search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் கடத்தல்: 3 பேர் கைது
    X

    திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் கடத்தல்: 3 பேர் கைது

    • சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.
    • அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 41). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், சீனிவாசன் என்பவரிடம் மொத்தமாக அரிசி கொள்முதல் செய்து வியாபாரமும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அரிசி வியாபாரம் செய்த வகையில் பணம் ரூ.17 லட்சத்தை கதிரவன் பல நாட்களாக சீனிவாசனுக்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சீனிவாசன், தனது நண்பர்கள் உதவியுடன் கதிரவனை கடத்த திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 4-ந்தேதி இரவு கதிரவன், திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் அருகே உள்ள ஈ.பி.காலனி விநாயகர் கோவில்பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் காத்திருந்த கடத்தல் கும்பல் கதிரவனை மடக்கி பிடித்து காரில் ஏற்றி கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது காரில் செல்லும் போது சத்தமிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று கதிரவனை மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள் கதிரவனை உடுமலை செல்லும் வழியில் ஜல்லிப்பட்டி என்ற ஊரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.

    இந்நிலையில் கடத்தல் கும்பலிடம், கதிரவன் எனக்கு அவினாசியை சேர்ந்த ஒருவர் பணம் தருவதாக கூறி உள்ளார். அவரிடம் சென்றால் பணம் வாங்கி கொள்ளலாம் என்று கூறி உள்ளார். இதனை அப்படியே நம்பிய கடத்தல் கும்பல், கதிரவனை அவினாசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்து, அதன்படி அவினாசி வந்தனர். அங்கு ஒரு டீக்கடையில் அமர்ந்து இருக்கும்போது ஒரு போலீஸ்காரர் டீக்கடைக்கு வந்துள்ளார். உடனே கதிரவன், அவரிடம் தன்னை ஒரு கடத்தல் கும்பல் கடத்தி வந்ததாகவும், தன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றுமாறும் கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த போலீஸ்காரர் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் அங்கேயே மடக்கி பிடித்தார். தொடர்ந்து அவினாசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்தது காந்திநகர் என்பதால் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அனுப்பர்பாளையம் போலீசார் அவினாசிக்கு விரைந்து சென்று கதிரவனை மீட்டு, அவரை கடத்திய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் ( 41) , பிரவீன் ( 26), சதீஸ் ( 24) என தெரியவந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சீனிவாசன் உள்ளிட்ட கடத்தல் கும்பலை, போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×