டில் சைலண்ட் வேலி, நெல்லியம்பதி மலை, மலம்புழா அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.ராமேஸ்வரத்தில், ராமநாத சுவாமி கோவில், ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்கா போன்ற முக்கிய புனித தலங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழநியில் முருகன் கோவில் உள்ளது.

    தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பழநி அருகே புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலும் உள்ளது.பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும், வால்பாறை மலை, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. உடுமலை அருகே, திருமூர்த்தி மலை கோவிலும்,மூணாறு, அமராவதி போன்ற வனப்பகுதிகளும் உள்ளன.

    ஆனால் பொள்ளாச்சி - உடுமலை - பழநி - ஒட்டன்சத்திரம் - மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரத்துக்கு நேரடி ெரயில் வசதியில்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    எனவே, குருவாயூர் - ராமேஸ்வரம் இடையே குறைந்த தொலைவாக உள்ள, 496 கி.மீ., தூரத்துக்கு நேரடியாக வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும்.இந்த ெரயில், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, கேரளா மாநிலத்தின், பொன்னானி, திருச்சூர், பாலக்காடு, ஆலத்தூர் உள்ளிட்ட 4 பாராளுமன்ற தொகுதிகளும், தமிழகத்தின்,பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதி மக்களும் பயன் பெற முடியும்.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, ெரயில் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
    • சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரத்தில் மானியத்திட்டத்தில் கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆரோக்கியமான உணவு வகைகளில் சிறுதானியங்களுக்கு முதலிடம் உண்டு. நமது முன்னோர்கள் காலத்தில் பிரதான உணவாக, தினசரி பயன்பாட்டில் இருந்த சிறுதானியங்கள் தற்போது சிறப்பு உணவாக, எப்போதாவது பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. எனவே மீண்டும் சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்துடன் நடப்பு ஆண்டை மத்திய அரசு சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் மடத்துக்குளம் வட்டாரத்தில் 100 ஏக்கரில் கம்பு மற்றும் 65 ஏக்கரில் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது.

    இது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    மடத்துக்குளம் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தில் 100 ஏக்கரில் கம்பு செயல்விளக்கத் திடல் அமைக்க ஏக்கருக்கு ரூ. 2400 மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும் 65 ஏக்கரில் உளுந்து செயல் விளக்கத்திடல் அமைக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ. 1740 மானியமாக வழங்கப்படவுள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இதுதவிர விவசாயிகள் பயன்பெறும் வகையில் உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள், விதைகள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.அந்தவகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலக சேமிப்புக் கிடங்கில் உயர் விளைச்சல் ரகங்களைச் சேர்ந்த 4 டன் உளுந்து, 12 டன் நெல் விதைகள் இருப்பு உள்ளது. இதுதவிர பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல் விதை 280 கிலோ மற்றும் சோளம் 97 கிலோ இருப்பு உள்ளது. இதனை பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

    இவ்வாறு வேளாண்மைத்துறையினர் கூறினர்.

    • காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
    • நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்

    காங்கயம்,

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

    இதன்படி சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாட்டு சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் உள்ள 68 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 36 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன், 2 பல் கொண்ட காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    மொத்தம் ரூ.14 லட்சத்திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    ×