என் மலர்
திருப்பூர்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி பல்லடம் அம்பாள் புரொபஷனல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் மாணவர் பிரிவில் குண்டுஎறிதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவன் ஆர்.கோகுல் 2-ம் இடமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் பிளஸ்-1 மாணவர் பி.சந்துரு 2-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி எம்.வைஷ்ணவி முதலிடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி ஜி.ஆதியா 2-ம் இடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடமும் பிடித்தார். 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆதியா, வைஷ்ணவி, சுதீபா, சர்விகா, கார்னிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற 2 மாணவர்களும், 5 மாணவிகளும், செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
- கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .
- பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.
உடுமலை:
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சுற்று தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிஏபி., கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது .இதை ஈடுகட்ட கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .இதை ஏற்று மேலும் 6 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிகளில் நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றவும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கூடுதலாக வரும் 24ந் தேதி வரை 6 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி மொத்தம் 410 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 94.068 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காமராஜர் போல் வேடமணிந்து துண்டு பிரசுரங்களை வழங்கியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பாதயாத்திரை வரும் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று பல்லடம் நகருக்கு வர உள்ளார். இதன் விளம்பர துண்டு பிரசுரங்களை பல்லடம் கடைவீதியில் பாஜகவினர் விநியோகம் செய்தனர்.இதில் காமராஜர் போல் வேடமணிந்து துண்டு பிரசுரங்களை வழங்கியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் இது குறித்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.பல்லடம் காங்கிரஸ் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் எம். மணிராஜ்,காங்கிரஸ் பல்லடம் வட்டார தலைவர் சு.கணேசன், நகர வர்த்தக அணி தலைவர் ஆர். சுரேஷ் உள்ளிட்டோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடத்திற்கு இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி முன்னாள் முதல்வர் காமராஜர் வேடமிட்ட நபரை அழைத்து சென்று பாஜக.வினர் கடைவீதியில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.காமராஜர் மதசார்பின்மை கொள்கை உடையவர். அவரது வேடத்தை கொள்கை வேறுபாடு கொண்ட பாஜக.வினர் பயன்படுத்துவது நியாயம் அல்ல.மேலும் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் மறைந்தார். அடிப்படைக் கொள்கையில் மாறுபட்ட தலைவரை சுயநலத்திற்காக பயன்படுத்துவது தவறு.காமராஜர் எந்த சமயத்திலும் மதத்தையோ,மக்களை பிரிவு படுத்தும் செயல்களுக்கோ ஒருபோதும் அனுமதித்ததில்லை.அப்படிப்பட்ட தலைவரை மதத்தை தீவிரமாக பின்பற்றும் கட்சியினர் பயன்படுத்தியது முற்றிலும் தவறானது.எனவே இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பாதயாத்திரை வரும் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
- ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
- அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றார்.
தாராபுரம்:
தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக ஆற்றல் உணவகம் திறக்கப்பட்டது. இது குறித்து ஆற்றல் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், அறக்கட்டளை சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்காக ஆற்றல் உணவகம் மற்றும் ஆற்றல் மருத்துவமனை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அடுத்த மாதம் காங்கேயம் பகுதியில் ஆற்றல் உணவகம் திறக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன் ,மாநில விவசாய அணி பிரிவு துணைச் செயலாளர் பார்த்தசாரதி, இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட புறநகர் கோட்ட பொறியாளர் கோவிந்தராஜ், கூட்டுறவு சங்க பிரிவு செயலாளர் சுகுமார், பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ருத்ராவதி பேரூராட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
- திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நலம் தரும் நவராத்திரியின், 9 நாட்கள் இந்திய விண்வெளிக் கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர்:
திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நலம் தரும் நவராத்திரியின், 9 நாட்கள் இந்திய விண்வெளிக் கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விண்வெளி உலக மாதிரி, ஏலியன், சந்திராயன்- 3 ஏவுகணை, குண்டு தாங்கி வானத்தில் செல்லக் கூடிய படைக்கருவி , செட்டியார் கடை, கொலு பொம்மைகள் ஆகியவற்றைக் கொண்டு நவராத்திரி கொலு அமைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் வழிபட்டு மகிழ்ந்தனர். நவராத்திரியின் சிறப்புமிக்க ஒன்பது நாள் கொண்டாட்டம் மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியையும், பக்தி உணர்வினையும் விதைப்பதாக இருக்கின்றது. விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொண்டனர். பண்டிகையாக கொண்டாடும் விதமான நவராத்திரி கொண்டாட்டம் நாம் அனைவரும் உணர்ந்து அனுஷ்டித்து நன்மை பெறுவோம் என்று கிட்ஸ் கிளப் பள்ளியின் தாளாளர் நிவேதிகா, மாணவ- மாணவியர்களிடம் எடுத்துக் கூறினார்.
- கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் குறித்தும்,கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
- குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
அவினாசி:
அவினாசி அருகே உள்ள கருவலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். அதன்படி கருவலூா், அரசப்பம் பாளையம், நைனாம்பாளையம், ஆரியக் கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
- கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களது வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயனடையும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கூடுதலாக 6,600 மெட்ரிக் டன் அரவை கொப்பரை, 400 மெட்ரிக் டன் பந்து கொப்பரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய நவம்பா் 26-ந் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேங்காய் கொப்பரை கிலோ ரூ.108.60, பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் தமிழக அரசின் இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
- பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருப்பூர்:
வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் இலவச மருத்துவ முகாம் வெள்ளகோவில் காடையூரான்வலசு பகுதியில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. வெள்ளகோவில் காடையூரான்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்து வருகிறார். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.
திருப்பூர்:
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் தென்னம்பாளையம் பகுதி 56-வது வட்டம் சார்பில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செரங்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாணவர் அணி துணை செயலாளர் ஹரிபிரசாந்த் தலைமை தாங்கினார். தென்னம்பாளையம் பகுதி செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி பேசும்போது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
- இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர்:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் கடந்த 8-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் பெயர்கள் மத்திய குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் அகில இந்திய தலைவர் நரேன் ஜெட்டர்ஜி, தேசிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவசங்கர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன் தமிழக புதிய பொறுப்பாளர்களை டெல்லி நேதாஜி பவனில் அறிவித்தார்.
இதன்படி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், மாநில பொதுச்செயலாளராக எஸ்.கர்ணன், மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எஸ்.கர்ணன் திருப்பூருக்கு முதல்முறையாக வந்தார். அவருக்கு திருப்பூர் எல்லையான தாராபுரம் ரோடு கோவில்வழியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் துணைத்தலைவர் ரவி, அமைப்புச் செயலாளர் காளீஸ்வரன், இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முக்குலத்தோர் தேசிய கழகத்தின் நிறுவனத்தலைவர் எஸ்.பி.ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர் கர்ணனுக்கு சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் முக்கிய பிரமுகர்கள் நேரிலும், செல்போன் மூலமாகவும் கர்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கர்ணன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருப்பதுடன், மாநில துணைத்தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்படி பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி நேரு நகர் ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை நீர் தேக்கதொட்டியையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.69.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும், செம்மிபாளையம் பகுதியில்ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தையும், ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தையும், இதேபோல பல்லடம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் ரூ.52.53 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப்பணிகளையும்,இதேபோல கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலை பணிகள் எனமொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக கரடிவாவி ஊராட்சியில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேசிய திட்ட விளக்க பிரச்சார ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
. இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஷிலா புண்ணியமூர்த்தி, கல்விக் குழு தலைவர் புண்ணியமூர்த்தி , மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன்,மற்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






