என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராயல் ஏஞ்சல் டுடோரியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் வக்கீலுமான ஜி.கே.பிரகாஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.

    இதில் போக்குவரத்து விதிகள், மனித உரிமைகள், பொதுவான சட்ட விதிகள் போன்றவை விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் தங்கராஜன், தாளாளர் கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
    • இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி, அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறன் சதவீதம் குறித்து அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும், இதுபோன்று மருத்துவ முகாம்கள் இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்திலும்,நாளை 11-ந்தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளிரோடு உடுமலைப்பேட்டையிலும் நடக்கிறது.

    12-ந்தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , 13-ந் தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,16-ந்தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வளமையம், 17 -ந்தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 18-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி , 19-ந்தேதி பொங்கலூர் பி.யுவி. என்.தொடக்கப்பள்ளி , 26-ந்தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி , 27-ந்தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,31-ந்தேதி மூலனூர்அரசு மேல்நிலை ப்பள்ளி மற்றும் 1.11.2023 அன்று திருப்பூர் வடக்கு தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு மருத்துவ முகாம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். எனவே சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டாரங்கள் தோறும் நடைபெறுவதால் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இம்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை, உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதேப்போல் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்ததும் பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒரே நேரத்தில் 2 பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்றன.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் பஸ்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின. 2 பேருந்துகளிலும் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக பல்லடம் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை , உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    சமீபத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது அரசு பஸ்சின் படிக்கட்டு அருகே நின்ற பயணி ஒருவர் வாசல் வழியாக கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலியானார். அதேபோல் பயணிகள் சிலர் பஸ் மோதி காயமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று விபத்துக்குள்ளான பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இயக்கப்பட்ட அரசு பஸ், நேரம் காரணமாக அதிவிரைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பஸ்சில் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனவே பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் போது பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. மேலும் பல்லடம் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறுகிறது. அங்கு காய்கறிகள் மற்றும் சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்து வதற்கு இடம் இல்லாமலும், பஸ்கள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 714 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 1 நபருக்கு தூய்மை பணியின் போது ஒரு கை பாதிப்படைந்த நிலையில் நலவாரியத்தின்கீழ் நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் 8 தூய்மைபணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்டஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித்குமார், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்க உபதலைவர் கனிமொழி பத்மநாபன், தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 9, 11 ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • 30ஆயிரம் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30ஆயிரம் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9, 11 ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இத்திட்டதின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத்தேர்வு முகமையால் 29.9.2023 அன்று நடத்தப்படவிருந்த YASASVI நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேற்படி எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் 8மற்றும் 10 ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள்பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத்தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயேஇந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானதுவழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National ScholarshipPortal (https://Scholarships.gov.in ) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும்அதிகாரமைளித்தல் துறையின் இணையதளத்தின் (https://socialjustice.gov.in ) என ,இணைய தளங்கள் தொடங்கிதொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருப்பூர்:

    உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள்எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள்,உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421 – 2971183 என்ற அலுவலகத்தொலைபேசி எண் அல்லது 99405 90165 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15-12-2023-க்குள் மாவட்டத்தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம்,அறை எண்.608, 6-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் என்றமுகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன.

    அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

    Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.

    வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    வருகிற 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

    • மின்கணக்கீட்டாளர் மொபைல் போனில் கணக்கீட்டு செயலியை பதிவேற்றிக்கொள்ளலாம்.
    • சி.டி., (கரன்ட் டிரான்ஸ்பார்மர்) மின் இணைப்புகளில் கணக்கீடு செய்யும் பணி இம்மாதம் தொடங்கியுள்ளது.

    திருப்பூர்:

    மின் வாரியம் சார்பில் ஆண்டுக்கு 6 முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. மின் கணக்கீட்டாளர், மின் கணக்கீட்டு கருவியுடன் சென்று மின்மீட்டரில் உள்ள தகவலை பதிவு செய்கின்றனர். அலுவலகம் சென்று, ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். பின்னரே மின்நுகர்வோருக்கு மின் கட்டணம் எவ்வளவு என்பது தெரியவரும்.

    மின் கணக்கீட்டு பணியை எளிதாக்கும் வகையில், மொபைல் செயலி மூலம் தற்போது மின் கணக்கீடு சோதனை முறையில் மேற்கொள்ளப்படுகிறது. மின்கணக்கீட்டாளர் மொபைல் போனில் கணக்கீட்டு செயலியை பதிவேற்றிக்கொள்ளலாம்.

    ஆப்டிக்கல் கேபிள் எடுத்துச்சென்று, மின்மீட்டர் மற்றும் மொபைல்போனுடன் இணைத்தால் உடனுக்குடன் மின் பயன்பாடு, செலுத்த வேண்டிய கட்டண விவரம், மின்வாரிய இணையதளத்திலும், மின் நுகர்வோருக்கும் சென்றுவிடுகிறது.அனைத்து மாவட்டங்களிலும், முதல்கட்டமாக, சி.டி., (கரன்ட் டிரான்ஸ்பார்மர்) மின் இணைப்புகளில் கணக்கீடு செய்யும் பணி இம்மாதம் தொடங்கியுள்ளது. விரைவில் இதை முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார்.
    • 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    உடுமலை:

    ஆனைமலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில், பாரம்பரிய வேளாண் மேம்பாட்டு திட்டம் செயல்படுகிறது. 2023 - 24ம் ஆண்டு நஞ்சில்லா வேளாண் விளை பொருட்கள் உற்பத்திக்காக வேளாண்துறையால் ஆர்வம் உள்ள 60 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த விவசாயிகள் மூன்று ஆண்டு காலத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடுபொருட்களை தங்கள் தோப்பிலேயே தயாரித்து தென்னை மற்றும் பிற பயிர்களுக்கு குறைந்த செலவில் பயன்படுத்துவது குறித்து, ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.

    மாவட்ட, மத்திய திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்தார். ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். பெரம்பலுார் மாவட்ட சர்வதேச அங்ககசான்றிதழ் பெற்ற விவசாயி மணிவாசன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

    பயிற்சியில், தோப்பினை சுற்றி உயிர்வேலியாக சவுக்கு, வேம்பு போன்ற மரங்கள் நெருக்கமாக வளர்த்தல், மழைக்காலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் விவசாய நிலங்களில் இருந்து வரும் மழைநீர் மற்றும் பாசன நீரை தனியே மடை அமைத்து வெளியேற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும் 20 வகையான பயறு, சிறுதானிய, எண்ணெய் வித்து பலதானியங்கள், விதைப்பு செய்து, 20 -30 நாட்களுக்குள் மடக்கி உழுதல், தென்னை மட்டை போன்ற பண்ணை கழிவுகளை, 3 அடிக்குள் பண்ணையிலேயே மட்க வைத்தல் குறித்து விளக்கப்பட்டது.பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், மீன்கரைசல் ஆகியவற்றை பயிருக்கு தெளிப்பதால், பயிரில் ஏற்படும் வளர்சிதை மாற்ற நன்மைகள், தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    நன்கு மக்கிய மண் புழு உரம், ஒரு ஆண்டு மக்கிய மாட்டு எரு பயன்படுத்துவதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும். முதலாண்டில் இம்முறைகளை திட்டமிட்டு தோப்புகளில் செயல்படுத்தினால், தரம் மற்றும் விளைச்சலில் குறைவு ஏற்படாது.

    இம்முறையை தொடர்ந்து கடைபிடிப்பதால், சர்வதேச ஏற்றுமதியில் ஈடுபடவும், இவ்விவசாய குழுவை சார்ந்த விவசாயிகளின் விளைபொருட்களின் சந்தை விற்பனை விலையை விட பலமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்.
    • டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அர்ச்சனா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா. இவர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலியில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

    இந்த போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலமாக தமிழக நீச்சல் அணிக்கு அர்ச்சனா தேர்வாகியுள்ளார். டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அர்ச்சனா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்

    • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.
    • அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது.

    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சோ்ந்த சிலர் ஆட்களை வைத்து ஆலமரத்தின் கிளைகளை வெட்டியதாக கூறப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.

    இதுகுறித்து தாசில்தார் மோகனன் கூறியதாவது:- ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு ஏற்கனவே அனுமதி கோரியிருந்தனா். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி பெறாத நிலையில் ஆலமரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
    • வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

    பல்லடம்:

    தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய மின்சாரநிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் பனியன் தொழில் சார்ந்த தொழில் அமைப்பினர் மற்றும் சிறு, குறு தொழில் அமைப்பினர் என 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    இந்நிலையில் இன்று தொழில்துறையின் நிலை குறித்து அரசிடம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் துறையினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற தொழில் துறையினர் பலர் கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மேலும் தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர். ஒவ்வொரு தொழில் சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு கலெக்டரிடம் வழங்கினர். முன்னதாக அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் திரண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் மனுக்களை முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் கூறும்போது, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    போராட்டத்தையொட்டி திருப்பூர், பல்லடம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. 

    ×