என் மலர்tooltip icon

    சிவகங்கை

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
    தேவகோட்டை:

    கஜா புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மாவட்டத்தில் காரைக்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்பட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்படைந்தன. இந்த பகுதிகளில் புயலால் சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் உள்ளிட் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமமடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து பல்வேறு அமைப்புகள் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தேவகோட்டையில் இருந்து 3 லாரிகள், மினி வேன்களில் அனுப்ப ஏற்பாடுகள் செய்திருந்தார்.

    நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் ஆலங்குடி, திருமயம் உள்பட மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த வாகனங்களை அமைச்சர் பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் அரிசி, பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சீனி, ரவை ஆகிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றை தொகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் தளக்காவயல் பிர்லா கணேசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் தசரதன், அரசு வழக்கறிஞர் ராமநாதன், ஆவின் சேர்மன் அசோகன், கே,பி,ராஜேந்திரன், தேவகோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் போஸ், ரமேஷ், சுப்பிரமணியன், கண்டதேவி ஆறுமுகம், முத்துராமலிங்கம், துரைராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகளில் கஜா புயலால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. மேட்டாம்பட்டி, விஜயபுரம் போன்ற பகுதிகள் கடும் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதியடைந்தனர்.

    சிங்கம்புணரி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ரமேஸ்வரன் ஏற்பாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீர், மின்சாரம் இன்றி சிரமமடைந்தனர். மின்சாரம் இல்லாதததால் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் போனது. எனவே அதன் முதற்கட்டமாக மின்வாரிய ஊழியர்கள் மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்த வேலையில் விஜயபுரம் மற்றும் மேட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு லாரிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. அதை பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் பிடித்து சென்றனர்.

    மேலும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களுக்கும் மெழுகுவர்த்திகள் வினியோகம் செய்யப்பட்டன. பின்பு சிங்கம்புணரி நேதாஜி நகர் ஜெய்ஹிந்த் பாலா, கிழத்தெரு விஜய், சுதாகர் உள்ளிட்ட இளைஞர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    மானாமதுரை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    மழை காரணமாக மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதேபோல் பள்ளி கட்டிடங்களிலும் மழைநீர் இறங்கி ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. மழையால் சிவகங்கை, வேம்பத்தூர் சாலையும் சிதைந்து கிடக்கிறது.

    சுற்றிலும் பள்ளி சுற்றுச்சுவரை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளியில் தேங்கிய மழைநீரை உடனே வெளியேற்றுவதுடன் ஈரப்பதத்துடன் உள்ள கட்டிடங்களை தொடர்ந்து பயன்படுத்தலாமா? என ஆய்வு செய்ய வேண்டும். வேம்பத்தூரில் இருந்து பச்சேரி வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என வேம்பத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் திடீரென பணிகளை புறக்கணித்து விட்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டுகளிலும் செவிலியர்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கேபின்களை அகற்ற மருத்துவ கல்லூரி முதல்வர் உத்தரவிட்டாராம். இதற்கு செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கழிவறை கூட ஒதுக்கி தராமல் தரக்குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களும் திடீரென தங்களது காலை பணியை புறக்கணித்து விட்டு மருத்துவமனையின் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் அவசர சிகிச்சை பிரிவு, டெங்கு காய்ச்சல் பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா சமதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்பினர். செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரம் நோயாளிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகினர்.
    திருப்பத்தூர் அருகே கஜா புயலால் மின்சாரம் தடைபட்டது தொடர்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm

    திருப்பத்தூர்;

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

    புயல் எதிரொலியால் சிவகங்கை மாவட்டத்தில் அதிக மழை பதிவானது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த வாரம் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக இந்தப்பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் அந்தப்பகுதி முழுவதும் மின்சாரம் தடை பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இது குறித்து திருப்பத்தூர் மின் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காரையூர் கிராமத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மற்றொரு பகுதி இருளில் மூழ்கியது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்து நேற்றிரவு காரையூர் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- சிங்கம்புணரி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தாசில்தார், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மின்சாரம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டம் நடந்து முடிந்தபின் மின் வாரிய ஊழியர்கள் காரையூர் பகுதியில் மின்கம்பங்களை சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து மின் வினியோகம் செய்யப்பட்டது. #Gajastorm

    பாகனேரியில் இருந்து துருவம்பட்டிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    கல்லல்:

    பாகனேரியில் இருந்து துருவம்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. பாகனேரி இருந்து துருவம்பட்டி வழியாக செல்லும் சாலையில் மூக்கான்பட்டி, ஆலவிழாம்பட்டி, சடையன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பாகனேரி–துருவம்பட்டி செல்லும் 2 கிலோ மீட்டர் தூரமுடைய சாலை முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது.

    இந்த சாலை வழியாக பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களும், மாணவ–மாணவிகள் பள்ளி செல்ல சைக்கிளிலும், தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் பலதரப்பட்ட மக்களும் சென்று வருகின்றனர். மழை காலங்களில் சாலை தெரியாத அளவுக்கு பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், இந்த வழியாக செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

    முக்கியமான ஆன்மீக தலமான பட்டமங்கலத்தில் இருந்து கண்டுபட்டி, நாட்டரசன் கோட்டை செல்வதற்கு இந்த சாலை அதிக அளவில் பயன்படுகிறது. பாகனேரியில் இருந்து சொக்கநாதபுரத்திற்கு போக்குவரத்து தடைபடும் போதும், பாகனேரியில் இருந்து கல்லல் செல்வதற்கும் இந்த சாலை மிகவும் பயன்படுகிறது. மேலும் பணிகளுக்காகவும், பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் பாகனேரி, மதகுபட்டிக்கு செல்ல இந்த சாலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், ஆட்டோ உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் இங்கு வருவதில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து வரவேண்டியுள்ளது. இதே நிலை கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைக்க, பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews
    சிவகங்கை மாவட்ட மைய நூலகத்திலும், திருப்பத்தூர் கிளை நூலகத்திலும் தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா, நல்நூலகருக்குப் பாராட்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட நூலக ஆய்வாளர் ஜான்சாமுவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக கிளை நூலகர் மகாலிங்கஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆண்டின் நல்நூலகர் விருது பெற்ற புலிக்கண்மாய் நூலகர் ஜெயஜோதி பாராட்டப்பட்டார். தொடர்ந்து விழாவையொட்டி பட்டிமன்ற பேச்சாளர் வைகை பாரதி, கவிஞர் சுகன்யா, புரவலர்கள் கணபதி, சிவசக்திகுமார், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் நூலகத்தின் பயன்கள் மற்றும் நூலகத்தினால் உயர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சான்றோர்களைப்பற்றி பேசினர்.

    தொடர்ந்து கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் சவுந்தர்யா, சிந்தாமணி, சம்யுக்தா, ஜெயபிரதீபா, யுவஸ்ரீ, தேவயானி ஆகியோருக்குச் சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நூலக உதவியாளர்கள் குணசேகரன், நாராயணன், கலைஞானம், கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். விழா முடிவில் திருக்கோஷ்டியூர் நூலகர் தமிழரசி நன்றி கூறினார்.

    சிவகங்கையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா மாவட்ட நூலக அலுவலர் ரமணி புனிதகுமாரி தலைமையில் நடைபெற்றது. நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஆகஸ்போர்டு பள்ளி தாளாளர் சியாமளா வெங்கடேசன் நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை, நவுஷாத், அனந்தராமன், தமிழ்கனல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் இரண்டாம் நிலை நூலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
    சிவகங்கையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உடலியக்க குறைபாடு உடையவர்கள், காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகிய பிரிவுகளில் 21 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் மூலம் அவர்களின் மனநிலை பக்குவப்படுவதுடன், தேசிய அளவில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு கலந்து கொண்டு வெற்றி பெற, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் உதவியாக இருக்கும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை மறந்து திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

    தற்போதைய போட்டிகளில் மாவட்டத்தில் 15 சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்று வருவோர், இதர பள்ளிகளில் பயில்பவர்கள், பொதுமக்கள் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகள் என 266 மாற்றுத்திறனாளிகளும், 75 சிறப்பு ஆசிரியப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் இது போன்ற போட்டிகளில் அதிக அளவில் கலந்து கொண்டு, தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏந்தி வந்த ஒலிம்பிக் ஜோதியை கலெக்டர் ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கஜா புயல் தாக்குதலில் 400 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கின. #GajaCyclone
    காரைக்குடி:

    கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை புயல் புரட்டிப் போட்டுள்ளது.

    காரைக்குடி பொன் நகர், வள்ளலார் நகர், இலுப்பக்குடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    சுமார் 400-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் நேற்று அதிகாலை 3 மணியளவில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் விடிய விடிய அவதிக்குள்ளானார்கள். இன்று காலையும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அனைத்து மின் கம்பங்களையும் சீரமைத்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்றனர். இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மாவட்டத்தில் வருவாய்த் துறையினர், பொதுப் பணித்துறையினர், மின் வாரிய அமைப்பினர் என அனைத்து துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். ஆனாலும் பல இடங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை.

    இதன் காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளி கல்லூரிளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

    இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் குருமல்லேஷ்பிரபு அறிவித்துள்ளார்.

    புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்ததில் வள்ளலார் தெரு, பொன் நகர் பகுதி யில் பல வீடுகளின் காம்ப வுண்டு சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. பொன் நகரில் தோட்டத்தில் இருந்த 15 தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காரைக்குடியில் தொடர்ந்து மீட்பு பணிகளில் அதிகாரிகள் வேகம் காட்டி வருகின்றனர்.  #GajaCyclone



    தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (வயது 47), ஆட்டோ டிரைவர்.

    தேவகோட்டை ராம் நகர் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை காசி வழக்கம் போல் ஆட்டோ ஓட்டச் சென்றார்.

    இந்த நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள மரத்தில் ஆட்டோ மோதி நின்றதை அந்த வழியே சென்றவர்கள் நேற்று இரவு பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது காசி ரத்தக்காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவர் தற்செயல் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது யாராவது வாக னத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

    விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை உடனே அனுப்ப வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். #gajacyclone #pchidambaram #CentralCommittee

    காரைக்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி. இங்கு மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.

    உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை குறைவாக இருந்தாலும் அது நல்ல தொகை தான்.


    புயல் பாதிப்பு குறித்து மாநில அரசு அறிக்கை அனுப்பிய பிறகே மத்திய அரசு குழுவை அனுப்பி வைக்கும். அந்த குழு சேத மதிப்பீட்டை கணக்கீட்டு அறிக்கை அளிக்கும். அதன் படி நிவாரணம் வழங்கப்படும்.

    ஆனால் மத்திய குழுவை தற்போது உடனே அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழக அரசும் இதனை வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #gajacyclone #pchidambaram #CentralCommittee 

    திருப்பத்தூர் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் நடந்து சென்ற பெண் துப்புரவு பணியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, கருப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி எலிசபெத் ராணி (வயது 35). நெற்குப்பை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார். இவர்களது வீடு ஓட்டு வீடு ஆகும்.

    திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மழைநீர் வீட்டுக்குள் ஒழுகும் என்று கருதிய எலிசபெத்ராணி, இன்று அதிகாலை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது வீசிய சூறாவளி காற்றில் சாலையோரம் இருந்த மரக்கிளை முறிந்து எலிசபெத் ராணி மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் நெற்குப்பை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று எலிசபெத் ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான எலிசபெத் ராணியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் முறையே 6-ம் வகுப்பும், 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
    ×