search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing money"

    • சரோஜா வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது.
    • மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 60). இவர் நேற்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்திருந்தார்.

    அந்த சமயத்தில், அவர் வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது. இது குறித்து அவர் சந்தை நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (25) என்கிற மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    அதனை உதவி நிர்வாக அலுவலர்கள் சிவசங்கர், பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் மூதாட்டி சரோஜாவிடம் ஒப்படைத்தனர். கூலித் தொழிலாளியின் இந்த நேர்மையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை ஆட்டோ டிரைவர்கள் பார்த்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் இன்று காலை நடுரோட்டில் ரூ.50,000 பணம் கட்டு ஒன்று கிடந்தது.இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் அபிமன்னன் (வயது 48) அதனை மீட்டு அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால் யாரும் பணத்திற்கு உரிமை கொண்டாடி வரவில்லை.இதனையடுத்து சக டிரைவர்களுடன் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பணத்தை ஒப்படைத்தார்.

    இந்தநிலையில் வாலிபர் ஒருவர் பணத்தை தேடி கொண்டிருப்பதை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த தயாநிதி (22) என்பதும் தனது தாய் கலைவாணியை இன்று காலை 5மணிக்கு அழைத்துக்கொண்டு கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தாயின் கைப்பையில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் முன்னிலையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.50,000 பணத்தை அந்த வாலிபரிடம் ஒப்படைத்தார்.ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி போலீசார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பணப்பை தவறி கீழே விழுந்து விட்டது.
    • பிரியாவின் நேர்மையை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள இலவந்தி வடுகபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 56). இவர் பல்லடம் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்த நிலையில், சேமிப்பு பணம் ரூ. 1லட்சத்து10 ஆயிரம் பணத்தை, ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொண்டு, அவருடைய மோட்டார் சைக்கிளில் முன்புறம் மாட்டிக் கொண்டு பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பணப்பை தவறி கீழே விழுந்து விட்டது. இதனை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா(27) என்பவர் அந்த வழியே சென்ற போது அவர் அந்த பையை எடுத்துப்பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம், மற்றும் ஏடிஎம் கார்டு, உள்ளிட்டவை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார், அந்தப் பெண்ணிடம் இருந்து பையை வாங்கி அதில் உள்ள அடையாள அட்டையை பார்த்தபோது அது தபால் நிலைய தற்காலிக ஊழியர் குணசேகரனுடையது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். கடைவீதியில் பணத்தை தேடி சுற்றிக் கொண்டிருந்த அவர் உடனடியாக அங்கு வந்தார்.அவரிடம் விசாரணை செய்த போலீசார், அவர் கூறிய அடையாளங்கள் மூலம் அந்தப் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்து கொண்டு பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

    கண்களில் நீர் மல்க அந்த பணத்தை போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்ட குணசேகரன், பணத்தை கண்டெடுத்த அந்த பெண்ணுக்கு கை கூப்பி மீண்டும், மீண்டும் நன்றி சொன்னார். ஏழ்மை நிலையில் இருந்த போதும், கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பிரியாவின் நேர்மையை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர். இந்த நெகிழ்ச்சி ஊட்டும் சம்பவத்தால் பல்லடம் கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×