என் மலர்
திருப்பூர்
- புகை மண்டலத்தால் குடியிருப்பு வாசிகள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
- விளைநிலங்களை பாழாக்குவதுடன் தீ விபத்துகளுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது.
உடுமலை:
மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் பல இடங்களில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதும் அவற்றை தீ வைத்து கொளுத்துவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
மேலும் மரங்களின் அருகில் குப்பைகளைக் கொட்டி தீ வைப்பதால் பல மரங்கள் எரிந்து வீணாகி வருகிறது. மேலும் அவைகள் காற்றில் பரவி அருகில் உள்ள விளைநிலங்களை பாழாக்குவதுடன் தீ விபத்துகளுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், குப்பைகளுக்குத் தீ வைத்து கொளுத்துவதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
- நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
அவினாசி:
அவினாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வந்தது. இதனால் நிரந்தர கடையை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மிகவும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அவினாசி வாரச்சந்தை வளாகத்திற்கு மாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகிய நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
உடனே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அவினாசி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில ஈடுபட்டனர்.இதை அடுத்து தாசில்தார் மோகனன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி வாரச்சந்தை வளாகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல் தாசில்தார் மோகனன், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளிட்டோர் அவினாசி புதிய பஸ் நிலையம் வந்தனர். அப்போது அங்கு கடை அமைக்க வந்த சாலையோர வியாபாரிகளிடம் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடப்பதாலும், நிரந்தர கடை வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், ஏற்கனவே அறிவித்தபடி இங்கு சாலையோர வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாரச்சந்தைபேட்டைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்க மறுத்து சாலையோர வியாபாரிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிகமாக அரசு அலுவலகங்கள் முன்பாக மட்டும் கட்டில் போட்டு கடை நடத்த அனுமதிக்கப்பட்டது.
மேலும் வண்டி கடைகள், டெண்ட் கடைகள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.மேலும் ஒலிபெருக்கி மூலம் சாலையோர அனைத்து வியாபாரிகளும் அதற்கென ஒதுக்கப்பட்ட சந்தைபேட்டையில் வைத்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 55 பேர் பதிவு செய்துள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- இந்தியா கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தீவிரவாதம் தலை தூக்கி, தேச துரோகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அவிநாசி:
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பாஜக., நகர அலுவலகம் திறப்பு விழா, பிரதமா் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி, மாற்றுக் கட்சியினா் இணைப்பு விழா ஆகியவை நடைபெற்றன.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நீண்ட நாள் கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகியும், அரசியல் நோக்கத்துக்காக அத்திட்டத்தை திமுக., நிறுத்தி வைத்துள்ளது. இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இந்தியா கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தீவிரவாதம் தலை தூக்கி, தேச துரோகிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் கோவையில் பாலஸ்தீன கொடியேற்றி உள்ளனா். சென்னை கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகே கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். அந்த சம்பவங்களின் பின்னணியில் யாா் உள்ளனா். யாா் உதவி செய்கின்றனா் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தோ்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். பாஜகவை பொறுத்தவரை கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் எந்த நேரத்தில் என்ன பேசுவாா் என்பது அவருக்கே தெரியாது என்றாா்.
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
- அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
முத்தூர்:
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 35 மாடுகள் மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.
- விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு இந்த ஆண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளா் சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிற்சங்க நிா்வாகிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.இதில் தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.
இதில் உற்பத்தியாளா்கள் சாா்பில் முத்துசாமி, செந்தில், சம்பத்குமாா், தொழிற்சங்கங்கள் சாா்பில் சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் துல்லியத்தன்மை கொண்டு வரும் முயற்சியாக புதிய வாக்காளர்களுக்கு, ஓட்டளிக்கும் உரிமையை வழங்க தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. அதற்கேற்ப வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பூத் ஏஜென்ட்கள் வாயிலாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ள கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. வார்டு வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவு அதிக அளவில் உள்ளது. வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முந்தைய காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது அத்தகைய பணிகள் நடப்பதில்லை என்றனர்.
தி.மு.க.வினர் கூறுகையில், பூத் ஏஜென்டுகள் வாயிலாக, புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. இறந்தவர், இரட்டை பதிவு உள்ளோர் விவரங்களை சேகரித்து அவற்றை நீக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினாலும், அவர்கள் அந்த பணியை செய்வதில்லை. இறந்தவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களது குடும்பத்தினரிடமும் இல்லை என்றனர்.
அ.தி.மு.க.வினர் கூறுகையில், வார்டு வாரியாக உள்ள பூத் ஏஜென்ட்களிடம் வரைவு வாக்காளர் பட்டியல் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சரிபார்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறப்பு மற்றும் இரட்டை பதிவுகள் அதிகம் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றனர்.
- கோவை மாவட்டம், பொள்ளாச்சி ெரயில் சந்திப்பை அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
- அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் முருகன் கோவில், கொடைக்கானல் சுற்றுலா பகுதிகள் உள்ளன.
உடுமலை:
பொள்ளாச்சி ெரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ெரயில் சந்திப்பை அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்றனர். வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகம், மூணாறு, அமராவதி, ஆழியார் அணைகள் போன்ற சுற்றுலா பகுதிகளும், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில், திருமூர்த்தி மலை கோவில் போன்ற, ஆன்மிக தலங்கள் உள்ளன. அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் முருகன் கோவில், கொடைக்கானல் சுற்றுலா பகுதிகள் உள்ளன.
புதுச்சேரியின் திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியில் பழமை வாய்ந்த கோவில்களில் தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், வேளாங்கண்ணி, தேவாலயம் போன்ற பல்வேறு யாத்திரை மையங்கள் உள்ளன.
இந்நிலையில் பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலை,பொள்ளாச்சி, சென்னை - தாம்பரம், எழும்பூர் இடையே நேரடி ெரயில் சேவை இல்லை. எனவே, பொள்ளாச்சி - தாம்பரம் அல்லது சென்னை எழும்பூர் (பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக) தினசரி இரவு நேர ெரயிலை இயக்க வேண்டும்.நவம்பரில், தீபாவளி சிறப்பு ெரயிலாக இந்த ெரயிலை இயக்க வேண்டும். இருமார்க்கத்தில் இருந்தும் இரவு 8 மணிக்கு ெரயில் புறப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் பிரதானமாக உள்ளது.
- ஆய்வு முடிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படும் தென்னை ரகம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
உடுமலை:
மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின், ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தென்னை மரங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
தென்னை மரங்கள் இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், சுமார் 20.16 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் பிரதானமாக உள்ளது.
தென்னை சாகுபடியில் நீர்ப்பற்றாக்குறை, சீதோஷ்ண நிலை மாற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிப்பு, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திநகரில் அமைந்துள்ள மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் தென்னை மகத்துவ மையம் மற்றும் நாற்றுப்பண்ணை, மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தை சேர்ந்த காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தென்னை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வில் புதிய ரகத்தை உருவாக்கும் வகையில், வறட்சியை தாங்கும் தென்னை மரங்களை அடையாளம் காணுதல், தேங்காயின் தரம் மற்றும் அளவை மேம்படுத்துதல் மற்றும் வறட்சியை தாங்கும் வகையில் சாகுபடி நடைமுறையை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இது குறித்து மத்திய தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ரகோத்துமன் கூறியதாவது:-
தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் முதன்மை இணை ஆய்வாளராகவும், காசர்கோடு மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த முதன்மை ஆய்வாளர் சம்சுதீன் மற்றும் சுப்ரமணியம், நிரல் உள்ளிட்டோரை கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சி 2022 ஏப்ரலில் துவங்கியது. 2024 மார்ச் மாதம் நிறைவு பெறும்.கோவை , திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி அதிகமாக ஏற்படும் பகுதிகள், நிலத்தடிநீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலிருந்து 24,168 தென்னை மரங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து 2,037 தாய் மரங்கள் தேர்வு செய்யப்பட்டது.இந்த தாய் தென்னை மரங்களிலிருந்து, விதை காய்களை சேகரித்து திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரிய பண்ணையில் நடவு செய்யப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வறட்சியை தாங்கும் தகவமைப்பு, மரபணு குழுவை கண்டறிந்து புதிதாக உருவாக்கப்பட்டு, புதிய ரகம் உற்பத்தி செய்யப்படும். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் உருவாக்கப்படும் தென்னை ரகம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் பலி மற்றும் காயம் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் துணை உதவி ஆய்வாளர் லிஜோ மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். மேலும் ரெயில் மற்றும் நடைமேடைகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2-வது நாளாக திருப்பூர் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாவட்ட தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
- முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
திருப்பூர்:
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலா்கள் சங்க 3-வது மாவட்ட மாநாடு திருப்பூர் டவுண் ஹால் அருகேயுள்ள ஒரு கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்வித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளா்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள நேரடி நியமன உதவியாளர் முறையினை ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படையில் பணிக்காக காத்திருப்போருக்கு உடனடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொதுமாறுதல் மூலம் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
- புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரடிவாவிபுதூர் கிராமத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மகன் முத்துவேல் (வயது 20). டிரைவர். இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கே.எம்.நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் விஷ்ணுபிரபு வரவேற்றார்.
- கே.எம்.நிட்வேர்ஸ் இயக்குனர் மகேசுவரி சுப்பிரமணியம், எஸ்.ஆர்.வி.நிட்ஸ் நிர்வாக இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
அவினாசி அருகே வேலூர் பகுதியில் கே.எம்.நிட்வேர் பனியன் நிறுவனத்தின் 12-வது தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவன வளாகத்தில் கே.எம். நிட்வேர் நிர்வாக இயக்குனர் கே.எம்.சுப்பிரமணியனின் பெற்றோர் நினைவாக முத்துசாமி-முத்தம்மாள் கலாசார மையம் திறப்புவிழா நடைபெற்றது.
விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரும், கே.எம். நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கே.எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முத்துசாமி-முத்தம்மாள் கலாசார மையம் மற்றும் பெயர் பலகையை திறந்து வைத்தார். கே.எம்.நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் விஷ்ணுபிரபு வரவேற்றார்.
விழாவில், ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
பீகார், ஜார்கண்ட் போன்ற வட மாநில தொழிலாளர்களின் நண்மைக்காக, கோவை வழியாக தன்பாத்துக்கு வாரம் ஒருமுறை மட்டுமே ரெயில் செல்கிறது. இந்த ரெயிலை கோவையிலிருந்து தினசரி செல்லும் ரெயிலாக மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக தமிழ்நாட்டில் பணியாற்றும் சூழ்நிலையில், அவர்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும், ஓடிவந்து உதவி செய்வேன். கே.எம்.நிட்வேர்ஸ் போன்ற பெரிய பனியன் நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் தங்களது பனியன் நிறுவனங்களை ஆரம்பித்து, அங்குள்ள மக்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநில பெண் தொழிலாளர்களின் பரதநாட்டியம், கலை, கலாசாரத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கே.எம்.நிட்வேர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கார்த்திக் பிரபு நன்றி கூறினார். இந்த விழாவில் ஜெய்ஸ்ரீ ராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.தங்கராஜ், டாலர் அப்பேரல்ஸ் நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி, மணி அப்பேரல்ஸ் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணி, பரணி நிட்டிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரிசஷ்டிவேல், இயக்குனர் மதுமிதா, கே.எம்.நிட்வேர்ஸ் இயக்குனர் மகேசுவரி சுப்பிரமணியம், எஸ்.ஆர்.வி.நிட்ஸ் நிர்வாக இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






