என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கர் நகரில் 16 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு
    X

    மனு கொடுக்க காலி குடங்களுடன் வந்த சங்கர்நகர் பகுதி பொதுமக்கள்.

    சங்கர் நகரில் 16 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு

    • மது கடைக்கு வருவோர் காலி மதுப்பாட்டில்களை அருகில் உள்ள நயினார் குளத்தில் வீசி செல்கின்றனர்.
    • கல் குவாரியில் அதிக திறன் கொண்ட மருந்துகளை கொண்டு பாறைகளை வெடிக்க செய்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    வன்னிக் கோனேந்தேலை சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    மின் இணைப்பு

    பசுமை வீடு திட்டத்தின் கீழ் நான் கட்டியுள்ள வீட்டிற்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. எனது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மின்சாரம் இல்லாமல் படிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறாள். எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எனது ரேஷன் கார்டு, ஆதார்கார்டுகளை திரும்ப ஒப்படைப்பேன் என கூறியுள்ளார்.

    சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் லெட்சுமி உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் கோவில், பள்ளிகள் அருகே செயல்பட்டு வருகிறது.

    டவுன் நயினார்குளம் சாலையில் செயல்பட்டு வரும் மது கடைக்கு வருவோர் ஆபாசமாக பேசுவதோடு, காலி மதுப்பாட்டில்களை அருகில் உள்ள நயினார் குளத்தில் வீசி செல்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிபுரம் பொது மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊர் திருக்குறுங்குடி பேரூராட்சியின் கீழ் உள்ளது. அதனை நீக்கி செங்கலாகுறிச்சி ஊராட்சியில் எங்கள் ஊரினை சேர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அடிப்படை வசதி இல்லை

    நாராணபுரம் பகுதி-1, சங்கர்நகர் சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜிநகர், வையாபுரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கொடுத்த மனுவில், நாங்கள் 16 ஆண்டுகாலமாக இங்கு குடியிருந்து வருகிறோம்.

    ஆனால் இதுவரை பேரூராட்சி சார்பில் எங்களுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்

    கோபாலசமுத்திரம் அருகே உள்ள ஓமநல்லூர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக திறன் கொண்ட மருந்துகளை கொண்டு பாறைகளை வெடிக்க செய்கிறார்கள். இதனால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அந்த குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    Next Story
    ×