என் மலர்
திருப்பூர்
- பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பலர் இவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
- ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:
ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. ஆயுத பூஜையின் போது வீடுகள், பனியன் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வாகனங்களுக்கு பூஜை போடுவதற்கும், திருஷ்டி கழிப்பதற்கும் பூசணிக்காய் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதனால் திருப்பூருக்கு தற்போது பெருந்துறை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூசணிக்காய் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, பெருமாள் கோவில் வீதி உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் இவை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பலர் இவற்றை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதேபோல் வெள்ளரி பழமும் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூ வரத்து அதிகரிக்க ெதாடங்கியுள்ளது. இதில் செவ்வந்தி நாட்டு ரகம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டு ரகம் ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பிற பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஜாதிமல்லி ரூ.320, சம்பங்கி ரூ.120, பட்டுப்பூ ரூ.80, அரளி ரூ.220 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ள போதிலும் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. செவ்வந்தி பூவின் வரத்து அதிகமாக இருப்பதால் இதன் விலை பெரிய அளவில் உயரவில்லை.
- போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.
- கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
உடுமலை:
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி , வாமன் விருக்ஷா போன்சாய் கிளப் சார்பில் இயற்கைக்குள் சிறிய இயற்கை மற்றும் இக்கபானாவின் ஜப்பானிய மலர் அலங்கரிப்பு பற்றிய கலை கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி ஜி.வி.ஜி., மாநாட்டு அரங்கம் 1 ல் நடைபெற்றது.இந்த கண்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார்.ஆலோசகர் மற்றும் இயக்குநர் மஞ்சுளா வரவேற்று பேசினார்.போன்சாய் கிளப்பின் தலைவர் ஸ்ரீமதி மீனா குருசாமி சிறப்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர் போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.
மேலும் போன்சாய் மரங்கள் அமைதி, சமாதானம்,நற்குணங்கள், நல்ல எண்ணங்களை பிரதிபலிக்கின்றன என்று கூறியதுடன் போன்சாய் மரத்தின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.அதைத் தொடர்ந்து போன்சாய், சாய்கேய்,சூசேகி வகைகள் மற்றும் இக்கபானா ஜப்பானிய மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அரங்குகளை விஜயகுமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.அப்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்,கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- கோர்ட்டு வாசலிலேயே குற்றம் சாட்டப்பட்ட நண்பர்கள், 3 பேரும், கொலை மிரட்டல் விடுத்தனர்.
- வழக்கு விசாரணைக்கு அவர்கள் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜராகினர்.
திருப்பூர்:
திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த நண்பர்கள் பாலாஜி (வயது 26), விஷ்ணு(24), நரேந்திரன்(25). இவர்கள் மீது வேலம்பாளையம் போலீசில் அடி தடி வழக்கு உள்ளது.இந்த வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்-3 கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு அவர்கள் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜராகினர். இதில், வழக்கு சம்பவம் தொடர்பாக மதன்குமார் என்பவர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜராகி சாட்சி அளித்தார்.
அதன்பின், கோர்ட்டிலிருந்து வெளியே வந்த அவரை கோர்ட்டு வாசலிலேயே குற்றம்சாட்டப்பட்ட நண்பர்கள், 3 பேரும், கொலை மிரட்டல் விடுத்தனர். அதிர்ச்சியடைந்த மதன்குமார் இதுகுறித்து நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். வீரபாண்டி போலீசில் மிரட்டல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- 6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.
- கோழிப்பண்ணை நிர்வாகத்தினரை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், குண்டடம், பெல்லம்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக திருப்பூர் சைல்டு லைனுக்கு புகார் வந்தது.இதனையடுத்து சைல்டு லைன் மற்றும் குண்டடம் போலீசார், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்வதும், குடும்பத்தை சேர்ந்த 13 முதல், 17 வயது உடைய 6 பேர் பள்ளிக்கு செல்லாமல் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.வேலைக்கு அனுப்ப கூடாது என்றும், பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தி பெற்றோரிடம் எழுதி வாங்கியும் குழந்தைகளை அனுப்பி வைத்தனர். மேலும் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் மீது தொழிலாளர் நல அதிகாரிகள் மற்றும் குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் முதல் இடுவம்பாளையம் வரை சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் அப்பகுதியில் உள்ள முல்லை நகர் ,அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .தகவல் கிடைத்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், 70 கிலோ குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் மாநகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிவன் தியேட்டர் அருகே போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த பாண்டியராஜ் (வயது 25), வைத்தீஸ்வரன் (48)என்பது தெரியவந்தது. மேலும் இரண்டு பேரும் புகையிலை பொருள்களை காரில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், 70 கிலோ குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
- வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை ஆட்டோ டிரைவர்கள் பார்த்தனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் இன்று காலை நடுரோட்டில் ரூ.50,000 பணம் கட்டு ஒன்று கிடந்தது.இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் அபிமன்னன் (வயது 48) அதனை மீட்டு அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால் யாரும் பணத்திற்கு உரிமை கொண்டாடி வரவில்லை.இதனையடுத்து சக டிரைவர்களுடன் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார்.
இந்தநிலையில் வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த தயாநிதி (22) என்பதும் தனது தாய் கலைவாணியை இன்று காலை 5மணிக்கு அழைத்துக்கொண்டு கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் முன்னிலையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.50,000 பணத்தை அந்த வாலிபரிடம் ஒப்படைத்தார்.ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார்.
- சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரத்தில் சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்து பலகாரம் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் கணேச மூர்த்தி-மாரீஸ்வரி தம்பதியினர். நேற்று மாலை வழக்கம்போல் தள்ளுவண்டியில் பலகாரம் செய்து வியாபாரம் நடத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்து அவர்கள் இருவரையும் சராமாரியாக வெட்டியுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கம் இருந்த மக்கள் அங்கிருந்து சிதறி அடித்து ஓடினர். அப்போது தள்ளுவண்டி கடை அருகே இருந்த கணேசமூர்த்தியின் சகோதரர் ரமேஷ், அங்கு ஓடிவந்து அரிவாளால் வெட்டியவரை தடுத்து, அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கினார். பின்னர் கணேசமூர்த்தி அந்த அரிவாளை பிடுங்கி அந்த மர்மநபரை வெட்டினார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாரீஸ்வரி உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில் கணேசமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் பல்லடத்தில் அவர்கள் வசித்து வந்தது மாரீஸ்வரியின் மகன் புஷ்பராஜுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ், கோவில்பட்டியில் இருந்து பல்லடத்திற்கு சென்று தனது தாய் மாரீஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்பு மீண்டும் அரிவாள் கலாசாரம் தலை தூக்கியது பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் மதுவால் நடைபெறும் சமூக விரோத செயல்களுக்கு இந்த 4 பேர் படுகொலை சம்பவமே சாட்சி.
- சமூக விரோதிகளையும், குற்றப் பின்னணியில் உள்ளவர்களையும், காவல்துறை கண்காணிக்க தவறிவிட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த பா.ஜனதா கிளை நிர்வாகி மோகன்ராஜ் (வயது 49), அவரது தாயார் புஷ்பவதி மற்றும் சித்தி ரத்தினாம்பாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகிய 4 பேரும் கடந்த மாதம் 3-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்ததை தட்டிக்கேட்டதால் இந்த பயங்கர கொலைச் சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் பல்லடத்தில் என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 4 பேர் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி மோகன்ராஜ் மகன் பிரணவ் (வயது 13) கல்வி செலவு முழுவதையும் பா.ஜனதா ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மதுவால் நடைபெறும் சமூக விரோத செயல்களுக்கு இந்த 4 பேர் படுகொலை சம்பவமே சாட்சி. மதுபானம் அருந்தி மிருகமானவர்களால் 4 குடும்பங்களின் நிம்மதி தொலைந்து உள்ளது. சமூக விரோதிகளையும், குற்றப் பின்னணியில் உள்ளவர்களையும், காவல்துறை கண்காணிக்க தவறிவிட்டது. இங்கு உளவுத்துறை போலீசார் உள்ளனரா என்று சந்தேகம் அளிக்கிறது. தமிழகத்தில் மதுபானத்தை விற்பனை செய்து இளைஞர்களை கொலைகாரர்களாக மாற்றியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காதது அவர் அமைச்சராக நீடிப்பதால்தான், எனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும். தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பல்லடம் நகரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- . திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர்.
- முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர்
திருப்பூர்:
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் லியோ திரைப்படம் மொத்தம் 56 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் இன்று காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். காலை 9மணிக்கு படம் திரையிடப்பட்டது. மதியம் 12-30மணிக்கு படம் முடிந்து வெளியே வந்தனர். திருப்பூரில் உள்ள பிரபல தியேட்டரில் லியோ திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
லியோ திரைப்படம் வேற லெவலாக உள்ளது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பட்டய கிளப்பியுள்ளார். இதற்காக அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஆரம்பம் முதல் கடைசி வரை படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக லியோ இருக்கும். தொடர்ந்து விடுமுறை என்பதால் லியோ வசூலில் சாதனை படைப்பது உறுதி. இப்படத்தில் அரசியல் எதுவும் கிடையாது. தொடர்ந்து விடுமுறை என்பதால் மீண்டும் இந்த திரைப்படத்தை பார்ப்போம். அனிருத் இசை மிகவும் அருமை. வித்தியாசமாக இசையமைத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். நா ெரடி, அண்ணன் வரவா, பேடாஸ் உள்ளிட்ட பாடல்கள் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது. ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக அமைந்தது. பொதுமக்களுக்கு இது மிகவும் பிடிக்கும். லியோ திரைப்படம் சாதனை படைப்பது உறுதி என்றனர்.
முன்னதாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும் தியேட்டர்கள் முன்பு விஜய் பட கட்அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. முதல் காட்சியையொட்டி மேள தாளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர். இதனால் லியோ திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் களை கட்டி காணப்பட்டன. மேலும் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர்.
- தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
- மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கே.பி.என்.காலனி 5-வது வீதியில் அமைந்துள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமியின் வீட்டில் 25-வது ஆண்டு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதையொட்டி அவரது வீட்டில் 9 படிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்து கடவுள் சிலைகள், இயேசு, மாதா சிலை மற்றும் மும்மதத்தை குறிக்கும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மகாத்மா காந்தி, காமராஜர், அண்ணா, அம்பேத்கர், அப்துல்கலாம், அன்னை தெரசா, விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலை மற்றும் கம்பா நதியில் ஏகாம்பரேஸ்வரை ஏழவார்குழலி வழிபடும் சிலை, நவதுர்கை, சிவதாண்டவம், லலிதாம்பிகை தர்பார், சுருட்ட பள்ளீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். பூஜையில் விகாஸ் வித்யாலயா பள்ளி மற்றும் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, அவரது மனைவி ராதா, மகன் மாதேஸ்வரன், மகள்கள் கவிதா, மகாலட்சுமி, மருமகள் சிவப்பிரியா, மருமகன்கள் கவுரி சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
- மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மின் மயானம் அருகே செல்லும் நடுரோட்டில் ஏற்பட்ட சிறிய குழியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் முன்னா ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் உள்ளிருக்கும் அனைத்து கேபிள்களும் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிைலயில் காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.






