search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையம் முன்பு விபத்து: அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி 10 பயணிகள் படுகாயம்
    X

    பல்லடம் பஸ் நிலையம் முன்பு விபத்து: அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி 10 பயணிகள் படுகாயம்

    • பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை, உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதேப்போல் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்ததும் பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒரே நேரத்தில் 2 பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்றன.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் பஸ்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின. 2 பேருந்துகளிலும் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக பல்லடம் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை , உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    சமீபத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது அரசு பஸ்சின் படிக்கட்டு அருகே நின்ற பயணி ஒருவர் வாசல் வழியாக கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலியானார். அதேபோல் பயணிகள் சிலர் பஸ் மோதி காயமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று விபத்துக்குள்ளான பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இயக்கப்பட்ட அரசு பஸ், நேரம் காரணமாக அதிவிரைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பஸ்சில் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனவே பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் போது பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. மேலும் பல்லடம் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறுகிறது. அங்கு காய்கறிகள் மற்றும் சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்து வதற்கு இடம் இல்லாமலும், பஸ்கள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×