என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • விழாவிற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
    • நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்றது. ரஞ்சிதம் வரவேற்று பேசினர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஓராண்டு கால கல்லூரி பணிகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி பேசுகையில், தனது கனவு கல்லூரியான மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாகிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். ஆண்டுவிழா நிகழ்ச்சியை வடிவமைத்த முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளையும் பாராட்டினார் .

    விழாவில் நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் தனது சிறப்புரையில், மாணவிகள் எதையும் மற்றவர்களைப் பார்த்து செய்யாமல் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் சிந்தனையுடன் இக்கல்லூரி மாணவிகளை போல செயல்பட வேண்டும் என்றார்.

    பின்னர் கல்லூரியின் இணையதளத்தை (www.mascedu.org) நிறுவனத் தலைவர் லாரன்ஸ் மாணவி களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    தமிழ்த்துறை உதவி பேராசிரியர் யா. லலிதா எழுதிய "கைக்கு எட்டும் தூரத்தில் மருத்துவம்" என்னும் நூலை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெளியிட ,கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பெற்றுக் கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியார்கள் மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட மத்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் 60 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் அமைக்கப்பட்டு தொடர்ச்சி யாக மாணவ-மாணவிகள் மத்தியில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

    அதன்தொடர்ச்சியாக பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் அப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் வரவேற்றார்.

    மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு சம்பந்தமாக நடந்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின்பகிர்மான வட்ட ஆற்றல் மன்ற ஆய்வு அதிகாரியான பொது பிரிவு செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் வெங்கடேஷ் மணி மாணவ-மாணவி களுக்கு மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் மாணவர்களுக்கு அவர்கள் வீடுகளில் விதிக்கப்பட்ட கடந்த மின் கட்டணத் தொகைக்கும், அடுத்து விதிக்கப்படும் கட்டண தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டு தங்கள் முன்னெடுத்த மின் சிக்கனத்தை அறிந்து கொள்ள அறிவுரை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராஜன் மற்றும் அன்பு ஸ்டார்லின், ஆற்றல் மன்ற குழுவினர் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ஹரிராம் சேட் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர். 

    • தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • மேலும் சில போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது.

    இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீதான புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே வி.கே.புரம் தனிப்பிரிவு ஏட்டு போக பூமன், கல்லிடைக்குறிச்சி தலைமை காவலர் ராஜ்குமார் ஆகியோரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று முன்தினம் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்

    இதற்கிடையே நேற்று இரவு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னைக்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் போலீஸ் நிலைய பணிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகர உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிசயராஜ்க்கு, நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே மேலும் சில போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்களில் பொதுமக்கள் திரண்டு வழிபடுவார்கள். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடை பெற்றது.

    அந்த வகையில் சிறப்பு பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இன்று அதிகாலை தாமிரபரணி ஆற்றில் புனித நீர் எடுத்துவரப்பட்டு கற்குவேல் அய்யனார், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் வந்தனர்.

    பங்குனி உத்திரத்தையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று மகாவீரர் ஜெயந்தி விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    மேலப்புதுக்குடி எட்டு பங்கு இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே கோவிலில் குவிந்தனர். அவர்கள் அருஞ்சுனை தீர்த்தத்தில் புனித நீராடிய பின்னர் கோவிலில் வழிபட்டனர். பிற்பகல் சிறப்பு அலங்கார தீபாராதனை, உபய நிமித்தங்கள் செலுத்தி அய்யனாரை வழிபடுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

    பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினரான ஆத்திக்கண் நாடார், செந்தில் நாடார், அகோபால் நாடார், நாராயணராம் நாடார், உதயகுமார் நாடார், சுப்பிரமணியன் நாடார், தினேஷ் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆண்டுதோறும் பாப நாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் திரள்வார்கள். இங்கு நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    வழக்கமாக முந்தைய நாளே பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை பங்குனி உத்திர திருவிழா நடப்பதை யொட்டி இன்று முதலே பொதுமக்கள் அங்கு குவியத் தொடங்கி உள்ளனர். இன்று இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. வள்ளியூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்தூர் மகாராசுவரர் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது. பக்தர்கள் வசதிக்காக நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி சார்பில் வியாபாரிகள் சந்தைக்குள் வருவதற்கு ரூ. 50 கட்டணத்தில் டோக்கன் வழங்கப்படும்.
    • சிறிய வகை ஆடுகள் ரூ.2 ஆயிரம் முதலும், பெரிய வகை ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதலும் விற்பனையானது.

    நெல்லை:

    தென் மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளில் பிரசித்தி பெற்றது நெல்லை மேலப்பாளையம் சந்தை ஆகும். இங்கு ஆடுகளுடன் மாடுகள், கருவாடு உள்ளிட்டவைகளும் விற்கப்படுவதால் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உண்டு.

    வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் நடைபெறும் இந்த கால்நடை சந்தையில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு வருவார்கள். வாரந்தோறும் சுமார் ரூ. 2 கோடி அளவில் கால்நடைகள் விற்பனை நடைபெறும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் விற்பனை அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் நாளை பங்குனி உத்திரம் நடைபெறுகிறது. இதனால் ஏராளமானோர் வேண்டுதலுக்காக ஆடுகளை வாங்கி செல்வார்கள். இதையொட்டி மேலப்பாளையம் சந்தையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் திரண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இன்று விற்பனைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் வந்திருந்தது. அவை தரத்திற்கேற்ப விற்பனையானது. சிறிய வகை ஆடுகள் ரூ.2 ஆயிரம் முதலும், பெரிய வகை ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதலும் விற்பனையானது.

    இதில் வேலி கிடா வகை ஆடுகள் ஜோடி ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மாநகராட்சி சார்பில் வியாபாரிகள் சந்தைக்குள் வருவதற்கு ரூ. 50 கட்டணத்தில் டோக்கன் வழங்கப்படும். அந்த வகையில் இன்று காலை வரை 20 ஆயிரம் டோக்கன்கள் விற்பனையானது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.10 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

    தொடர்ந்து வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். அதனை அவர்கள் ஆட்டோ, கார், லோடு ஆட்டோ வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதனால் இன்று மேலப்பாளையம் சந்தை பகுதி திருவிழா போல் களைக்கட்டி காணப்பட்டது.

    • மது கடைக்கு வருவோர் காலி மதுப்பாட்டில்களை அருகில் உள்ள நயினார் குளத்தில் வீசி செல்கின்றனர்.
    • கல் குவாரியில் அதிக திறன் கொண்ட மருந்துகளை கொண்டு பாறைகளை வெடிக்க செய்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    வன்னிக் கோனேந்தேலை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    மின் இணைப்பு

    பசுமை வீடு திட்டத்தின் கீழ் நான் கட்டியுள்ள வீட்டிற்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. எனது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மின்சாரம் இல்லாமல் படிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறாள். எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எனது ரேஷன் கார்டு, ஆதார்கார்டுகளை திரும்ப ஒப்படைப்பேன் என கூறியுள்ளார்.

    சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் லெட்சுமி உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் கோவில், பள்ளிகள் அருகே செயல்பட்டு வருகிறது.

    டவுன் நயினார்குளம் சாலையில் செயல்பட்டு வரும் மது கடைக்கு வருவோர் ஆபாசமாக பேசுவதோடு, காலி மதுப்பாட்டில்களை அருகில் உள்ள நயினார் குளத்தில் வீசி செல்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிபுரம் பொது மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊர் திருக்குறுங்குடி பேரூராட்சியின் கீழ் உள்ளது. அதனை நீக்கி செங்கலாகுறிச்சி ஊராட்சியில் எங்கள் ஊரினை சேர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அடிப்படை வசதி இல்லை

    நாராணபுரம் பகுதி-1, சங்கர்நகர் சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜிநகர், வையாபுரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கொடுத்த மனுவில், நாங்கள் 16 ஆண்டுகாலமாக இங்கு குடியிருந்து வருகிறோம்.

    ஆனால் இதுவரை பேரூராட்சி சார்பில் எங்களுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்

    கோபாலசமுத்திரம் அருகே உள்ள ஓமநல்லூர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக திறன் கொண்ட மருந்துகளை கொண்டு பாறைகளை வெடிக்க செய்கிறார்கள். இதனால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அந்த குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    • மாவட்ட தலைவர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் நிர்வாகிகள் நடராஜ கண்ணன், முருகேசன், மாரியப்பன், பரமசிவன், சந்திரலால் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பயிர்கடன், நகைக்கடன், மகளிர்குழு கடன்களை உரிய தொகை வட்டியுடன் முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • ஆண்டியின் மனைவி இசக்கியம்மாளை கணேசன் ஆபாசமாக பேசியுள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த கணேசன், நாராயணனை தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலசடையமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 72).விவசாயி. இவரது மூத்த மகன் கணேசன் (40). இவர் கடந்த ஆண்டு தனது தம்பி ஆண்டியின் மனைவி இசக்கியம்மாளை ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கணேசன் இசக்கியம்மாளிடம் மீண்டும் தகராறு செய்தார். இதைப்பார்த்த நாராயணன் மருமகளிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்டார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த கணேசன், தந்தை நாராயணனை தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக கணேசனை கைது செய்தனர்.

    • கூட்டத்தில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார்.
    • நிகழ்ச்சிகளை காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார்.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் 57-வது மகாசபை கூட்டம், தெற்கு கள்ளிகுளத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கி பேசினார். துணை செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் வரவேற்று பேசினார். செயலாளர் டி.ராஜகுமார் நாடார் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

    காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.ஏ.சிவபாலன் நாடார் பேசுகையில், ''நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவள விழா கொண்டாட வேண்டும்'' என்றார். சமுதாய வளர்ச்சி பணிகள் குறித்து சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் பேசினர். நிகழ்ச்சிகளை காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் சங்க காரியக்கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள், சென்னை கிளை தலைவர் வி.செல்வராஜ் நாடார், செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நாடார், பொருளாளர் எம்.ஜெகதீசன் நாடார் மற்றும் சங்க ஆயுட்கால உறுப்பினர்கள், சமுதாய பெரியோர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். சங்க இயக்குனர் பி.எஸ்.கனிராஜ் நாடார் நன்றி கூறினார்.

    • முத்துக்குமார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அரிவாளால் வெட்டினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்லபாண்டி மகன் முத்துக்குமார் (வயது 33). இவர் நெல்லையில் உள்ள தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முன்விரோதம்

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையடியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. அப்போது கீழச்சடையமான்குளத்தை சேர்ந்த பரமசிவன் என்ற சிவாவும்(30), அவரது நண்பரான மேலகாடு வெட்டியை சேர்ந்த இசக்கிபாண்டியும் (32) விசில் அடித்து தகராறு செய்தனர். இதை முத்துக்குமார் தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முத்துக்குமாரின் சகோதரி நதியா மற்றும் அண்ணன் மகள் உமாபிரியா ஆகியோர் காடுவெட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமசிவன், இசக்கி பாண்டி ஆகியோர் அவர்கள் மீது மோதுவது போல் வந்துள்ளனர்.

    அரிவாள் வெட்டு

    இதையறிந்த நதியா, உமாபிரியாவின் உறவினர்கள் சுபாஷ், செல்வம் ஆகியோர் இசக்கிபாண்டி வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டனர். அப்போது முத்துக்குமாரும் சென்றார். இதையடுத்து இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதனால் காயமடைந்த அவர் களக்காடு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொ டர்பாக பரமசிவன், இசக்கிப்பாண்டியை தேடி வருகின்றனர்.

    • கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.
    • சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல நாளை இரவு முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது

    தென்மாவட்டங்களில் பொதுமக்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இந்நாளில் மக்கள் தங்களது குல தெய்வமான சாஸ்தாவை குடும்பத்துடன் சென்று வழிபட்டுவது வழக்கம்.

    குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும்.

    இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவ படப்பு போட்டு வழிபடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.

    இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கோவிலில் சுவாமியின் பூடங்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான கோவில்களில் வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்து பந்தல் போடுதல், வண்ண விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்திருவிழா நாளை நடக்கிறது. இதனையொட்டி கோவில்களில் நாளை காலை முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு வரை சிறப்பு பூஜை களும், அன்னதானங்களும் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை விமரிசையாக நடக்கிறது.

    தென்காசி மாவட்டத்திலும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாஸ்தா வழிபாடு நாளை நடைபெற உள்ளது.

    ஆண்டுதோறும் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திரளான பொதுமக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்து முந்தைய நாளே கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள்(புதன்கிழமை) அங்கு பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    இதற்காக நாளை இரவு முதல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்குவதற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உள்மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ×