என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • வயிற்றுவலி பிரச்சினையால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளராக பணியற்றி வந்தார்.

    இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்ததால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.

    இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர்ரென மோசமானது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    உயிரிழந்த பேராசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், பொது மக்கள் சண்முகவேலின் உடலை வாங்க மறுத்து மன்னார்குடி அருகே ஓவர்சேரி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து சண்முக வேலின் மனைவி லலிதா அளித்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம்.
    • எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஆணையர் நிர்மல்ராஜ் தெரிவித்ததாவது, தமிழக அரசின் ஆணைகிணங்க திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

    இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார் முன்னதாக, அனைத்து துறைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆணையர் கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
    • செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ருத்திர மூர்த்தி (வயது 27).

    பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி தனலட்சுமி (32) உள்பட பலரும் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில், நேற்று பணிகள் முடிந்து ருத்திர மூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்ப கிளம்பினார்.

    அவருடன் தனலட்சுமியும் வருவதாக கூறியதையடுத்து இருவரும் பைக்கில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

    அப்போது, தம்பிக்கோட்டை பாமணி ஆற்றுப்பாலம் அருகே பஞ்சராகி நின்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக எதிரே முத்துப்பேட்டை நோக்கி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    உடனே, ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும், படுகாயமடைந்த தனலட்சுமி மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்திர மூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்ண்டுகொண்டு வருகின்றனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கல்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, வடக்கு பட்டம் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் கலந்துகொண்டு திட்டத்தின் சிறப்புகள் குறித்து கூறினார்.

    இதில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

    தொடர்ந்து, பயனாளிகளுக்கு முழு மானியத்தில் தென்னங்கன்றுகள், 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள், துத்தநாக சல்பேட், 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

    இதில் வேளாண்மை துணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை அலுவலர் மகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் வேளாண் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • ரூ.120 கோடி செலவில் புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
    • வருகிற மார்ச் 8-ந் தேதி முதல் நிரந்தர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி:

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவை வருகிற 29-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிய அகல ரெயில் பாதை பணிகளை கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ராமலிங்கம், முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், கோட்ட பொறியாளர் ரவிக்குமார், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) வினோத் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில்,

    வருகிற மார்ச் 8-ந் தேதி முதல் நிரந்தர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதற்கு பின் கம்பன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் திருத்துறைப்பூண்டி வழியாக இயக்குவதற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    முன்னதாக, ரெயில் உபயோக சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர் எடையூர் மணிமாறன், துணை தலைவர் துரை ராயப்பன், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அனைவரையும் வரவேற்றனர்.

    • கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மன்னார்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி.துரை வேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்படுகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    • மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி மீளமுடியாமல் வாழ்க்கை வீணாகிறது.
    • தீமைகளிலிருந்து மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின கருத்தரங்கம் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் சிகாமணி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில்:- போதை பொருட்களுக்கு மாணவர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இதனால் அதிலிருந்து மீளமுடியாமல் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. இதன் தீமைகளை அறிந்து கொண்டு மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், மேலும் மாணவர்கள் தங்களை நல்வழிபடுத்தி கொள்ள காவல்துறை எல்லா நேரங்களிலும் துணை நிற்கும் என்றார்.

    போதை பழக்கத்ததால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர். திலீபன் ராஜா விளக்கினார். ஒருங்கிணைந்த சேவை மைய உளவியலாளர் ராஜேஸ்வரி போதை பழக்கத்தில் இருந்து மீள்வது குறித்து கூறினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் கலந்துகொண்டு பேசினார்.

    முடிவில் மத்திய பல்கலைக்கழக விரிவுரையாளர் சரண்யா சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

    • ஆட்டோ டிரைவர் உள்பட மூவரும் காயமடைந்தனர்.
    • விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கபிலன் (வயது60). இவர் நேற்று முன்தினம் திருவாரூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    தரிசனம் முடித்து தனது மனைவி லதாவுடன் ஸ்கூட்டரில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்டார். மயிலாடுதுறை சாலை சேந்தமங்கலம் என்ற இடத்தில் எதிரே வந்த ஆட்டோ, கபிலன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

    இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் ஆட்டோ டிரைவர் சொரக்குடி பகுதியை சேர்ந்த சங்கர் (30) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

    இதனையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கபிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயம் அடைந்த லதா, ஆட்டோ டிரைவர் சங்கர் ஆகிய இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.
    • அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரெயில் சேவைகள் வருகிற 29-ந்தேதி இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாக இருந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் அகஸ்தியம்பள்ளி.

    இங்கிருந்து அண்டை நாடான இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள கடல் பாதை வழியாகும். மேலும் பாக் ஜலச்சந்தி என்று சொல்லக்கூடிய பாக் நீர் இணையும் இடம் இங்கு தான் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அகத்தியன் பள்ளிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் ஐந்து நாட்கள் காலை 6.45 மணிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கும் திருத்துறைப்பூண்டியில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும்.

    மறுமார்க்கத்தில் அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 7.55 மணிக்கும் மாலை 4.40 மணிக்கும் புறப்படும்.

    வெள்ளிக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்சிக்கும் மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சேவைகள் திருவாரூர்-காரைக்குடி ரெயில் சேவைக்கு திருத்–துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இணைப்பாக அமையும். எனவே பொதுமக்கள் இந்த ரெயில் சேவை–களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் அகஸ்தியம்பள்ளியில் இருந்து விழுப்புரம், காரைக்குடி ஆகிய நகரங்களுக்கு நேரடி சேவைகளை பெற்றிடலாம்.

    குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.
    • உழவர் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது.

    நவக்கிரகங்களில் ஒருவரான சனீஸ்வரர், இங்கு பொங்கு சனீஸ்வராக அருள்பாலிப்பதால் இக்கோவில் பொங்கு சனீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் தனிச்சன்னதியில் பொங்கு சனி பகவான் கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் உழவர் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
    • தெய்வீக வனங்களை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நட்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், 96.நெம்மேலி ஊராட்சியில் மனோலயம் ஹெல்த் கேர் டிரஸ்ட் சங்கமாஸ் இன்டர்நேஷனல், ஐயோஃபா மற்றும் 108 தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் 108 இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபு வழிபட்ட பஞ்சவாடி எனப்படும் தெய்வீக வனங்களை உருவாக்க முடிவு செய்து மரக்கன்றுகள் நடதிட்டமிட்டது.

    அதன்படி, மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் தி.மனோகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் சதீஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
    • உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் கரையங்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது41).

    விவசாயி. இவருக்கு தொடர்ச்சியாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த ஆண்டும் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை எப்படி கட்டுவது?

    என்று விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருடைய மனைவி தேவசேனா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×