search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் பலத்த மழை  -  வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி
    X
    மழையினால் சிரமத்துக்குள்ளான வாகன ஓட்டிகள். 

    திருப்பூர் மாவட்டத்தில் பலத்த மழை - வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    • மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணி அளவில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. சமீபத்தில் தான் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவை தூர்வாரப்பட்டது. இதன்காரணமாக மழைநீர் தடையின்றி பாய்ந்தது.

    கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது. திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் 3 வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஊத்துக்குளி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாக பனைமரம் தீப்பற்றி எரிந்தது.பலத்த மழையிலும் பச்சை மரம் தீப்பற்றி எரிவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-55, கலெக்டர் முகாம் அலுவலகம் -68.50, திருப்பூர் தெற்கு அலுவலகம்-12,கலெக்டர் அலுவலகம்-113, அவினாசி தாலுகா அலுவலகம்-17, ஊத்துக்குளி தாலுகா அலுவலகம்-32, தாராபுரம்-42, மூலனூர்-36, குண்டடம்-25, உப்பாறு அணை-12, நல்லதங்காள் ஓடை-6, அமராவதி அணை-2, திருமூர்த்தி அணை-12, திருமூர்த்தி அணை ஐபி-11, காங்கயம்-33, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலகம்- 52, வட்டமலை கரை ஓடை- 31.40, பல்லடம்-6. மாவட்டம் முழுவதும் மொத்தம் 565.90 மி.மீ., மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூர் மாநகரில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் சிதலமடைந்த சாலைகள் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.

    Next Story
    ×