என் மலர்
தஞ்சாவூர்
- சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
- ஏக்கருக்கு 5 சதவீதம் 600 மில்லி வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெற்பயிரில் தற்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தினால் ஆங்காங்கே இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம்.
நெல் வயல்களில் வளரும் அல்லது தூர்பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களை தாக்கும் இப்புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கிறது. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு புழுக்கள் அதன் உள்ளே இருந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல காட்சியளிக்கும். இப் பூச்சியின் தாக்குதல் இருக்கும்போது தழைச்சத்து உரம் இடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம். பூச்சிகளின் முட்டைகள் தட்டையான முட்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் புழுக்கள் பச்சையான நிறத்திலும் ஒளி கசியும் தன்மை கொண்டும், முன் மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும் பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் வரை கூட்டுக் புழுக்களாக இருக்கும். அந்து பூச்சியான முதிர் பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும்.
நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல், களைகளை நீக்கியும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு அசியேட் 400 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 600 மில்லி வேப்பெண்ணெய் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு விஷப்பாம்பு சாலையின் குறுக்கே சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது.
- பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில், மோட்டார் வாகன உதிர் பாகங்கள் விற்கும் கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் எப்பொழுதும் அதிக அளவில் இருக்கும். மேலும் இரவு நேரம் வேலை முடித்து வீட்டிற்கும் அருகில் உள்ள கிராமத்திற்கும் செல்லும் பொது மக்கள் அந்த சாலையை கடந்து செல்வதால் எப்பொழுதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெருசலாகவும் அந்தப் பகுதி இருக்கும்.சமீபத்தில் அந்த சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைத்து புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த சாலையில் குறுக்கே புகுந்த ஒரு விஷப்பாம்பு சாலையின் குறிக்கே புதிதாக எடுக்கப்பட்ட சுவற்றினால் அந்த சாலையை கடந்து செல்ல வழி இல்லாமல் தவித்தது. மேலும் அந்தப் பாம்பை சுற்றி கூட்டம் கூடி வாகனங்கள் என்றதால் பதற்றம் அடைந்து சாலையில் குறுக்கே அங்குமங்கமாக ஓடியதால் சிறிது நேரம் அந்த பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் வாகனங்கள் ஏதும் அந்த பாம்பின் மீது ஏறி விடாமல் பாதுகாத்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பினை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காட்டுபகுதியில் விட்டார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.
- பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் மூலம் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி ஒரத்தநாடு தாலுகா புதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வேலாயுதம் தலைமை தாங்கி, திருந்திய நெல் சாகுபடி உத்திகள் ,நீர் மேலாண்மை மற்றும் களை மேலாண்மை குறித்து விளக்கி பேசினார். உழவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் மாரிமுத்து, உர நிர்வாகம், ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடு பற்றி விளக்கினார். பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ராமமூர்த்தி, நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா, தொழில்நுட்ப உதவியாளர் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா நன்றி கூறினார்.
- தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது.
- திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 35). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அன்னி டிக்சன் (35) . இவர் எம்.ஏ. சைக்காலஜி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் அன்னோன்யமாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து சங்கரநாராயணன் அமெரிக்க பெண்ணை காதலித்து வரும் விஷயத்தை தஞ்சையில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் மகனின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். இதை போல் அன்னி டிக்சனும் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கினார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் சங்கர நாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது. மேலும் மணமகன் சங்கர நாராயணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
விழாவில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடல் கடந்து காதலித்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த இரு வீட்டு பெற்றோரையும் பலர் பாராட்டினர்.
- 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.
சீர்காழி:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான வட்டார அளவிலான குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழி, வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, கோமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அகோர மூர்த்தி, மக்கள் புறத்தொ டர்பு அலுவலர் மங்களதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி, 'கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார். கூட் டத்தில் வட்டார அளவிலான சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.
- கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சி பாதையில் செயல்படுத்த கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
- 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் , எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம் , ராமலிங்கம் , எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் 2315 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகளையும், கூட்டுறவு வார விழா பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார்.
பின்னர் அவர் பேசிய தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செயல்படுத்திட கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வம் , மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி , வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா , பூர்ணிமா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பழனீஸ்வரி , இணைப் பதிவாளர் பெரியசாமி , துணைப் பதிவாளர் அப்துல் மஜீத் மற்றும் துணைப் பதிவா ளர்கள், பொது மேலாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கருப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இன்று மருத்துவ முகாமை நடத்தியது. புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் கருணாநிதி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இம்முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதய மருத்துவம், நுரையீரல் , காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும், ஹூமோகிளோபின், இரத்த வகை கண்டறிதல், சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, இ.சி.ஜி. ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மருத்துவ குழுவினரால் 250 தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு ஆசோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 43 தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களால் மேற்பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைதொடர்ந்து இயற்கை யோக தினமான இன்று ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாபழம், வாழைப்பழம், நெல்லிக்காய், ஊட்டச்சத்து பொடி, உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய "நலவாழ்வு பைகள்" முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர், மூலிகை தேநீர், பானகம், சிவப்பு அவுல், முளைகட்டிய பயிர் வகைகள், முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.
மேலும் கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றமைக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மருத்துவர் முத்துகுமாருக்கு சுழற்கேடயத்தை வழங்கினார். கரந்தை, மகர்நோம்புசாவடி, சீனிவாசபுரம் சிறப்பிடம் பெற்றதற்காகவும் மருத்துவ குழுவினருக்கு பாரா ட்டுகளை தெரிவித்தார்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி தலைமையிலான மருத்துவர்கள் செய்திருந்தனர்.
- விழாவானது வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
- இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.
சுவாமிமலை:
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு யாகசாலை பூஜையுடன் சுவாமி திருவீதி உலா திக்பந்தனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலாவும், வருகிற 26 ஆம் தேதி திருக்கார்த்திகை முன்னிட்டு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.
- தாய்மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
- முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
தனித்தமிழ் ஆர்வலர், தமிழாசிரியர் முதுமுனைவர் பி.விருத்தாசலனார் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அறங்காவலர் முனைவர் இளமுருகன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் (ஓய்வு) முனைவர் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் . நாட்டார் கல்லூரி ஆட்சி குழு செயலாளர் கலியபெரு மாள், கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மக்கள் ஒருங்கிணைப்பு மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் மதச்சார்பின்மை, சோசலிசம், குடியரசு என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மக்களுக்கான கல்வி என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்களும் தமிழ் பண்டிதர்களும் தேர்வு எழுத அரசாணை வெளியிட வேண்டும்.
தமிழ் வழியில் படித்த வர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது, தாய் மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி ,இயக்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பேரா சிரியர்கள், அலுவ லர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், மருத்துவர் தென்றல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்
- களைக்கொல்லிகள், பூச்சி மருந்து இவைகளை மழைக்கு பிறகு பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
- விவசாயிகள் தேவைப்படும் சந்தேகங்களை அரசு வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இடம் பெற்று பயன்பெற வேண்டும்.
திருவோணம்:
ஈச்சங்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் அரசு வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு இருக்கும் நெல் பயிர்களில் கலைக்கொல்லி ரசாயன மருந்து , உரம் இவைகளை தவிர்த்து அரசு அறிவிக்கும் மழை குறித்த தகவல்களை கேட்டு அதன்படி மழைக்குப் பிறகு இந்த உரங்களை பயிர்களுக்கு ஈடுமாறு வேளாண்மை கல்லூரி முதல்வர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது :-
கனமழையால் விவசாயிகள் கவனமாக தாங்கள் பயிரிட்டு இருக்கும் பயிர்களுக்கு உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்து இவைகளை மழைக்கு பிறகு பயன்படுத்தி பயன்பெற வேண்டும். தங்களது விளை நிலங்களில் நீர் தேங்காமல் முறையாக வாய்க்கால் அமைத்து உடனடியாக பயிர்களை காப்பாற்ற வேண்டும். ஆடு, மாடுகளையும் கவனமாக பராமரித்து மேய்ச்சலில் விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
அரசு அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான ஆய்வு விஞ்ஞான ரீதியாக அரசு வேளாண் கல்லூரி ஆராய்ச்சி யாளர்கள் அளித்து கொ ண்டி ருப்பார்கள். விவசாயி கள் தேவைப்படும் சந்தேக ங்களை அரசு வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இடம் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார்.
- புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே விக்ரமம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 51) கொத்தனார். சம்பவத்தன்று சுப்ரமணியன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரமணியன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 கிலோ புதிய ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. அதுசமயம் ஐயப்பனுக்கு சிறப்பு நெய் அபிஷேகம் வீதியுலா மற்றும் படிபூஜை நடைப்பெற்றது.
தொடர்ந்து ஐயப்பன் சாமிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், சாஸ்தாஹோமம் நடைப்பெற்றது.
இதையடுத்து ஐயப்பன் சாமி அலங்காரத்துடன் செண்டை மேளம் முழக்கத்துடன் வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. சாமி புறப்பட்டு 108 சிவாலயம் வந்தடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அங்கிருந்து புறப்பட்டு சீனிவாச பெருமாள் கோவில் 4 ராஜ வீதிகள் வழியாக பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவில் வந்தடைந்தது. இரவு சிறப்பு படி பூஜைகளும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபநாசம் ஐயப்பன் யாத்திரை குழுவினர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .






