என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

     திருப்பூர் : 

    பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன சங்கம் பகிர்மான குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் 4-வது மண்டலத்தில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. இந்த பாசனப்பகுதி கடைமடை பகுதியாக உள்ளதால் எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மழைபொழிவும் இல்லாததால் பாசன நிலங்கள் வறண்டு விட்டன. பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் 124 கிலோ மீட்டரில் பிரியும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் ஜீரோ பாய்ண்டில் வினாடிக்கு 131 கன அடி தண்ணீர் வரவேண்டும். ஆனால் 112 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. தற்போது பாசனத்துக்கு 15 நாட்கள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். அதுபோல் இப்போது வரும் நீரின் அளவை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் மனித ஆரோக்கியம் மேம்படுகிறது.
    • பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது

    காங்கயம்  : 

    தற்சமயம் அரிசி உணவே பிரதானமாக உள்ளது. இதனால், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை.

    அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு சத்துக்கள் கொண்ட சோளம், கம்பு, ராகி, திணை, வாலி ,சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் மனித ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரை வாலி பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.

    அதன்படி காங்கயம் வட்டாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலிருந்து சிறுதானிய உற்பத்தி மற்றும் மானிய திட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு வாகனத்தை காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் காங்கயம் வட்டார நகர செயலாளர் சேமலையப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி, வேளாண்மை அலுவலர். ரேவதி,துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், அப்துல்ரஹ்மான், ஜோதிஸ்வரன், கல்யாணராஜன், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வசந்தமுருகன் , தேவராஜ், தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும்.மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார்செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாக பயன்படுத்தலாம். சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களை கொண்டு எளிதாக கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடியது.

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு மழைநீர் –சேகரிப்பின் முக்கியத்துவம் பொருள் குறித்தும், இது சம்பந்தமாக ஊக்குவிக்கும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    மேற்காணும் பொருள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எல்இடி., ஊர்தி மூலம் விழிப்புணர்வு ஓட்டம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் மழைநீரின் முக்கியத்துவத்தை அறிந்து மழைநீர் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    தற்போது மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது. தொடர்ந்து சமூகநலத்துறையின் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியில் தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியார்கள் மாதேஸ்வரன், கண்ணன், உதவி செயற்பொறியார்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும் சசிக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

    • மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக திருப்பூர் சத்யாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

    இதேபோல் இன்று காலை செரிப் காலனி, தோட்டத்து பாளையம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு தேங்கி நின்ற மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வருங்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

    • முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை மின் பகிர்மான வட்டம் கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு மற்றும் குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனவே மேற்கண்ட பகுதியில் வழக்கம் போல் மின்வினியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • பழங்கரை மற்றும் பெருமாநல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.
    • மாதேஸ்வரன்நகர் பிரிவு அலுவலக மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட பகுதியில் மேம்பாட்டுபணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    திருப்பூர்:

    பழங்கரை மற்றும் பெருமாநல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி,ஓ.அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர்,

    திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ, பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், ெதாரவலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதேபோல் மாதேஸ்வரன்நகர் பிரிவு அலுவலக மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட பகுதியில் மேம்பாட்டுபணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை குங்குமபாளையம், தியானலிங்க ரைஸ்மில் ேராடு, கவுண்டம்பாளையம், வாய்க்கால்மேடு, ஆதி நாராயணன் நகர் பகுதியில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம், அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் மின் வினியோகம் தடைபடும் என்று பல்லடம் வட்டமின் பகிரமான செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    • மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணி அளவில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. சமீபத்தில் தான் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவை தூர்வாரப்பட்டது. இதன்காரணமாக மழைநீர் தடையின்றி பாய்ந்தது.

    கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது. திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் 3 வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஊத்துக்குளி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாக பனைமரம் தீப்பற்றி எரிந்தது.பலத்த மழையிலும் பச்சை மரம் தீப்பற்றி எரிவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-55, கலெக்டர் முகாம் அலுவலகம் -68.50, திருப்பூர் தெற்கு அலுவலகம்-12,கலெக்டர் அலுவலகம்-113, அவினாசி தாலுகா அலுவலகம்-17, ஊத்துக்குளி தாலுகா அலுவலகம்-32, தாராபுரம்-42, மூலனூர்-36, குண்டடம்-25, உப்பாறு அணை-12, நல்லதங்காள் ஓடை-6, அமராவதி அணை-2, திருமூர்த்தி அணை-12, திருமூர்த்தி அணை ஐபி-11, காங்கயம்-33, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலகம்- 52, வட்டமலை கரை ஓடை- 31.40, பல்லடம்-6. மாவட்டம் முழுவதும் மொத்தம் 565.90 மி.மீ., மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூர் மாநகரில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் சிதலமடைந்த சாலைகள் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.  

    • பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது.
    • பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெறுகிறது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்திலும், தாராபுரம் தாலுகாவில் சூரியநல்லூர் கிராமத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் துங்காவி கிராமத்திலும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்திலும், உடுமலை தாலுகாவில் கணபதிபாளையம் கிராமத்திலும், ஊத்துக்குளி தாலுகாவில் விருமாண்டம் பாளையம் கிராமத்திலும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் சேனாபதி பாளையம் கிராமத்துக்கு வேலப்ப நாயக்கன் வலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அனைத்து குடிமை பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • இந்நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வழங்க ப்பட்டது .
    • விவசாயிகளால் வழங்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடை உடனே வழங்க வேண்டும் என்றனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி கோனேரிப்பட்டியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 58-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தடுத்து நிறுத்திய போலீசார்

    இந்தநிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து இன்று கோனேரிப்பட்டி பிரிவு அருகே போராட்ட பந்தலில் இருந்து சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருந்த விவசாயி கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவ சாயிகள் தலையில் முக்காடு போட்டு கோஷங்கள் எழுப்பினர் .

    இது குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறு கையில்,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் அணை கட்ட விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கினர். இந்நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வழங்க ப்பட்டது . ஆனால் இன்று வரை தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு பதில் அளிக்காமல் விவசாயிகளின் நில ங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இதனால் கடந்த 58 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். சென்னை தலைமை செய லகத்தை முற்றுகையிட சென்ற எங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விவ சாயிகளால் வழங்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடை உடனே வழங்க வேண்டும் என்றனர்.

    • இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    • அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அவிநாசி:

    அவிநாசி சுற்றுவட்டாரத்தில் நடப்பாண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவிநாசியை அடுத்த புதுப்பளையம் விநாயாகா் கோவிலில், மழை வேண்டியும், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற வேண்டியும் பொதுமக்கள் மழைச் சோறு வாங்கும் சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டனா்.

    இதையடுத்து, கன்னிப் பெண்களுடன் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து விநாயகா் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனா்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    அவிநாசி சுற்றுவட்டடாரத்தில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னோா்கள் நம்பிக்கைப்படி மழை வேண்டி வீடுவீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்து, விநாயகருக்குப் படையலிட்டு அனைவரும் பிரசாதமாக எடுத்துக்கொள்வோம்.

    இதையடுத்து மழையில்லாத ஊரில் குடியிருக்க மறுத்து விவசாயிகள் பயன்படுத்தும் கூடை, முறம் ஆகியவற்றை ஊா் எல்லையில் எரிந்து விட்டு பெண்கள் ஊரைவிட்டு சென்றுவிடுவா். பின்னா் மழை வந்துவிட்டது என்று அவா்களை அழைத்து வந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்துவோம்.

    இந்த சிறப்பு வழிபாடுகள் மூலம் உடனடியாக மழை வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மழைவேண்டி மழைச்சோறு வழிபாடு நடத்தினோம். மேலும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறக் கோரி கூட்டுப்பிரார்த்தனை செய்யவுள்ளோம் என்றனா். :

    • உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
    • அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    திருப்பூர்:

    குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி., வன்னியபெருமாள் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக திருப்பூா், அவிநாசி சாலை அணைப்புதூா் அருகே உள்ள காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது அங்கு 1,080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    • நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
    • உடுமலையில் உள்ள டென்னிஸ் கிளப்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது.

    திருப்பூர்:

    உடுமலையில் உள்ள டென்னிஸ் கிளப்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர் கபில் கைலாஸ் 17 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்தார். 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் மாணவர்கள் பிர்த்திவ் ஆர்யா மற்றும் கபில் கைலாஸ் முதலிடம் பெற்று மாநில அளவிலான ேபாட்டிக்கு தேர்வு பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மோகன் கே.கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ×