என் மலர்
திருநெல்வேலி
- சி.சிடி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்.
- ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தினந்தோறும் நெல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் நெல்லைக்கு வந்தது.
நெல்லை புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு பஸ் வந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பஸ்சை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 9-வது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமார் 2½ அடி நீளம் கொண்ட ஒரு அரிவாளும் கிடந்தது.
இதுகுறித்து பணிமனை மேலாளர் கண்ணன் பாளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூலியட், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பணிமனைக்கு விரைந்து வந்து அரிவாள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றினர்.
மேலும் அந்த பஸ்சில் வேறு ஏதும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று பஸ் முழுவதையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாள், துப்பாக்கியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 102 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் வந்தவர்கள், அந்த இருக்கையில் பயணித்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
அப்போது அந்த இருக்கையில் பயணித்தவர் கோவில்பட்டியில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் பெயர் மட்டுமே இருந்தது. அவரது முகவரி இல்லை.
இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு வழக்கமாக அரசு விரைவு பஸ்கள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சிடி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது பாட்டியின் இறப்பு நிகழ்விற்கு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து வந்ததாகவும், படுக்கைக்கு கீழ் ஆயுதங்கள் இருந்த விஷயமே போலீசார் தன்னை விசாரிக்கும்போது தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை இன்று பாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் உத்தர விட்டுள்ளனர். அங்கு வைத்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அந்த வாலிபர் கூறுவது உண்மையெனில், இந்த ஆயுதங்களை வேறு யார் பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பதை அறியும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து இறுதி முடிவுக்கு வருவதற்காக டி.என்.ஏ. எடுத்து அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
- நேற்று ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு சிறப்பு தனிப்படையை போலீசார் அமைத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் 10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அவரது உடல் மீட்கப்பட்ட தோட்டத்தில் கிடைத்துள்ள தடயங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரது மர்ம மரணம் குறித்து இறுதி முடிவுக்கு வருவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை எடுத்து அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அவரது உடலில் இருந்து எலும்புகளும் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக பெங்களூரு, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை விசாரணை பல கோணங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், இறுதியாக ஆய்வக பரிசோதனை முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இன்னும் ஒருசில நாட்களில் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை, டி.என்.ஏ. அறிக்கை, உடல் எலும்பு அறிக்கை உள்ளிட்டவை கிடைத்து விடும் என்பதால் போலீசார் காத்திருக்கின்றனர்.
அதேநேரத்தில் நேற்று ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு சிறப்பு தனிப்படையை போலீசார் அமைத்துள்ளனர். அவர்கள் புதிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கரைசுத்துபுதூருக்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில் திசையன் விளை ஜவுளிக்கடை, இட்டமொழியில் உள்ள அரசு வங்கி, ஆனைகுடி நகைக்கடை உள்பட வழிநெடுகிலும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமையிலான 3 தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
இதில் மாயமான அன்று ஜெயக்குமார் காரில் அந்த வழியாக சென்ற காட்சிகளும், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரையிலும் அவரை பின்தொடர்ந்தபடியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.
- அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
- உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது.
- ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள்.
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் கடந்த 10 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் நெல்லை சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 32 பேர் முக்கிய பிரமுகர்கள் ஆவர்.
கடந்த 2-ந்தேதி அன்று ஜெயக்குமார் மாயமான நிலையில் மறுநாள் 3-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே ஜெயக்குமார் வீட்டு அருகே உள்ள தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கம்பிகளால் சுற்றப்பட்டிருந்த நிலையில் பெரிய கடப்பா கல்லும் கட்டப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.
உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது. அந்த டார்ச் லைட்டும் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த இடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டது. தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்றும் கிடைத்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இப்படி ஜெயக்குமார் கொலை தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறார்கள்.
ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், சந்தேக மர்மமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவர் பெரிய கடப்பா கல்லை உடலில் கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சில்வர் நிறத்திலான கையடக்க பிரசை வாயில் திணித்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. எனவே ஜெயக்குமாரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து எரித்துக் கொன்று இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. ஜெயக்குமார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்கள் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் சிலரே அவரை தீர்த்துக் கட்டி இருக்கலாமோ? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரது கடிதங்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கடிதங்கள் உயிரிழப்பதற்கு முன்பு அவரால் எழுதப்பட்டவைதானா? என்பதை கண்டறிவதற்காக தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தின் உண்மை தன்மை பற்றிய விவரங்கள் தெரியவரும்.
ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு கிடைத்து உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமாருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் எல்லை மீறி போய் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதில் ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது உறவினர்களே திட்டம் போட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்து உள்ளது. இப்படி ஜெயக்குமாரின் மரணத்தில் இறுதிக் கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கலாமா? என்கிற கோணத்திலும் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தனது சொத்துக்கள் தொடர்பாக ஜெயக்குமார் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் எழுதியுள்ள மற்ற கடிதங்களில் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்திலும் அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்கிற தகவலை குறிப்பிடவில்லை. இதன்மூலம் தனது மரணத்துக்கு பிறகு தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஜெயக்குமார் செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது.
இதன்மூலம் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இருப்பினும் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம் ஒரு வாரத்தில் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஜி.கண்ணன் இதனை தெரிவித்துள்ள நிலையில் 10 தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை நெருங்கி உள்ள போலீசார் அவர்களை பிடிக்க பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.
- முக்கூடல், பாப்பாக்குடி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, முத்தையாபுரம், பழையகாயல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி நெல்லையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியம் 1 மணி அளவில் பலத்த காற்று வீசியது. 1.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. பின்னர் சாரல் மழை போல் தூறியது.
இதனால் நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதேபோல் மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதேபோல் முக்கூடல், பாப்பாக்குடி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆண்டாள் (வயது 60) என்பவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். மழை காரணமாக சாலையோரத்தில் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ஆண்டாள் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அங்கு நின்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. செங்கோட்டையில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகிரி பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலையில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் குற்றாலம் மெயின் அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதை அறிந்த சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, முத்தையாபுரம், பழையகாயல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமையான சூழலுக்கு மாறியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கோடை மழை வெளுத்து வாங்கியது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோன்று, பொள்ளாச்சி, நீலகிரியிலும் பலத்த மழை பெய்தது.
- ஆம்புலன்சில் அவரை ஏற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- வாலிபர் தீ வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொள்வார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள மனுப்பெட்டியில் மக்கள் மனுக்களை போட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் மக்கள் தங்களது மனுக்களை கலெக்டர் அலுவலக மனுபெட்டியில் போட்டு சென்றனர். போலீசாரும் அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் நின்று கொண்டு மக்களை முழுமையாக சோதனை செய்து அதன் பின்னர் உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பூங்கா கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஓடி வந்தார்.
அவர் திடீரென ஓடி வந்து கொண்டு இருக்கும் போதே தனது கையில் வைத்திருந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவரது உடலில் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் நுழைவு வாயிலை கடந்து கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஓடிச் சென்றார். அதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அலறி ஓடினர். உடனே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை தலையில் ஊற்றி தீயை அணைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நெல்லையை அடுத்த மருதகுளம் கிராமத்தை சேர்ந்த சங்கரசுப்பு (வயது36) என்பதும், இடப்பிரச்சினை தொடர்பாக போலீசார் விசாரணையை தாமதப்படுத்தியதால் தீக்குளித்ததாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகயைில், எங்கள் குடும்பத்தினருக்கும், எங்களது பெரியப்பா குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக எனக்கு சொந்தமான 1 ஏக்கர் இடத்தை உறவினர்கள் பறித்துக் கொண்டனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையில் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தீக்குளித்தேன் என்றார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் விசாரணை அதிகாரிகள் நேரில் வரவழைக்கப்பட்டு உடனடியாக அந்த புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுமார் 30 சதவீத தீக்காயத்துடன் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இசக்கிமுத்து என்ற கூலி தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து 4 நுழைவு வாயில் கதவுகள் மூடப்பட்டு பிரதான வாயில் மற்றும் அஞ்சலகம் வாயில் வழியாக மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த 2 வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, மக்களை முழுமையாக சோதனை செய்த பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் வாலிபர் தீ வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நெல்லை சரக டிஐஜி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
ஜெயக்குமாரின் எலும்புகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது.
- முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும்.
- மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் 70 சதவீதம் நடந்து முடிந்துவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும். அதன்படி 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை நிறுத்தப்பட்டது.
இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைய 60 நாட்கள் வரை ஆகலாம். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு தினமும் கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முதலாவது அணு உலை மூலமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டிற்கும் அதிகமாக தேவைப்படும் சூழ்நிலையில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 562 மெகா வாட் மின் உற்பத்தி பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படுவதால் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
- நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
- இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது.
நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் காந்தி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில், இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறன் அங்கு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், "இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், விடுதலை இரண்டு படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் ஏன்னு தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த 2-ந்தேதி இரவு ஜெயக்குமார் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் ஒரு வாரத்தை கடந்த பின்னும் இதுவரை உறுதியான முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் நிலையில், அவர் உடல் எரிக்கப்பட்டு கிடந்த தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு ஏதேனும் தடயங்கள் சிக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நேற்றும் 5-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஜெயக்குமார் பிணமாக கிடந்த குழியில் மீண்டும் ஆய்வு செய்தபோது அதில் எரிந்த நிலையில் டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2-ந்தேதி அன்று இரவில் அவர் மாயம் ஆவதற்கு முன்பாக திசையன்விளை பஜாரில் ஒரு டார்ச் லைட் வாங்கினார். அவை அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் அவரது குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அந்த டார்ச் லைட் அவர் திசையன்விளையில் வாங்கியது தானா? என்பதை அறிய கடை உரிமையாளரிடம் அந்த லைட்டை கொண்டு சென்று தனிப்படையினர் இன்று விசாரிக்கின்றனர். அதில் ஏதேனும் கைரேகைகள் உள்ளதா? என கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தோட்டத்தில் தேக்கு மரங்கள் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து விழுந்துள்ள காய்ந்த இலை சறுகுகளை அப்புறப்படுத்தி வேறு ஏதேனும் தடயங்கள் சிக்குகிறதா எனவும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்படுகிறது.
ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தும் அவரது வீடு மற்றும் தோட்ட பகுதிகளிலேயே சிக்கி வருவதால் இன்னும் சில தினங்களில் வழக்கு முடிவுக்கு வந்துவிடும் எனவும், தற்போது இறுதிகட்ட தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2-ந்தேதி இரவு அவர் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்று இரவு உவரியை அடுத்த குட்டம் அருகே உள்ள தோப்புவிளை பகுதியில் ஜெயக்குமாரின் செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆனதாக ஏற்கனவே போலீசார் தெரிவித்தனர். அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூரில் இருந்து தோப்புவிளை மொத்தம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
ஜெயக்குமார் அரசியில் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் யாரையும் சந்திக்க வேண்டும் என்றால் இந்த பாதையில் தான் வழக்கமாக குட்டம், தோப்புவிளை கிராமங்களுக்கு செல்வார். ஆனால் 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு சுற்றுப்பாதையை பயன்படுத்தி சென்றுள்ளார். அவர் கரைசுத்துபுதூரில் இருந்து காரில் 7.30 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, மன்னார்புரம், அணைக்கரை, பெருங்குளம், உறுமன்குளம், பெட்டைக்குளம், அணைக்குடி, குட்டம் வழியாக சுமார் 43 கிலோமீட்டர் சுற்றி சென்று தோப்புவிளையை அடைந்துள்ளார்.
அவர் மன்னார்புரம் விலக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் இரவு 8 மணிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு அதன் பின்னர் வேறு எங்கும் தனது காரை நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் ஜெயக்குமாரின் காரில் வேறு யாரும் பயணம் செய்யவில்லை என்றும் அந்த பங்க் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனியாக தோப்புவிளை சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த இரவு நேரத்தில் அதுவும் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய காட்டு வழிப்பாதையில் 43 கிலோமீட்டர் சுற்றி அவர் பயணம் மேற்கொண்டது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவரது அந்த கடைசி 2 மணி நேர பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
- தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந் தேதி அதிகாலையில் அவர் இறந்திருக்கலாம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 2-ந் தேதி திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் இரவு 10.10 மணி அளவில் ஜெயக்குமார் சாதாரணமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், அந்த கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அவர் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பல்வேறு தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் வாங்கிய டார்ச் லைட் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரிக் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து டார்ச் லைட் மீட்கப்பட்டுள்ளது. முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் மீட்கப்பட்ட நிலையில் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
- இருவரது கை-கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு தொடர்பாக ஒரு வாரம் ஆகியும் துப்பு துலங்காததால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம் கொலைக்கும், ஜெயக்குமார் மரண வழக்கிலும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாகவும், இதில் ஈடுபட்டவர்ககள் கூலிப்படைகளாக இருக்கலாம் எனவும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அமைச்சர் நேருவின் சகோதரரான ராமஜெயம் என்பவர் வாயில் துணி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். அதேபோல் ஜெயக்குமார் வாயில் பாத்திரம் கழுவும் பிரஸ் வைக்கப்பட்டுள்ளது. இருவரது கை-கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில், ராமஜெயத்தின் உடலும் கொலை செய்யப்பட்டு சில பாகங்கள் எரிந்து இருந்ததால் அவரும் கொலை செய்யப்பட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றனர்.
இருவரது மரணத்திலும் கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ராமஜெயம் கொலையில் பல ஆண்டுகளாக கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அதன் மூலம் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம் என அவர்கள் தெரிவித்துள்ளர்.
இதற்கிடையே இறந்தது தனது கணவர் அல்ல என ஜெயக்குமாரின் மனைவி கூறியதால் ஜெயக்குமாரின் எலும்பு மற்றும் சில உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதனை பெறுவதற்காக நெல்லை தனிப்படையினர் மதுரை விரைந்துள்ளனர். அந்த அறிக்கையை அவர்கள் இன்று மாலை நெல்லை எஸ்.பி.யிடம் வழங்குவார்கள். அதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்டது ஜெயக்குமாரா? என்பது உறுதி செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






