என் மலர்
திருநெல்வேலி
- டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர்.
திசையன்விளை:
வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி .எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர். அதற்கு ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நன்றி கூறினார்.
- திராவிட தமிழர் கட்சியின் சார்பில் இன்று பாளை பஸ் நிலையம் அருகே உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது.
- திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்த திராவிட தமிழர் கட்சியினர் திடீரென உத்தரபிரதேச சாமியாரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.
இதனை கண்டித்து திராவிட தமிழர் கட்சியின் சார்பில் இன்று பாளை பஸ் நிலையம் அருகே உத்தர பிரதேச சாமியாரின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கே குவிக்கப்பட்டனர்.
அப்போது திருவனந்தபுரம் சாலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்த திராவிட தமிழர் கட்சியினர் திடீரென உத்தரபிரதேச சாமியாரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அங்கே ஓடி வந்து போலீசார் தடுப்பதற்குள் உருவ பொம்மை முழுவதுமாக எரிந்து விட்டது.
இதையடுத்து போலீசார் திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனா மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
- சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தில் சாமியாருக்கு எதிராக தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தி.மு.க. இளைஞரணி தலைவரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்த உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் பேசினார். இதனை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பையர்நத்தம் பஸ் ஸ்டாப் அருகே தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்றது.
இதில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பையர் நத்தம் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்று கூடி சாமியாரின் உருவ பொம்மையை எடுத்து வந்தனர்.
அப்போது சாமியாரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் உருவ பொம்மைக்கு தீவைத்து எரித்தனர்.
இந்த போராட்டத்தில் சாமியாருக்கு எதிராக தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதே போன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரமஹம்சா ஆச்சார்யாவை கண்டித்து அவருடைய உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக காவேரிப்பட்டணம் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- டிராலியை ஓட்டி வந்த டிரைவர், தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்ற சரவணமாரி விலக செய்வதற்காக ஒலி எழுப்பி உள்ளார்.
- வேறு வழியில்லாமல் டிராலி டிரைவர் பிரேக் போட்டார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் ரோசையா. இவரது மகன் சரவணமாரி(வயது 16). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு, ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை மூக்குப்பீறி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தண்டவாளத்தை ஆய்வு செய்யும் டிராலி வாகனம் வந்துள்ளது.
அப்போது டிராலியை ஓட்டி வந்த டிரைவர், தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்ற சரவணமாரி விலக செய்வதற்காக ஒலி எழுப்பி உள்ளார். ஆனால் அவர் காதில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் அவருக்கு சத்தம் கேட்க வில்லை. இதனால் தண்டவாளத்தில் அவர் தொடர்ந்து நடந்து சென்றார்.
இதனால் வேறு வழியில்லாமல் டிராலி டிரைவர் பிரேக் போட்டார். ஆனாலும் வேகத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதனால் அந்த வாகனம் சரவணமாரி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று சரவணமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மாத இறுதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக இன்று 63.50 அடியை எட்டியுள்ளது.
- நாலுமுக்கு எஸ்டேட் மற்றும் ஊத்து பகுதிகளில் மட்டும் லேசான சாரல் பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பாபநாசம், சேர்வலாறு ஆகிய 2 அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 62 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 63.50 அடியாக உள்ளது.
இந்த அணைக்கு வினாடிக்கு 1,078 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத இறுதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக இன்று 63.50 அடியை எட்டியுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் அணை நீர் இருப்பு சுமார் 15 அடி அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. நேற்று மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மழை இல்லை. நாலுமுக்கு எஸ்டேட் மற்றும் ஊத்து பகுதிகளில் மட்டும் லேசான சாரல் பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த லேசான மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது. விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அணை பகுதிகளில் குண்டாறு நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் நேற்று லேசான மழை பெய்தது. அந்த அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 25 அடியாக உள்ளது. அடவிநயினாரில் 86 அடியும், கடனா அணையில் 49 அடியும், ராமநதியில் 56 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
- பொய் செய்தியாக பரப்பி, தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் அதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது
- அவர்களின் 9 வருட ஆட்சி காலத்தில் செய்தது ஏதும் கிடையாது
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது கூறியதாவது:-
நான் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன். அது ஒருநாள் செய்தியாக போயிருக்கும். ஆனால், அந்த செய்தியை எடுத்து பொய் செய்தியாக பரப்பி, தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் அதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறது.
சனாதனம் என்றால் என்ன?. எதுவுமே நிலையானது. எதுவுமே மாற்றக் கூடாது. எதையும் கேள்வி கேட்டக் கூடாது என்பதுதான் சனாதனம். இதை நான் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது. எல்லாவற்றையும் மாற்றிக் காண்பிப்போம், எல்லாவற்றையும் கேள்வி கேட்போம் என ஆரம்பிக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்ற கழகம்.
அம்பேத்கர் சொன்னதைத்தான் நான் சொன்னேன். தந்தை பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன். தி.மு.க. எதற்காக தொடங்கப்பட்டதோ, அதற்காகத்தான் நான் குரல் கொடுத்தேன்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினேன். ஆனால், இனப்படுகொலை செய்யச் சொன்னதாக பொய்ச் செய்தியை பா.ஜனதாவினர் பரப்பி விட்டனர். மோடி வறுமையை ஒழிப்பேன் என்ற பொய் கூறினாரே?. வறுமையை ஒழிப்பது என்றால் ஊரில் உள்ள பணக்காரர்களை கொலை செய்வதா?.
சமீபத்தில் சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. திராவிட ஒழிப்பு என்றால், திமுக-வினரை அழைத்து கொலை செய்வதா?.
அறிவில்லாத பா.ஜனதாவினர் என்னுடைய பேச்சை திரித்து, அமித் ஷா, நட்டா என பேசாத ஆளே கிடையாது. இதற்கு மேல் நான் பேசப்போவதில்லை. நீங்கள் பேச வேண்டும். தமிழ்நாடு மக்கள் பேச வேண்டும். கொள்கைகளை பேசக்கூடிய கூட்டம் என்பதை இளைஞரணி நிரூபித்து காட்ட வேண்டும். சனாதனம் ஒழியும் வரை என்னுடைய குரல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
என்னுடைய தலைக்கு 10 கோடி ரூபாய் விலை விதித்த சாமியாருக்கு 500 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் உண்மையான சாமியார் இல்லை. பொய் சாமியார். இந்த போலி சாமியார்களை அடித்து விரட்டுவதற்காகத்தான் இந்த சனாதன ஒழிப்பு கூட்டம். எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். நீங்கள் போதாதா? (இளைஞரணி தொண்டர்களை பார்த்து கை காண்பித்தார்).
அவர்களின் 9 வருட ஆட்சி காலத்தில் செய்தது ஏதும் கிடையாது. பேசுவதற்கு ஒன்னும் கிடையாது. முழுக்க முழுக்க கலவரத்தை தூண்டி விடுவது.
இவ்வாறு தெரிவித்தார்.
+2
- பொதுமக்கள் திடீரென மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து அவர்கள் மேயர் சரவணணிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை தாலுகா பேட்டை வி.வி.கே. தெருவில் வசிக்கும் சிதம்பரம் என்பவரது மகன் கலுசலிங்கம் என்பவர் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அவரின் மனைவி சாந்திக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். சாந்தி கடந்த 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர். ரூ.25 லட்சம் வரை செலவு செய்து போலியான ஆவணங்களை கொடுத்து வாரிசு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
- பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தனர்.
- மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண வர்கள் அறிமுக விழா நடை பெற்றது.
இதில் ஸ்காட் கல்வி நிறுவனர் கிளிட்டஸ் பாபு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ஸ்காட் குழும தாளாளர் பிரிய தர்ஷினி அருண் பாபு, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் வேல் முருகன் வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பேசுகையில், கல்லூரியில் பயிலும்போதே அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்ற நிகழ்வினையும், கல்லூரி நிர்வாகத்தின் சிறந்த கல்வி மற்றும் பேராசிரியர்கள் அளிக்கும் திறன் பயிற்சியை பற்றி எடுத்துரைத்தனர். அடுத்ததாக கல்லூரியின் ஆய்வகங்கள் மூலம் மாண வர்களுக்கு செயல் திறன் அளிக்கப்பட்ட அம்சங்களை யும் அவர்கள் எடுத்து கூறி னர்.
பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார் ஆகியோர் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர், இங்கு மாணவர்க ளுக்கு பேராசிரி யர்கள் செயல்முறை பயிற்சியை அளிக்கிறார்கள். 4 ஆண்டு களில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.வேலைவாய்ப்பு துறை இயக்குநர் முகமது சாதிக் கூறுகையில், எங்களது மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவ னங்களில் அளிக்கப்படும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக மாறுவ தற்கும், வெளிநாடுகளில் உயர்கல்வி கற்ப தற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், 'எங்களது கல்வி நிறுவனத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் சிறந்த கல்வி, நவீன ஆய்வகங்கள் மூலம் நீங்கள் சாதிப்பதற்கு பேராசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். மாணவர்கள் திறன் வளர்ச்சியை கற்பதன் மூலம் உயர்ந்த நிலையை அடையமுடியும். அதிக நேரம், கடினமாக உழைத் தால் தான் அதிக சம்பளம் பெற முடியும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது என்றார்.
முடிவில் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் பிரிஸ்கா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபால ராயன், திறன் பயிற்சி இயக்குநர் பாலாஜி, கல்விசார் பேராசிரியர் எல்.ஆர்.பிரியா, அப்ளைட் லேப் பொறுப்பாளர் லட்சுமி நாரா யணன் மற்றும் அனைத்து துறை பேராசிரி யர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேபிரியல் செய்திருந்தார்.
- பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வ.உ.சிதம்பரனார் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச்செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே. சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி,
டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சின்னதுரை, கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், வட்ட செயலாளர் நத்தம் வெள்ளப்பாண்டி, ஜோதி பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா-அ.ம.மு.க.
நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.ம.மு.க. சார்பில் நிர்வாகிகள் குமரேசன், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஆவின் அண்ணசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் சண்முகராஜ், பொதுக்குழு உறுப்பினர் மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், துவரை பேச்சிமுத்து பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றினார்.
- கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் அகத்தரமதிப்பீட்டு குழு சார்பில் இணையமும் இன் தமிழும் என்ற பொருண்மையில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றி னார். கல்லூரி முதல்வர் து.ராஜன் முதல்வர் உரையும், அகத்தர மதிப்பீட்டுகுழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் நோக்க உரையும் வழங்கினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார், தமிழ்த்துறை தலைவர் த.நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் தலைவர் சு.கிரிஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் செ.சோனா கிறிஸ்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
- பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கைப்பந்து, இறகு பந்து, எறிபந்து, கபடி மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் தொடக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். பின்னர் பள்ளி மாணவர்கள் தீபத்தை ஏந்தியவாறு மைதானத்தை சுற்றி வந்து பள்ளி தாளாளரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்ட வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், விளையாட்டு கம்பத்தில் தீபத்தை ஏற்றி தடகள போட்டியை தொடங்கி வைத்தார்.
12, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்களும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற புனித அந்தோணியார் பப்ளிக் பள்ளிக்கு வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியின் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
- எங்களுக்கெல்லாம் ஆசிரியராக நான் பார்த்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
- அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லை:
வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்தார்.
இதில் கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, நெல்லை சப்-கலெக்டர் ஷேக் அயூப், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, தாசில்தார் வைகுண்டம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றில் மறைக்க முடியாத, மறக்க முடியாத ஒரு பெயராக திகழ்ந்தது வ.உ.சி. அவரது 150-வது பிறந்தநாளில் பல்வேறு சிறப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தார்.நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள மணிமண்டபத்தை சிறப்புற அழகு செய்ய ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மணிமண்டபத்தை மேம்படுத்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு உந்து சக்தியாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பகுதிகளாக மணிபண்டபங்கள் திகழ வேண்டும் என்பதற்காக போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக சிறப்பு செய்துள்ளார்.
எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது தியாகங்களையும் போற்றி பாராட்டும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. எங்களுக்கெல்லாம் ஆசிரியராக நான் பார்த்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரிடம் பாடம் பெற்ற மாணவர்களாக அத்தனை பேரும் நாங்கள் இங்கு உள்ளோம்.
அவர் தனக்காக இல்லாமல், பிறருக்காக தமிழ் சமுதாயத்திற்காக ஆசிரியராக திகழ்ந்தவர். எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு ஆசிரியரை பற்றியும் ஒவ்வொருவருக்கு நல்ல நினைவுகள் பல உண்டு. இந்த தருணத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






