என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் இன்று தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    பாளை மனக்காவலன்பிள்ளை நகர் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த வாரம் சாலை அமைப்பதற்காக மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை அமைக்க கோரி நேற்று எங்கள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் சாலை அமைக்கும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் விளக்கம் கூற முடியவில்லை. எனவே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மனு கொடுக்க வந்த கவுன்சிலர் இந்திரா மற்றும் அவரது கணவர் சுண்ணாம்பு மணி ஆகியோரை கமிஷனரை சந்திக்க காத்திருக்குமாறு கூறினர். உடனே அவர்கள் இருவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு கமிஷனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

    • புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது.
    • காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிப்பானவர்கள். திருநெல்வேலி வந்துள்ளதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    தமிழக மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தமிழகத்திற்காக நான் அளித்த அத்தனை உறுதிமொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இது எனது உத்தரவாதம். பா.ஜ.க.வின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள்.

    புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நாடு ஒரு புதிய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது. இதன் பலன் தமிழகத்துக்கு கிடைக்கும்.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலககெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    தமிழக மக்கள் எதிர்காலத்தை பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவில் மிகவும் சிறந்தவர்கள். இதுதான் தமிழகத்தை பா.ஜனதாவுடன் நெருக்கமாக்குகிறது. பா.ஜனதா கட்சியின் அணுகுமுறையும் சித்தாந்தமும் தமிழக மக்களின் எண்ணத்தோடு ஒத்துப்போகிறது.

    உலகெங்கிலும் வசிக்கும் தமிழக மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இன்று 1 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால் தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம்.

    தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிராக மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளி விட்டார்கள். நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக மக்களிடம் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை.

    காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டை பிளவுபடுத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது. கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    எங்களுக்கு நாடுதான் முதலிடம், மக்கள்தான் முக்கியம். இது வலிமையான பாரதம், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் விழுந்தார். அவரை ஒரு கீறல் கூட இல்லாமல் கூட்டிட்டு வந்தோம். இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தனர். அவர்களை மீட்டு வந்தோம்.

    நம் நாட்டு மக்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. ஏனென்றால் இங்கு இருப்பது மோடி. மோடியை மீறி யாரும் இந்தியன் மீது கை வைக்க முடியாது.

    தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது. இந்த அரசுகளை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. தி.மு.க. பொய் வேஷம் போடுகிறது. தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. இதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இனி தி.மு.க.வை பார்க்க முடியாது. இனி தி.மு.க. இங்கு இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்து விட்டார். உங்கள் கூட அண்ணாமலை இருக்கிறார். இனி தி.மு.க.வை நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. தி.மு.க. இங்கு முற்றிலுமாக அகற்றப்படும்.

    நெல்லை, சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது. அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும்.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. நெல்லை, தூத்துக்குடியில் சோலார் மின் உற்பத்தி நிலையம், காற்றாலை, விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ராமர் கோவில் விவகாரத்தில் தி.மு.க. வெறுப்பு அரசியலை பரப்பியது.

    தமிழ் வேறு, இந்தி வேறு என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியை தி.மு.க. கையாள்கிறது. இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து தமிழரான எல்.முருகனை பா.ஜனதா எம்.பி.யாக்கி உள்ளது.

    மத்திய அரசின் மீது குற்றம் சொல்வதை தி.மு.க. வேலையாக வைத்துள்ளது. அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம்.

    தனது குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை தி.மு.க. கண்டு கொள்வதில்லை.

    தமிழக மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்வியை தாய் மொழியில் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென் தமிழக மக்களின் பிரச்சினைகளை பா.ஜ.க. நன்கு அறிந்துள்ளது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். என்ன வளர்ச்சி பணிகளை செய்ய போகிறோம் என அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை.

    ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தங்களுடைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கு பாடுபடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

    இங்கு எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதை மட்டுமே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர்.

    தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. அவ்வப்போது ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசுகிறேன். ஆனால் முழுமையாக தமிழில் பேச முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்குள் இருக்கிறது.

    நான் என்ன பேசுகிறேன் என்று ஆர்வத்தோடு கேட்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய 100 கோடி வணக்கம்.

    நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை 2 கை எடுத்து கும்பிடுகிறேன். தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு ஆசியும், வாழ்த்தும் கொடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட இன்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாடு எனக்கு இத்தகைய ஆதரவு, ஆசீர்வாதம் தருவது எனது பாக்கியம்.

    ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ அதை விட அதிகமாக நான் உங்களுக்காக உழைப்பேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
    • தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கி உள்ளனர்.

    * பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.

    * 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இன்று அது 1 கோடியாக உயர்ந்துள்ளது.

    * தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.

    * உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் மூலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

    * இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும், இது மோடியின் உத்தரவாதம்.

    * தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள்.

    * மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது.

    * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.

    * நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.

    * பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது.

    * அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    * காங்கிரசும், திமுகவும் நாட்டை பிரிக்கின்றன.

    * தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை ம.பி.யில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

    * தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது.

    * கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.

    * மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது.

    * மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது.

    * தமிழகத்தில் தி.மு.க. இனி இருக்காது, எங்கு தேடினாலும் கிடைக்காது.

    * வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் மிக அவசியம்.

    * நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது.

    * நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

    * வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

    * விருதுநகரில் பிரதம மந்திரி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.
    • தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். "அனைவருக்கும் வணக்கம்" என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அவர் கூறியதாவது:

    * அனைவருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.

    * அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள்.

    * தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன்.

    * பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.

    * தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

    * உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம்.

    * தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.

    * பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.

    * மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.

    * நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.

    * உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

    * இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது என்று கூறினார்.

    • நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
    • பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    நெல்லை:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

    இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அங்கிருந்து பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். காரின் படிக்கட்டில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார்.

    மோடி மோடி என உற்சாக கூச்சலிட்டு தொண்டர்கள் அவரை வரவேற்றனர். நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமரை பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் வீட்டிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • பெரியார் சிலை முன்பு கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    மத்திய அரசிற்கு மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.

    மேலும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி தொடர்பான நிலுவை தொகைகளை திருப்பி தராமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட நிலையிலும் எந்த நிதியையும் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகம் முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

    மேலும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் வீட்டிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் நெல்லை வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டில் இருந்து பாளை பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை வரை கருப்பு கொடிகளை ஏந்தி மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

    தொடர்ந்து பெரியார் சிலை முன்பு கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்களை போலீசார் வழிமறித்து கைது செய்தனர்.

    • ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.
    • முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    முக்கூடல்:

    காஞ்சிபுரம் நாகதீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை மாணிக்கம். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு மோகன்ராஜ், நவீன் (வயது 23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

    துரை மாணிக்கம் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக ரெயிலில் நேற்று காலையில் நெல்லை வந்தார். பின்னர் அவர்கள் பாபநாசம் கோவிலுக்கு சென்று விட்டு, மாலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த நவீன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை அண்ணன் மோகன்ராஜ் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து முக்கூடல் போலீசாருக்கும், அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய நவீனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நவீன் உடலை தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மதியம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நவீன் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

    ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் மகன் நீரில் மூழ்கி மாயமானதால் அவரது பெற்றோர் கரையில் அமர்ந்து கதறி அழுத சம்பவம் கண்கலங்க செய்தது.

    • வருகிற தேர்தலில் பண நாயகத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்திற்கு அடிய பணிய வேண்டும்.
    • சபாநாயகர் சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.

    நெல்லை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சியின் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டைரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு மண்டே பெட்டிஷன் உள்பட பல்வேறு வழிகளில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

    கூட்டணியில் சேர்வது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அ.தி.மு.க.வுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பா.ஜனதாவை சேர்ந்தவர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியா? அல்லது பா.ஜனதா கூட்டணியா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்.


    இந்த கூட்டணி முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு முடிவு எடுக்கப்படும். நெல்லையில் நடந்த கூட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என கட்சி தொண்டர்கள் வலியுறுத்தினர்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். அதுவரை காத்திருக்க வேண்டும். வருகிற தேர்தலில் பண நாயகத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்திற்கு அடிய பணிய வேண்டும்.

    சபாநாயகர் சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சபாநாயகர் போல் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி நாளை மறுநாள் (புதன்கிழமை) தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து நெல்லை வரும் பிரதமர் மோடி, பாளை நீதிமன்றம் எதிரே பெல் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா நெல்லை பாராளுமன்ற தொகுதி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அவர் விழா மேடைக்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் ஜான்ஸ் பள்ளி மைதானத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் சுற்றளவில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், சாலையோர பழக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    விழா மைதானம், ஹெலிகாப்டர் வந்திறங்கும் மைதானம் உள்ளிட்டவை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி நெல்லையில் 10 போலீஸ் சூப்பிரண்டுகள், 14 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதற்காக காவல்துறையின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வருகின்றனர். இதுதவிர மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    பிரதமர் மோடி நெல்லைக்கு முதல் முறையாக வருகை தர இருக்கும் நிலையில் விழா மேடைக்கு அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு சென்று சோதனை செய்யப்பட்டது.

    • காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

    காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

    இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

    • பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் முகாமிட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை மறுநாள் (27-ந்தேதி) வருகிறார். வருகிற 28-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    பின்னர் அங்கிருந்து காலை 10.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு வருகிறார். அவர் பாளை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் வந்திறங்கி அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலமாக பாளை ஒருங்கிணைந்த நீதிமுன்றம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதனையொட்டி மைதானத்தில் விழா மேடை மற்றும் பொதுமக்கள் அமருவதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் முகாமிட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறும் மைதானத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையிலும் சுற்றிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்களில் வசிப்பவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.


    அங்கு நடைபெறும் கட்டுமான பணிகள், வடமாநில பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்து மாநகர உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் வீடு வீடாக சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் வெளியாட்கள் யாரேனும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனரா எனவும் விசாரித்து வருகின்றனர். மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வரும்போது மொத்தம் 3 ஹெலிகாப்டர் அவருடன் வருகிறது. இதனால் அங்கு 3 ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் வந்து நிற்குமாறு கான்கிரீட் கலவை கொண்டு இறங்குதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரவிலும் ஜெனரேட்டர் மூலமாக விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடக்கிறது.

    விழா நடைபெறும் மைதானம் மற்றும் ஹெலிபேட் மைதானம் முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தற்காலிக சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

    அந்த மைதானத்திற்குள் வெளியாட்கள் யாரும் வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் விழா நடைபெறும் பெல் மைதானத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தை தொடங்கி வைக்கிறார்.
    • தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறார்.

    அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். தொடர்ந்து மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    மறுநாள் (28-ந்தேதி) காலை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி துறை முகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து காணொலி காட்சி மூலம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தை தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மைதானத்திற்கு வரும் பிரதமர் மோடி பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


    பாளையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜை பணி பெல் மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் தமிழக சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட தலைவர்கள் தயாசங்கர், தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி மற்றும் நிர்வாகிகள் வேல் ஆறுமுகம், பாபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி 15 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போது முதல் முறையாக நெல்லைக்கு பிரதமர் வருகிறார். பிரதமர் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் மத்தியில் மிகப்பெரிய மன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    தாமரைக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மீண்டும் 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் எனஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பா.ஜ.க.விற்கு தருவார்கள் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×