search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் - அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் - அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் துல்லியத்தன்மை கொண்டு வரும் முயற்சியாக புதிய வாக்காளர்களுக்கு, ஓட்டளிக்கும் உரிமையை வழங்க தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. அதற்கேற்ப வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    பூத் ஏஜென்ட்கள் வாயிலாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ள கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. வார்டு வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவு அதிக அளவில் உள்ளது. வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முந்தைய காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது அத்தகைய பணிகள் நடப்பதில்லை என்றனர்.

    தி.மு.க.வினர் கூறுகையில், பூத் ஏஜென்டுகள் வாயிலாக, புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. இறந்தவர், இரட்டை பதிவு உள்ளோர் விவரங்களை சேகரித்து அவற்றை நீக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினாலும், அவர்கள் அந்த பணியை செய்வதில்லை. இறந்தவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களது குடும்பத்தினரிடமும் இல்லை என்றனர்.

    அ.தி.மு.க.வினர் கூறுகையில், வார்டு வாரியாக உள்ள பூத் ஏஜென்ட்களிடம் வரைவு வாக்காளர் பட்டியல் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சரிபார்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறப்பு மற்றும் இரட்டை பதிவுகள் அதிகம் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றனர்.

    Next Story
    ×