search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் அஞ்சல் ஊழியர் தவற விட்ட ரூ.1.10 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு
    X

    அஞ்சல் ஊழியரிடம்  பணத்தை ஒப்படைத்த பிரியா.

    பல்லடத்தில் அஞ்சல் ஊழியர் தவற விட்ட ரூ.1.10 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு

    • வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பணப்பை தவறி கீழே விழுந்து விட்டது.
    • பிரியாவின் நேர்மையை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள இலவந்தி வடுகபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 56). இவர் பல்லடம் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்த நிலையில், சேமிப்பு பணம் ரூ. 1லட்சத்து10 ஆயிரம் பணத்தை, ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொண்டு, அவருடைய மோட்டார் சைக்கிளில் முன்புறம் மாட்டிக் கொண்டு பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பணப்பை தவறி கீழே விழுந்து விட்டது. இதனை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா(27) என்பவர் அந்த வழியே சென்ற போது அவர் அந்த பையை எடுத்துப்பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம், மற்றும் ஏடிஎம் கார்டு, உள்ளிட்டவை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார், அந்தப் பெண்ணிடம் இருந்து பையை வாங்கி அதில் உள்ள அடையாள அட்டையை பார்த்தபோது அது தபால் நிலைய தற்காலிக ஊழியர் குணசேகரனுடையது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். கடைவீதியில் பணத்தை தேடி சுற்றிக் கொண்டிருந்த அவர் உடனடியாக அங்கு வந்தார்.அவரிடம் விசாரணை செய்த போலீசார், அவர் கூறிய அடையாளங்கள் மூலம் அந்தப் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்து கொண்டு பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

    கண்களில் நீர் மல்க அந்த பணத்தை போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்ட குணசேகரன், பணத்தை கண்டெடுத்த அந்த பெண்ணுக்கு கை கூப்பி மீண்டும், மீண்டும் நன்றி சொன்னார். ஏழ்மை நிலையில் இருந்த போதும், கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பிரியாவின் நேர்மையை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர். இந்த நெகிழ்ச்சி ஊட்டும் சம்பவத்தால் பல்லடம் கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×