என் மலர்
திருப்பூர்
- உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
- ரூ .2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ.2 அதிகரித்தது
உடுமலை:
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர்.நேற்று பெற்ற கொப்பரை ஏலத்தில் 22 விவசாயிகள் 67 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ 73.12 முதல் ரூ 82.28 க்கும் , இரண்டாம் தர கொப்பரை ரூ 66.89 முதல் ரூ 71.89 க்கும் இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது.அதன்படி ரூ .2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ.2 அதிகரித்தது.இதனால் ஏலத்துக்கு வருகை தந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.
- தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.
- தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.
திருப்பூர்:
தெலுங்கானா மாநிலத்தில் 34-வது தென் மண்டல அளவிலான ஜூனியா் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தென் மண்டலங்களைச் சோ்ந்த ஆந்திரம், கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.
இதில் 14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்டோா் என நான்கு பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த 5 வீரா்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 போ் பங்கேற்றனா். இதில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றனா். மேலும் சிறந்த தடகள வீரா்களாகவும் தோ்ந்தெடுக்க ப்பட்டனா்.
இதில் தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், அனைத்துப் பிரிவிலும் சிறந்த வீரா், வீராங்கனை பட்டமும் வென்றுள்ளனா்.
போட்டியில் வெற்றி பெற்ற திருப்பூா் மாவட்ட வீரா்கள், வீராங்கனைகளுக்கு, திருப்பூா் தடகள சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் முத்துகுமாா், மூத்த துணைத் தலைவா் மோகன் காா்த்திக், துணைத் தலைவா்கள் வெங்கடேஷ், சந்தீப்குமாா், ஜெயபிரகாஷ், மதிவாணன், இணைச் செயலாளா்கள் நிரஞ்சன், அழகேசன், ராமகிருஷ்ணன், தொழில்நுட்பக்குழுத் தலைவா் மனோகா் செந்தூா்பாண்டி, துணைத் தலைவா் சஜீவ் தாமஸ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்
- காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
பிஏபி., வாய்க்காலுக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 16-ந்தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது , போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கேயம் டிஎஸ்பி., பார்த்திபன் விவசாயிகளை தாக்கியதாகவும், இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி ஈஸ்வரன் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு அமைக்கப்பட்டிருந்தது.
- பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
திருப்பூர்:
பெண் தெய்வங்களைக் கொண்டாடும் விழாவான நவராத்திரி பண்டிகை திருப்பூர் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறையில் கொலுப் படிக்கட்டுகளை அமைத்து அவற்றில் பல்வேறு கடவுள் மற்றும் அவதார புருஷர்களின் பொம்மைகளை வைத்து, பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் ஒவ்வொரு வகுப்பும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கொலுப்படிக்கட்டுகளை அமைத்திருந்தனர்.
குறிப்பாக இந்த ஆண்டு இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு, ஷேக்ஸ்பியரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வாழ்வின் ஏழு படிநிலைகள், இந்தியப் பேரரசர்களின் சாம்ராஜ்யம், விளையாட்டுத் துறையில் இந்தியாவின் பெருமைகள் தொடர்பான கொலு ஆகியவை காண்போரை வெகுவாக கவர்ந்தன.
விழாவில் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியின் தலைவர் மோகன் கே. கார்த்திக், பள்ளியின் இயக்குநர் ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், செயலாளர் நிவேதிகா மற்றும் பள்ளியின் முதல்வர் தீபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.
திருப்பூர்,அக்.21-
தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து, சிவகாசி, சிவகங்கை, மதுரை, தேனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து,திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு 40 சிறப்பு பஸ்கள், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்கள் என மொத்தம் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.
கூட்டத்துக்கு ஏற்ப இரவில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றனர்.
- 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடையவில்லை.
- வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றால், திட்டம் மேலும் தாமதாகும் என்பது போல் தெரிகிறது.
அவிநாசி:
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்கள் 65 ஆண்டுகளுக்கும் மேலாக காத்து கொண்டிருக்கின்றனர். 3 தலைமுறைக்கும் மேலாக கானல்நீராக இருந்த திட்டத்துக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பணியாணை வந்ததை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டன. 27 மாதங்களில் திட்டம் முடிக்கப்படும் என்றும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதிக்குள் திட்டம் நிறைவடையும் என கணிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அ.தி.மு.க.வின் தேர்தல் பரப்புரையில் முக்கிய அங்கம் வகித்தது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட திட்டம் இது. திட்டம் தொடங்கிய பிறகு, இயற்கை வேறு மாதிரியாக சதிராடியது. உலகை உறைய வைத்த கொரோனா தொற்றால், அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகள் முடங்கின.
தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து, விரைவில் திறக்கப்படும் என 3 மாவட்ட மக்களும் எதிர்பார்ப்பில் காத்திருக்க, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பில்லூர் அணையில் தண்ணீர் வந்தால் தான், ஒன்றரை டிஎம்சி., தண்ணீர் எடுத்து திட்டத்தை திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து, திட்டத்தை விரைவில் திறக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
திட்டத்தில் 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் 921 குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் என 1045 நீர் நிலைகள் பயன்பெறும் திட்டம் இது. இதில் 900-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடையவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தின் காரணமாக திட்டம் தற்போது வரை 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்தும், திட்டம் நிறைவடையவில்லை.
இந்த திட்டத்தில் 6 குடிநீரேற்று நிலையங்கள் உள்ளன. இதில் முதல் மற்றும் 2-ம் குடிநீரேற்று நிலையங்களுக்கு இடைப்பட்ட, கூடுதுறை பவானி தொடங்கி- சித்தோடு வரையிலான சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு பிரதான குழாய் பதிப்புக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நிலத்தடி நீராதாரத்துக்கான முக்கியமான திட்டம் என்பதை கடந்து, குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் உட்பட பல்வேறு நீராதாரத்தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பது தான் பிரதானமாக பார்க்கிறோம். திட்டத்தில் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் விட்டுவிட்டால் உரிய நீர் நிர்வாகம் செய்து, திட்டத்தை விரைவுப்படுத்தி திறக்க வேண்டும். ஒருவேளை வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றால், திட்டம் மேலும் தாமதாகும் என்பது போல் தெரிகிறது.
இந்நிலையில் இன்னும் 4 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்றத் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிடும் என்பதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடங்கிவிடக்கூடிய சூழல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தை திறக்கும்போதே மாநில அரசு, விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். அது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்ட ஒற்றைக்குடையின் கீழ், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் என அனைத்துதரப்புக்குமான முழுப்பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டீக்கடை முன்பாக அமா்ந்திருந்த பெண் மீது தண்ணீா் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
- பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றியது மட்டுமில்லாமல், அப்பெண்ணை அவமரியாதையாகவும் கடை ஊழியர்கள் பேசி உள்ளனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜா் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள டீக்கடை முன்பாக அமா்ந்திருந்த பெண் மீது தண்ணீா் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
ஏற்கனவே கடைக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில், கடையின் வழித்தடத்தில் அமா்ந்திருந்ததாக குற்றம்சாட்டி அந்த பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றியது மட்டுமில்லாமல், அப்பெண்ணை அவமரியாதையாகவும் கடை ஊழியர்கள் பேசி உள்ளனா்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடா்ந்து, மாநகராட்சி உதவி ஆணையா் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் முன் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடைக்கு 'சீல்' வைத்தனா்.
மேலும் திருப்பூர் தெற்கு போலீசார் கடையின் டீ மாஸ்டர் அனில்குமார், ஊழியர் வெங்கடேஷ் ஆகிய 2பேர் மீது, பொது இடத்தில் பெண்களை அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழில் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படும்.
- சிறிய அளவிலான எல்.இ.டி., சர விளக்குகள், நிறம் மாறி எரியும் பல வர்ண விளக்கு சரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது.
திருப்பூர்,அக். 21-
கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியை வழிபடும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும்.அதே சமயம் தொழில், வணிகம், வர்த்தகம் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.
தொழில் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படும். அதேபோல் அனைத்து வாகனங்களையும் அலங்கரித்தும் பூஜை நடத்துவர்.
பூஜைகளின் போது, வாகனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில், வண்ண காகிதங்கள், பூ வேலைப்பாடு செய்த மின்னும் வகையிலான அலங்கார வடிவங்கள், செயற்கை பூக்கள் கொண்ட தோரணங்கள், மாலைகள் கொண்டும் அலங்காரம் செய்வது வழக்கம்.
அவ்வகையில் பூஜையில் பயன்படும் அலங்கார காகித தோரணங்கள், ரிப்பன்கள், மாலைகள், சரஸ்வதி படம் அச்சிட்ட ஆயுத பூஜை எழுத்துகள் கொண்ட வடிவங்கள், ஜொலிக்கும் ஜிகினா காகித டிசைன்கள் ஆகியன கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய அளவிலான எல்.இ.டி., சர விளக்குகள், நிறம் மாறி எரியும் பல வர்ண விளக்கு சரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது. பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர் அதனை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
- 25 ஆண்டுகளில் வாகனங்களின் மீது இதுபோன்ற ஒரு வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது இல்லை.
- இந்த வரி உயர்வால், மறைமுகமாக அனைத்தின் விலையும் உயர்ந்து பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
திருப்பூர்:
சட்டசபையில் அனைத்து விதமான வாகனங்களுக்கும் வாகன வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வரி உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட பொக்லைன் எந்திர உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜே.சி.பி., எந்திரங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் வாகனங்களின் மீது இதுபோன்ற ஒரு வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது இல்லை.
உதாரணத்துக்கு தற்போதைய சூழலில் 10 லட்சம் ரூபாய்க்கு புதிய வாகனம் வாங்கினால், வரியுடன் சேர்த்து, 12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இதனால், புதிதாக வாகனம் வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். புதிய பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் விலையும் உயரும். இதன் அடிப்படையில் வண்டி வாடகை, ஆள் கூலி, இதர பொருட்களின் விலை உள்ளிட்டவையும் உயரும்.
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக, ஜே.சி.பி., வாடகை கடந்த ஓராண்டுக்கு முன் உயர்த்தப்பட்டது. உயர்த்திய வாடகையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரி உயர்வால் புதிதாக வண்டி வாங்கி வாடகைக்கு தொழில் செய்ய நினைப்பவர்கள் யோசித்துப்பாருங்கள். இதனால் பழைய வாகனங்களை விற்பனை செய்பவர்கள் மட்டும் பயன்பெறுவார்கள்.
மற்றபடி வாகன தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வரி உயர்வால், மறைமுகமாக அனைத்தின் விலையும் உயர்ந்து பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே வரி உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலித்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.
- ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர்,சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, அணையிலிருந்து கடந்த ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை துவக்கினர். தற்போது இப்பகுதிகளில் நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து கடத்தூர், கண்ணாடிபுத்தூர் பகுதிகளிலும் அறுவடையை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் பற்றாக்குறையால் எந்திர அறுவடைக்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் பருவ மழையும் துவங்கியுள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதித்து வருகின்றன. நெல் வயல்களில், தாள்கள் தலைசாய்ந்து, நெல் மணிகள் வயல்களிலேயே உதிர்ந்து, பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
எனவே பருவ மழைக்கு முன், விளைந்த நெல் அறுவடை செய்யும் வகையில் தேவையான அளவு நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.இங்கு நெல்லுக்கான ஆதார விலை சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 என ஒரு குவிண்டால் 2,310 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.அதே போல் பொது ரகம் ஆதார விலை, ரூ.2,183, ஊக்கத்தொகை ரூ.82 என ஒரு குவிண்டால் நெல் 2,265 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் கொள்முதல் மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, சோழமாதேவி பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.
- கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.
உடுமலை:
உடுமலை மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மாவடப்பு , காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வறட்சியான காலங்களில், ஆழியார் அணைக்குள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை கொண்டு சென்று பட்டி அமைத்து அங்கேயே தங்கி மேய்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
நடப்பாண்டு 3 மாதத்திற்கு முன் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆழியார் அணைக்கரையில் மாட்டுப்பட்டி அமைத்து அங்கேயே தங்கி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் மாடுகளை மேய்த்து வருகின்றனர். மழை அதிகம் பெய்து அணைக்கு நீர் வந்தால், குடியிருப்பு பகுதியில் தீவனப்புல் வளர்ந்து விட்டால் மாடுகளை திரும்ப கொண்டு வந்து விடுவார்கள்.இந்நிலையில் வனத்துறையைச் சேர்ந்தவர்கள், மாடுகளை மேய்க்கக்கூடாது என கூறி வருகின்றனர்.
இதற்கு முன் இதே போல் பிரச்சினை ஏற்பட்ட போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு, வன உரிமை சட்டப்படி பாரம்பரியமாக எங்கெல்லாம், தங்கி மாடுகளை மேய்த்தார்களோ, அங்கெல்லாம் தங்கி மேய்ப்பதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.எனவே மலைவாழ் மக்கள் ஆழியார் அணையில் மாடுகளை மேய்க்க அனுமதியை பெற்றுக்கொடுத்தார். அதற்கு பின் கடந்த 5 ஆண்டு காலமாக மாடுகளை மேய்த்து வருகிறோம்.
அணையில் மாடுகளை மேய்க்க வரும் போது, தாடக நாச்சியம்மன் சுவாமிக்கு நேர்ந்து சாமி கிடா விட்டு வளர்ப்பது வழக்கம். திரும்ப செல்லும்போது கிடா வெட்டி சாமி கும்பிட்டு விட்டுச்செல்வார்கள்.அதற்கும் தடை விதிக்கின்றனர். எனவே, கோட்டாட்சியர் தலையிட்டு, பாரம்பரியமாக மாடுகளை மேய்க்கும் மலைவாழ் மக்கள் உரிமையை பாதுகாத்து, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
- அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
தாராபுரம், அக்.21-
தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அரசு ஆஸ்பத்திரியின் கூடுதல் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை அரசு மருத்துவர் சத்தியராஜ், நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வெ.கமலக்கண்ணன், நகர துணை செயலாளர் தவச்செல்வன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






