search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 15 அடி அதிகரிப்பு
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 15 அடி அதிகரிப்பு

    • கடந்த மாத இறுதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக இன்று 63.50 அடியை எட்டியுள்ளது.
    • நாலுமுக்கு எஸ்டேட் மற்றும் ஊத்து பகுதிகளில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பாபநாசம், சேர்வலாறு ஆகிய 2 அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 62 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 63.50 அடியாக உள்ளது.

    இந்த அணைக்கு வினாடிக்கு 1,078 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாத இறுதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில், மழை காரணமாக இன்று 63.50 அடியை எட்டியுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் அணை நீர் இருப்பு சுமார் 15 அடி அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. நேற்று மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மழை இல்லை. நாலுமுக்கு எஸ்டேட் மற்றும் ஊத்து பகுதிகளில் மட்டும் லேசான சாரல் பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த லேசான மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது. விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    அணை பகுதிகளில் குண்டாறு நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் நேற்று லேசான மழை பெய்தது. அந்த அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 25 அடியாக உள்ளது. அடவிநயினாரில் 86 அடியும், கடனா அணையில் 49 அடியும், ராமநதியில் 56 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    Next Story
    ×