என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது.
    • அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா, அமராவதி ஆற்றில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் மடத்துக்குளம் தாலுக்கா, தாராபுரம் தாலுக்கா மற்றும் கரூர் மாவட்டத்திலும்சேர்த்து பழையவாய்க்கால் பாசனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், புதிய கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதியும் சேர்த்து 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைத்து வருகிறது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டம் உட்பட நிலத்தடி நீரும் பெருகி ஓரளவுக்கு பயன்பெற்று வருகிறது. ஆனால் அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு கிடைக்கப் பெறாத நிலையில் தேவையான நீரை விட மிகக் குறைந்த நீரே கிடைத்துள்ளது. இந்நிலையில் பாசனப்பகுதியில் தென்னை மரங்கள், நீண்ட கால பயிர்களும் இந்த ஆண்டு பயிரான கரும்பு உட்பட பயிர்கள், நீர் பற்றாக்குறையால் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் துவங்க வேண்டிய காலத்தில் துவங்காத நிலை உள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக பிரதான கால்வாய் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து கொண்டு வருகிறது. நீர் பற்றாக்குறையால் காய்ப்பு இழந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் தண்ணீரை டிராக்டர்களிலும் லாரிகளிலும் விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். அமராவதி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காணும் பயிர்களுக்கு உடனடியாக நீர் பாசனம் செய்ய வேண்டி உள்ளது. அமராவதி அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் உள்ள நீரை பயன்படுத்தி வறட்சியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை தடுத்திடவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் பழைய பாசன பகுதிகளுக்கும் இருக்கிற நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதன் மூலம் ஆற்றில் உள்ள சட்டவிரோதமான 1500 -க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் இந்நீரை பயன்படுத்தும் நிலைமையே இருந்து வந்துள்ளது. இதனால் பாசனம் பெற வேண்டிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

    ஆகவே, இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக நீரை எடுக்கின்ற பம்பு செட்டுகளின் மின் இணைப்புகளை துண்டித்து அதன் மூலம் அபரிமிதமாக தண்ணீரை எடுப்பதை தடுத்து நிறுத்திட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் சமமான அளவில் நீர் திறக்கவும் செய்ய வேண்டும். தலா 800 கன அடி வீதம் குடிநீர் தேவை உட்பட திறக்க வேண்டுமெனவும், காலதாமதம் செய்யாமல் காய்ந்து வரும் நீண்ட கால பயிர்களான தென்னை, கரும்பு மற்ற பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வறட்சியான நேரத்தில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பிலும், அப்பகுதி விவசாயிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பைப் துரு பிடித்து பல வருடங்கள் ஆகிறது.
    • இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால சமுத்திரம் அருகில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பைப் துரு பிடித்து பல வருடங்கள் ஆகிறது. இதுகுறித்து புகார் நோட்டில் எழுதி வைத்து 1 மாதம் ஆகிறது. இதுவரை அந்த பைப் மாற்றப்படாமல் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த தண்ணீர் 9 பகுதிகளுக்கு செல்கிறது. அதாவது, கற்பகாம்பாள் நகர், லண்டன் சிட்டி, சி.எஸ்.ஐ. காலனி, பாலசமுத்திரம், பொடாரம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி மற்றும் பொடாரம்பாளையம் தொடக்க பள்ளிக்கும் இந்தத் தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள், பள்ளி மாணவ -மாணவிகள் நலன் கருதி உடனடியாக இந்த தண்ணீர் வடியும் கேட் வால்வு மற்றும் துரு பிடித்த பைப்பை புதுப்பித்து தர வேண்டும் என்று அப்பகுதியின் சமூக ஆர்வலரும், பா.ஜ.க. பிரமுகருமான குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வீடு திரும்பினர்.
    • தங்க மோதிரம், கம்மல் உள்ளிட்ட 1 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி கோட்டப்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவரது மகன் சின்னான் , கூலித் தொழிலாளி.சின்னான் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவில் பார்த்தபோது அதில் வைத்திருந்த தங்க மோதிரம், கம்மல் உள்ளிட்ட 1 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

    • சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
    • பிளாஸ்டிக்கின் நச்சுப் பகுதிகள் கடல் உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்றடைகின்றன.

    திருப்பூர்:

    வன உயிரின வாரத்தை முன்னிட்டு திருப்பூர் வனச்சரகம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டாண்மை என்ற மையகருத்தை வலியுறுத்தி இன்று நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் இல்லா பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும் கலை நிகழ்ச்சி நடத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

    வனச்சரக அலுவலர் பேசுகையில், நெகிழி பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றை பறவைகளும், விலங்குகளும் சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் இறந்து விடுகின்றன. பிளாஸ்டிக்கின் நச்சுப் பகுதிகள் கடல் உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்றடைவதால் பிளாஸ்டிக் மனித ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உணவு சங்கிலிகள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். பிளாஸ்டிக் உணவு சங்கிலியின் சிறிய உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் .அதுமட்டுமல்லாமல் நமது சந்ததிகளை பாதிக்கும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வனவர்கள் முருகானந்தம், வெங்கடாசலம், உமாமகேஸ்வரி, சரகப்பணியாளர் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், செர்லின், தினேஷ்கண்ணன், ஜோஷ்வா கிஷோர் ஆகியோர் தலைமையில் 55க்கும் மேற்பட்ட அலகு - 2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் சரணாலயத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • மின் இணைப்புகளை மாணவர்கள் தொடாத வகையில் வகுப்பறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • பராமரிப்பு நிதி ஒதுக்கியிருப்பதால், இத்தொகை கொண்டு அத்தியாவசிய பணிகளை முடிக்க வேண்டும்.

    தாராபுரம்:

    வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் இருந்து துவங்குகிறது. பள்ளிகளுக்கு முதற்கட்ட பராமரிப்பு நிதி ஒதுக்கியதால் மழை துவங்கும் முன்பே பராமரிப்பு வேலைகள் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதோடு பயன்படுத்தாத, இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைத்தல், தொங்கும் நிலையில் மின் வயர்கள் இருந்தால் அப்புறப்படுத்துதல் அவசியம். மின் இணைப்புகளை மாணவர்கள் தொடாத வகையில் வகுப்பறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தண்ணீர் தேங்கும் வகையில், பள்ளங்கள் இருந்தால் அதை சமன் செய்வதோடு, பள்ளி வளாகத்திற்குள் கிணறு, ஆழ்துளை கிணறு போன்ற அமைப்புகள் இருந்தால், மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தினசரி சுத்தம் செய்வதோடு, குடிநீர் தொட்டி சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி கட்டடங்களின் அருகில் மரங்கள் இருந்தால், அதன் காய்ந்த இலைகள், குச்சிகள், மேற்கூரையில் இருக்கும் பட்சத்தில், மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதை அப்புறப்படுத்துவதோடு வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பராமரிப்பு நிதி ஒதுக்கியிருப்பதால், இத்தொகை கொண்டு அத்தியாவசிய பணிகளை முடிக்க வேண்டும். தண்ணீர் தேங்காத வகையில் வளாகத்தை தூய்மைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். 

    • தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.
    • கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பூர்:

    கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரம் - மங்களூர் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளன.சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    ெரயில் எண் (06049) தாம்பரம் - மங்களூர் சிறப்பு ெரயில் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

    ெரயில் எண் (06050) மங்களூர் - தாம்பரம் சிறப்பு ெரயில் மங்களூருவில் இருந்து 14, 21 மற்றும் 28 ம் தேதிகளில் மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.நிறுத்தங்கள்: சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பையனூர் மற்றும் காசர்கோடு வரை செல்லும்.

    • கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு முகாம்களை நடத்தத் தொடங்கினோம்.
    • அரசு காப்பீட்டுத்திட்டம் மற்றும் எங்களது அமைப்பின் பங்களிப்புடன் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் நாளை 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இதுகுறித்து தொண்டு நிறுவனத்தின் திருப்பூா் பிரிவு நிா்வாகிகள் கூறியதாவது:-

    கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு 'இதயம் காப்போம்' என்ற குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை, ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்களை நடத்தத் தொடங்கினோம்.

    தற்போது 12 ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள வித்யா மந்திா் பள்ளியில் நாளை 8 -ந் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில், இருதயப் பிரச்னை உள்ள பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ள சிறுவா், சிறுமியா்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.

    அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் எக்கோ காா்டியோகிராம் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குவா். தேவைப்படுபவா்களுக்கு தமிழ்நாடு அரசு காப்பீட்டுத்திட்டம் மற்றும் எங்களது அமைப்பின் பங்களிப்புடன் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.அதேவேளையில் காப்பீட்டுத் திட்ட வசதி இல்லாதோருக்கும் இதே வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 'இதயம் காப்போம்' இலவச இருதய சிகிச்சை முகாம் மூலம் 380 குழந்தைகளின் உயிா் காப்பாற்றப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அ.கந்தசாமி தலைமை தாங்கினார்.
    • சந்திராயன்-3 குறித்து வெளிவந்த படங்கள், கட்டுரைகள் மாணவ-மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளியில் சந்திராயன்-3 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அ.கந்தசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி சந்திராயன்-3 குறித்து விரிவாக பேசினார். மேலும் ஆசிரியர் அக்பர் அலி விண்வெளி விஞ்ஞானிகள், இயக்குநர், தலைவர்கள் ஆற்றிய பணிகள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.

    இதில் உலக அளவில் சரித்திரம் படைத்த இந்திய விண்வெளி சந்திராயன்-3 குறித்து வெளிவந்த படங்கள், கட்டுரைகள் மாணவ-மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. முடிவில் உதவி தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.

    • சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.
    • அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 41). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், சீனிவாசன் என்பவரிடம் மொத்தமாக அரிசி கொள்முதல் செய்து வியாபாரமும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அரிசி வியாபாரம் செய்த வகையில் பணம் ரூ.17 லட்சத்தை கதிரவன் பல நாட்களாக சீனிவாசனுக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 4-ந்தேதி இரவு கதிரவன், திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் அருகே உள்ள ஈ.பி.காலனி விநாயகர் கோவில்பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் காத்திருந்த கடத்தல் கும்பல் கதிரவனை மடக்கி பிடித்து காரில் ஏற்றி கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது காரில் செல்லும் போது சத்தமிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று கதிரவனை மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள் கதிரவனை உடுமலை செல்லும் வழியில் ஜல்லிப்பட்டி என்ற ஊரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

    இந்நிலையில் கடத்தல் கும்பலிடம், கதிரவன் எனக்கு அவினாசியை சேர்ந்த ஒருவர் பணம் தருவதாக கூறி உள்ளார். அவரிடம் சென்றால் பணம் வாங்கி கொள்ளலாம் என்று கூறி உள்ளார். இதனை அப்படியே நம்பிய கடத்தல் கும்பல், கதிரவனை அவினாசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்து, அதன்படி அவினாசி வந்தனர். அங்கு ஒரு டீக்கடையில் அமர்ந்து இருக்கும்போது ஒரு போலீஸ்காரர் டீக்கடைக்கு வந்துள்ளார். உடனே கதிரவன், அவரிடம் தன்னை ஒரு கடத்தல் கும்பல் கடத்தி வந்ததாகவும், தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றுமாறும் கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த போலீஸ்காரர் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் அங்கேயே மடக்கி பிடித்தார். தொடர்ந்து அவினாசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்தது காந்திநகர் என்பதால் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் ( 41) , பிரவீன் ( 26), சதீஸ் ( 24) என தெரியவந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சீனிவாசன் உள்ளிட்ட கடத்தல் கும்பலை, போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூத்தம்பாளையம் சோழன் நகர் பகுதியில் உள்ள ஒரு முட்டை மொத்த விற்பனை செய்யும் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உடைந்த முட்டைகளில் நோய் தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல் குழுவினர் கூத்தம்பாளையம் சோழன் நகர் பகுதியில் உள்ள ஒரு முட்டை மொத்த விற்பனை செய்யும் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 12 ஆயிரம் முட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

    ஆய்வின்போது ஒரு அறையில் உடைந்த மற்றும் அழுகிய நிலையில் கெட்டுப்போன 2 ஆயிரம் முட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை ரோட்டோரத்தில் உள்ள சிறிய கடைகளுக்கு ஆம்லெட், ஆப்பாயில் தயாரிப்பதற்காகவும், சிறிய பேக்கரிகளில் கேக் தயாரிக்கவும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்தமுட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட முட்டை விற்பனை செய்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது போன்ற முட்டைகளை பண்ணையில் இருந்து இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சிறு வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்வது தெரியவந்தது. முட்டை பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி ஆகும் உடைந்த முட்டைகளை தாங்களே பாதுகாப்பான முறையில் அழிக்க வேண்டும்.

    உடைந்த முட்டைகளில் நோய் தொற்று பரப்பக்கூடிய கிருமிகள் பெருகும் வாய்ப்பு உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி போன்ற உடல்உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற உடைந்த முட்டைகளை எந்த பண்ணையில் இருந்து வாங்கி வந்தார்கள், யார் யாரெல்லாம் இதில் தொடர்பு உடையவர்கள் என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ,000 மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.கறிக்கோழி நுகா்வை பொறுத்தே பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினா் தினசரி விலை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றனா். புரட்டாசி விரதம் காரணமாக தற்போது கறிக்கோழி நுகா்வு குறைந்துள்ளது.இதனால் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி 25 சதவீதம் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சின்னசாமி கூறியதாவது:-

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கோழிகள் உற்பத்தியாகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகினறன. தற்போது புரட்டாசி மாத விரதம் காரணமாக கோழி இறைச்சி நுகா்வு குறைந்துவிட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கம் அடைவதை தவிா்க்கும் வகையில் 25 சதவீதம் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோழி இறைச்சி நுகா்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

    • கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
    • அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    பொங்கலூா் ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

    இது குறித்து பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் ஜோதிபாசு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை பணியாளா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    ×