search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayakumar murder case"

    • ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
    • இருவரது கை-கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு தொடர்பாக ஒரு வாரம் ஆகியும் துப்பு துலங்காததால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள்.

    இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இந்நிலையில் திருச்சியில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம் கொலைக்கும், ஜெயக்குமார் மரண வழக்கிலும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாகவும், இதில் ஈடுபட்டவர்ககள் கூலிப்படைகளாக இருக்கலாம் எனவும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அமைச்சர் நேருவின் சகோதரரான ராமஜெயம் என்பவர் வாயில் துணி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். அதேபோல் ஜெயக்குமார் வாயில் பாத்திரம் கழுவும் பிரஸ் வைக்கப்பட்டுள்ளது. இருவரது கை-கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில், ராமஜெயத்தின் உடலும் கொலை செய்யப்பட்டு சில பாகங்கள் எரிந்து இருந்ததால் அவரும் கொலை செய்யப்பட்டு எரிக்க முயற்சி நடந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றனர்.

    இருவரது மரணத்திலும் கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ராமஜெயம் கொலையில் பல ஆண்டுகளாக கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அதன் மூலம் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம் என அவர்கள் தெரிவித்துள்ளர்.

    இதற்கிடையே இறந்தது தனது கணவர் அல்ல என ஜெயக்குமாரின் மனைவி கூறியதால் ஜெயக்குமாரின் எலும்பு மற்றும் சில உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    அதனை பெறுவதற்காக நெல்லை தனிப்படையினர் மதுரை விரைந்துள்ளனர். அந்த அறிக்கையை அவர்கள் இன்று மாலை நெல்லை எஸ்.பி.யிடம் வழங்குவார்கள். அதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்டது ஜெயக்குமாரா? என்பது உறுதி செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • எலும்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • கடிதத்தில் இருந்த அரசியல் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் 1 வாரமாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.

    அவரது உடல் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்ததும், விசாரணையின் அடிப்படையிலும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

    ஆனாலும் கொலையாளிகள் யார்? என்பது மர்மமாக உள்ளது. அவரது உடலில் இருந்து எலும்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவர் எழுதியதாக கிடைத்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொழில் அதிபர்களிடம் தொழில் ரீதியில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா? என்று விசாரணை நடத்தினர். கடிதத்தில் இருந்த அரசியல் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித முடிவும் கிடைக்கவில்லை.

    தடயவியல் நிபுணர்கள் அறிக்கையின்படி அவரது குரல்வளை பகுதியில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிராப்பர் துகள்கள் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் அவரது வீட்டில் கைரேகை மற்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவரது வீட்டு மாட்டு தொழுவத்தில்அந்த ஸ்கிராப்பருக்கான கவர் கிடந்தது. அவர் மாயமான 2-ந்தேதி பஜாரில் வாங்கி வந்த டார்ச்லைட் அவரது வீட்டிற்குள்ளேயே கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே நேற்று கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு துருப்பிடித்த கத்தி அதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

    கரைசுத்துபுதூரில் அவர் வீடு தெரு முனையில் அமைந்துள்ளது. அதன்பின்னர் அமைந்திருக்கும் அனைத்து வீடுகளிலும் எந்த திருட்டு சம்பவங்கள் நடந்தாலும் ஜெயக்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக தான் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள்.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயக்குமார் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நாளன்று அவர் வீட்டை சுற்றிலும் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சில ஆதாரங்களும் அவரது வீடு, தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிடைத்ததால் அவருக்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் முழுமையான ஒரு முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறி வருவதால் நாளைக்குள் வழக்கை முடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அவ்வாறு இல்லையெனில் இந்த வழக்கை விரைவில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதற்கு உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காணாமல் போன அவரது 2 செல்போன்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
    • கிணற்றில் அவரது செல்போன் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற திட்டமிட்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங் மர்மமரணம் வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதனால் தடயங்களை தேடி போலீசார் அலைந்து வருகின்றனர். அவரது உடல் கிடந்த தோட்டத்தில் மேலும் சில தடயங்களை சேகரிக்க தொடர்ந்து நேற்று 4-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் அங்கு ஆய்வு செய்தனர்.

    காணாமல் போன அவரது 2 செல்போன்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் அவரது செல்போன் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற திட்டமிட்டனர்.

    பின்னர் நேற்று இரவு 2 ராட்சத மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடங்கினர். இன்று காலை வரையிலும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது.

    சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்த 22 அடி தண்ணீரும் இன்று காலையில் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. எனினும் இடுப்பு அளவிற்கு சகதி இருப்பதால் முத்து குளிப்பவர்கள் அல்லது தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றுக்குள் இறங்க செய்து அதில் ஏதேனும் தடயம் சிக்குகிறதா? என்ற சோதனையில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்டு இருப்பதால், அவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு 2 லிட்டர் அளவு கொண்ட பாட்டில் கிடைத்துள்ளது. அதில் பதிவாகியுள்ள கைரேகைகளை நிபுணர்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு.
    • சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், வருகை பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள போலீசாருக்கு விசாரணையை துரிதப்படுத்துதல், விசாரணையை கையாளும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.

    இந்த ஆய்வின் போது சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், சிவக்குமார், இன்ஸ்பெக்டர் உலக ராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியன், முனியாண்டி, கார்த்திகா செல்வி ஆகியோர் இருந்தனர். முன்னதாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்த எஸ்.பி. முத்தரசிக்கு போலீசார் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு திடீர் வருகையால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்காமல் இருந்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி வருகையினால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
    • சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந் தேதி அதிகாலையில் அவர் இறந்திருக்கலாம் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மாயமான அன்று அவர் எங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ந் தேதி திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் இரவு 10.10 மணி அளவில் ஜெயக்குமார் சாதாரணமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், அந்த கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அவர் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பல்வேறு தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் இன்று 4-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    முன்னதாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் நடைபெற்ற ஆய்வில், 2-ந் தேதி இரவு திசையன்விளை பஜாரில் உள்ள கடையில் ஜெயக்குமார் வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடிதத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எழுதியுள்ளார்.
    • 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்(வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

    இதுகுறித்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் 3-ந்தேதி உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் தனது தந்தை எழுதி வைத்திருந்ததாக கடிதம் ஒன்றையும் போலீசில் அளித்தார்.

    இந்நிலையில் ஜெயக்குமார் 4-ந்தேதி வீட்டுக்கு பின்னால் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    ஜெயக்குமார் உடலில் மின்சார வயர்கள் கட்டப்பட்டு இருந்தது. அவரது தலை பகுதியில் தொடங்கி இடுப்பு, கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வயர் கட்டப்பட்டிருந்தது. வயிற்றின் அடிப்பகுதியில் மரப்பலகை கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் சம்பவ இடத்தில் மண்எண்ணை கொட்டிக்கிடந்ததும், காய்ந்த சறுகுகள், காய்ந்த தென்னை மட்டைகள் உள்ளிட்டவை அவரது உடல் மீது கிடந்து தீயில் எரிந்த நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் இருந்து சுமார் 350 அடி தூரத்தில் தான் ஜெயக்குமாரின் தோட்டம் உள்ளது. அங்கு அவர் எரிந்து கிடந்தார். தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் ஜெயக்குமார் 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந்தேதி அதிகாலையில் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

    தற்கொலை செய்த பின்னர் ஒருவரது உடல் எரிக்கப்பட்டிருந்தால் அதனால் உண்டாகும் புகை அவரின் உடலிலேயே தேங்கி இருக்கும்.

    ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது நுரையீரல் உள்ளிட்ட எந்த பகுதிகளிலும் புகை எதுவும் தேங்கவில்லை. எனவே இது கொலை சம்பவமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று தாக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், பின்னர் உடலை தோட்டத்தில் வைத்து எரித்து இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

    அவ்வாறு நடைபெற்று இருந்தால் தோட்டத்தின் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு அவரது அலறல் சத்தம் கேட்டிருக்கும். மேலும் இரவு நேரத்தில் சம்பவம் நடந்திருப்பதால் தீயின் வெளிச்சம் அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் இருக்காது.

    அதேநேரத்தில் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கணேசன் எப்போதும் அங்கு தான் இருப்பார் என்பதால் இது தொடர்பாக அவரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் வழங்கப்பட்ட கடிதங்களில் தனக்கு யார் யார் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? தான் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை எழுதி வைத்திருந்தார்.

    அவர் தனது குடும்பத்திற்கு, மருமகனுக்கு என தனித்தனியாக எழுதியிருந்த கடிதங்களை ஆராய்ந்தபோது அவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் அந்த கடிதங்களில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் தனக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த பணத்தை கேட்கும்போது எதிர்தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் அதில் எழுதியுள்ளார்.

    இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. எனவே இந்த கோணத்திலும் விசாரணையை நகர்த்தி வருகின்றனர்.

    இதனையொட்டி அவர் கடிதத்தில் எழுதியிருந்த நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக செல்போனிலும், நேரில் அழைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதலாவதாக இடையன்குடி பஞ்சாயத்து தலைவரும், கால்டுவெல் பள்ளி தாளாளருமான ஜேகர் தனக்கு ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

    அவரிடம் பணகுடி இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் கைப்பட எழுரி நடந்த சம்பவங்களை எழுத்துப்பூர்வமாக போலீசார் பெற்று வருகின்றனர்.

    மேலும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஜெயக்குமார் தனசிங் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக கடந்த சில நாட்களாகவே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இன்று ஜெயக்குமார் இறப்பின் 3-வது நாள் துக்க நிகழ்ச்சி முடிந்ததும், அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களில் முக்கிய புள்ளி ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    எனவே அவரை தேடி பிடிக்க 2 தனிப்படை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 7 தனிப்படையினரையும் ஒவ்வொரு கோணத்தில் விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

    ×