search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்

    • வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலுக்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்திட ஏதுவாக தேர்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை ( சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 2308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கடந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள தவறிய பொது மக்கள் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இச்சிறப்பு முகாமில் 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் அடுத்து வரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதிநாளில் (அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1) 18 வயதினை பூர்த்தியடைபவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட, படிவம் எண் 6 பூர்த்தி செய்தும், இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களினால் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 பூர்த்தி செய்தும், வாக்களார் பட்டியலில் அனைத்து வகையான திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8 பூர்த்தி செய்தும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு படிவம் 6பி பூர்த்தி செய்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும், மேற்படி முகாமினை பயன்படுத்திகொள்ள இயலாத வாக்காளர்கள் அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 9.12.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மற்றும் Voters Help Line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

    மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×