என் மலர்
திருச்சிராப்பள்ளி
- கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
- இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருச்சி:
திருச்சி கீழபுலிவார்டு ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் தங்க வைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த, ஒடிசா மாநிலம் ரய்டா காந்தி நகரை சேர்ந்த மனோஜ்(வயது 16), ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(16), காஞ்சிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோனீஸ் கார்த்திக்(16), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பாண்டி(16) ஆகியோர் இரவு நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
காப்பக வார்டன் இரவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது கையில் இருந்த சாவியை பிடுங்கி கொண்டு கேட் பூட்டை திறந்து ஓடியுள்ளனர். கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.
- பாலக்கரையில் 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார்
- பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி கோப்பு மேல தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ், இவரது மகன் மகிழ் மித்திரன் (வயது 3) இவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான்.
இந்நிலையில் மகிழ்மித்திரன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது எர்த் வயரை தெரியாமல் தொட்டுவிட்டான். இதனால் திடீரென்று அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மகிழ் மித்திரன் மயங்கி விழுந்தான். இதை யடுத்து சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாத்தா வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பேரன் திடீரென்று மின்சாரம் தாக்கி பிறந்த சம்பவம் பாலக்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்கு கனவு ஆசிரியர் விருது கிடைத்துள்ளது
- பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வானியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கொண்டு செல்கிறார்
திருச்சி,
ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனவு ஆசிரியர் 2023 தேர்வானது பின்வரும் மூன்று படி நிலைகளில் நடத்தப்பெற்றது. இணையவழி மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் தேர்வில் 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் இரண்டாம்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.
மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடு களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்க ளுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
இதில் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி- எடமலைப்பட்டி புதூர் பள்ளியின் ஆசிரியை சு.உமா தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட கனவு ஆசிரியர் தேர்வின் மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெற்று கனவு ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் கீழ் இயங்கி வரும் திருச்சி அஸ்ட்ரோ கிளப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளராக இருந்து விடுமுறை நாட்களிலும், திருச்சி விழா, திருச்சி புத்தகத் திருவிழா போன்ற நிகழ்வுகளிலும் பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வானி யல் விழிப்புணர்வு நிகழ்வு களை கொண்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தேர்தலின்போது தி.மு.க. அளித்த 511 வாக்குறுதிகளில் 20-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்
- துறையூர் நடைபயணத்தில் பேச்சு
துறையூர்,
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று துறையூர் சட்டமன்றத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருக்கு திருச்சி புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
துறையூர் சட்டமன்ற தொகுதியில் துறையூர் சிலோன் ஆபீஸ் பகுதியில் நடைபயணத்தை ஆரம்பித்த அண்ணாமலை பெரிய கடை வீதி, பாலக்கரை,திருச்சி ரோடு வழியாக சென்று துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு தனது நடை பயணத்தை முடித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:-
திமுக அரசு பொறுப்பேற்ற 30 மாதங்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக துறையூர் பகுதியில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தி.மு.க.வினரால் பலமாக தாக்கப்பட்டார்.
வருவாய் துறையில் பணிபுரியும் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. உள்ளிட்ட அரசு அலுவலர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கும் நிலையில் உள்ளது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சொல்லும் படி எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க. குரல் கொடுத்த உடன் விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட்டது. இதிலிருந்தே விவசாயிகளின் மீது தி.மு.க.விற்கு எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
தி.மு.க.வில் உள்ள பல நபர்களுக்கு சொந்தமாக மருத்துவ கல்லூரி இருப்பதால், தங்களிடம் உள்ள சீட்டுகளை விற்பனை செய்ய முடியாததால், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு பி.எம். கிசான் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்திற்கு 55 ஆயிரம் கோடி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.
ஆனால் தி.மு.க.வோ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 511 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இது நாள் வரை அதில் 20 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. உதாரணமாக துறையூர் தொகுதிக்கு புதிய பேருந்து நிலையம், பாதாள சாக்கடை திட்டம், புறவழிச்சாலை, அரசு கலைக் கல்லூரி, முந்திரி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறியும், இதில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை.
தற்சமயம் தமிழக முழுவதும் வாக்காளர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அனைத்து இளைஞர்களும் வாக்காளராக பதிவு செய்து மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி 3-வது முறையாக பிரதமராக அமர பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்து ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்
- அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது
திருச்சி,
தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று இந்து மக்கள் கொண்டாடும் திருநாள் தான் தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கம்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் முன்பு மற்றும் மாடிப்பகுதியில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவார்கள். மேலும் வீட்டையே கோவிலாக மாற்றும் வகையில் வீடு, வாசல் முழுவதும் விளக்குகளை ஏற்றி கொண்டாடுவார்கள்.
மேலும் வணிக நிறுவனங்கள், கோவில்களில் அதிக அளவிலான விளக்குகள் ஏற்றப்படும். சிவன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெறும். தீபத்திருநாளையொட்டி திருச்சியில் அகல்விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர். அவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 வரையிலும் அகல்விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அகல்விளக்கு ஏற்றுவதற்கு தேவையான தீப எண்ணெய், விளக்கு திரிகள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. இதனை வாங்கி செல்வதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர்.
- கார்த்திகை தீபத்திருநாள் சாமி தரிசனம் செய்ய கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
- பரணி தீபம் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
திருச்சி,
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். இதேபோல கோவில்களிலும் தீப திருவிழா கொண்டாடப்படும். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர், மலைக்கோட்டை தாயுமானவர், உறையூர் வெக்காளியம்மன், பஞ்சவர்ணேஸ்ரர், சமயபுரம் மாரியம்மன், திருபட்டூர் பிரம்மா, வயலூர் முருகன், குணசீலம் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோயில்களில் ஏற்றப்பட்டிருக்கும் பரணி தீபத்தை பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.
- இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
- பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள்.
முசிறி:
என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். அவரது 61-வது நாள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணம் தொடங்கப்பட்டு முசிறி-துறையூர் பிரிவு சாலை வழியாக முசிறி கைகாட்டியில் முடிவடைந்தது.
வழியில் அண்ணாமலை முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.
தமிழகத்தில் நியாய விலை கடையில் வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு கிலோ விற்கும் 32 ரூபாய் வழங்குகிறது. தமிழக அரசு 2 ரூபாய் வழங்குகிறது. தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகள் கிசான் அட்டை பெற்று விவசாய கடன் பெற்று வருகின்றனர்.
இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. ஆவின் பாலில் நடக்கும் ஊழலை பா.ஜ.க. கண்டிக்கிறது. ஆவினிலிருந்து வரும் பால் தரக் குறைவாக உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு நாளுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 38 லட்சமாக உள்ளது, 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் அரசே காவிரி மணலை திருடுகிறது. இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 467 கோடி ரூபாய்க்கு 2 நாட்களில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாராயத்திற்கு சிறப்பிடம் பெற்றது தமிழகம்.
விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வினர். பாரதிய ஜனதா கட்சியின் கனவு பெரிது, பெரிய ஊர்கள் வளர்கிறது, சின்ன ஊர்கள் தேய்கிறது, கிராமங்கள் முன்னேற வேண்டும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை, மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவோம், இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நல்லாட்சி அமைவதற்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகா தீபம் ஏற்றுவது வழக்கம்.
- நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருச்ச
கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். நாளை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக ஏற்கனவே தீபத்திரியை தயாரிக்கும் பணிகளில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 300 மீட்டர் நீளமுள்ள திரிகள் தயாரிக்கப்பட்டன. துணி நூல்கள் வைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதனை உருண்டையாக வடிவமைத்து அதனை கட்டி ஒவ்வொன்றாக அடுக்கி பெரிய துணிகள் வைத்து அதைக் கட்டினர்.
பின்னர் உச்சி பிள்ளையார் கோவிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள தீபம் ஏற்றும் இடத்தில் அதை வைத்தனர். தீபம் ஏற்றுவதற்கான கொப்பறையில் சுமார் 700 லிட்டர் இலுப்ப எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய்கள் ஊற்றப்பட்டன. சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த எண்ணெயில் அந்த திரிகளை ஊற வைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர் இங்கு தீபம் ஏற்றப்படும். இதற்கான பணிகளை கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
- திருச்சி சர்வதேச விமான நிலையப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- இதையடுத்து வயர்லெஸ் சாலையை ரூ. 11 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டது.
திருச்சி
திருச்சி சர்வதேச விமான நிலையப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து வயர்லெஸ் சாலையை ரூ. 11 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டது.
மேலும் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிக்காக இந்திய விமான நிலைய ஆணையத்தை மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியது. இருப்பினும் அவர்களிடமிருந்து பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சியே மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
திருச்சி -புதுக்கோட்டை சாலையை இணைக்கும் இந்த வயர்லெஸ் ரோடு 1.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது.தேசிய நெடுஞ்சாலை மற்றும் காஜாமலை மெயின் ரோடு அருகே கே.கே. நகர் பேருந்து நிலையம் மற்றும் சாத்தனூர் மெயின் ரோடு, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றையும் இணைக்கிறது.
தற்போது 65 அடி அகலத்தில் இருக்கும் வயர்லெஸ் சாலை சென்டர் மீடியனுடன் 100 அடி சாலையாக விரிவுபடுத்த முதற்கட்டமாக மாநகராட்சி ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை- உடையான் பட்டி மெயின் ரோடு இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது,
சாலை விரிவாக்க பணிகளுக்கு முன்பாக ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்படும். அகற்றாவிட்டால் மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும்.
இந்த சாலை 100 அடி அகலத்தில் விரிவாக்கம் செய்யும்போது அப்பகுதியில் நிலவும் நெரிசல்கள் பெருமளவு குறையும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மழை நீர் வடிகால்கள் மற்றும் பாதசாரி தளங்களும் அமைக்கப்பட உள்ளது.
- திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
- இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் துறையூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்வதுடன், கால்நடை வளர்ப்பும் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான 2 பசு மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டியினை தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது. இதில் காயம் அடைந்த 3 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 27-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
திருச்சி
கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 27-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று நடைபெற்றது. சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.
அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.
இந்நிகழ்ச்சியில் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர்.
- கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி ஒன்று, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
துறையூர்:
திருச்சி துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்திருந்த பையையும் சோதனை செய்தனர். அதில் அவர்கள் இருவரும் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் (வயது 22), உலகநாதன் (எ) வடிவேல் (22) என்பதும், பையில் வைத்திருந்த அரசின் உரிய அனுமதி இல்லாத துப்பாக்கியை கொண்டு வேட்டைக்கு சென்று கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடை த்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி ஒன்று, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். துறையூர் அருகே அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






