search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suddenly protesting"

    தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சீருடைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக உள்ளன. #TNGovernment #GovernmentNurses
    சென்னை:

    உலகிலேயே உன்னதமான சேவை என்பது மருத்துவ சேவை தான். மருத்துவத்துக்கு மூளை டாக்டர் என்றால், செவிலியர்கள் இதயம் போன்றவர்கள். மருந்து கூட காப்பாற்ற தவறிய நோயாளிகள் செவிலியரின் கனிவான வார்த்தைகளாலும், கரிசனையான கவனிப்பாலும் சாவின் விளிம்பில் இருந்து கூட மீண்டிருக்கின்றனர். அந்தவகையில் செவிலியரின் மகத்துவம் என்றைக்குமே போற்றத்தக்கது.

    குறிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியரின் சேவைகள் அளப்பரியது. அந்தவகையில் கள்ளம் கபடமில்லாமல் கடமை உணர்வோடு பணியாற்றும் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்களின் தரத்தை இன்னும் சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக அரசு ஆஸ்பத்திரி செவிலியர்களின் சீருடை ‘டிப்-டாப்’ ஆக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பல்வேறு கோரிக்கைகள் குறித்து செவிலியர் சங்கத்தினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், ‘செவிலியர் சீருடையில் மாற்றம் தேவை என்றும், பணிக்கால அடிப்படையில் செவிலியரின் சீருடைகள் வடிவமைக்கப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் செவிலியர்கள் சீருடை மாற்றம் குறித்து ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனர் தலைமையில் 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. செவிலியர் சீருடை மாற்றம் குறித்து தீவிர பரிசீலனை நடந்தது. இந்தநிலையில் செவிலியர்களின் பணிக்காலத்தை பிரதானமாக வைத்து புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    * பச்சிளம் குழந்தைகள் வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். ‘தமிழ்நாடு அரசு செவிலியர்கள்’ எனும் இலச்சினை பதித்த இளஞ்சிவப்பு நிறத்திலான 2 பாக்கெட்டுகள் கொண்ட அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

    * 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றும் பெண் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். செவிலியர்களின் இலச்சினை பதித்த வெள்ளை நிறத்திலான 2 பாக்கெட்டுகள் கொண்ட அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.



    * 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பெண் செவிலியர்கள் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம் அடங்கிய தொப்பி அணிவார்கள். செவிலியர்களின் இலச்சினை பதித்த வெள்ளை நிற அரைக்கை சுடிதார்-பேண்ட் மற்றும் ஓவர் கோட் அணிவார்கள். வெள்ளை நிற ஷூவும், காலுறையும் அணிவார்கள்.

    * இரண்டாம் நிலை கண்காணிப்பு பெண் செவிலியர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான புடவை, செவிலியர்களின் இலச்சினை மற்றும் அடிப்பாகத்தில் 2 பாக்கெட்டுகள் அடங்கிய ஓவர் கோட், வெள்ளை நிற ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

    * முதல்நிலை கண்காணிப்பு பெண் செவிலியர்கள் பிஸ்தா பச்சை நிறத்திலான சேலையும், செவிலியர்கள் இலச்சினை மற்றும் 2 பாக்கெட்டுகள் கொண்ட ஓவர் கோட், வெள்ளை நிற ஷூ, காலுறை அணிவார்கள்.

    * 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றும் ஆண் செவிலியர்கள் வெள்ளை நிற அரைக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிவார்கள். செவிலியர்கள் இலச்சினை மற்றும் கன்சீல்ட் ரக பட்டன்கள் உள்ள சட்டை அணிவார்கள். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

    * 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆண் செவிலியர்கள் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெடுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

    * இரண்டாம் நிலை கண்காணிப்பு ஆண் செவிலியர்கள் இளஞ்சிவப்பு நிற முழுக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெட்டுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

    * முதல்நிலை கண்காணிப்பு ஆண் செவிலியர்கள் பிஸ்தா பச்சை நிற முழுக்கை சட்டையும், அதன் மீது 2 பாக்கெட்டுகளுடன் கூடிய வெள்ளை நிற ஓவர் கோட் அணிவார்கள். அதில் செவிலியர்கள் இலச்சினை இருக்கும். கருப்பு ஷூ மற்றும் காலுறை அணிவார்கள்.

    முதல்நிலை கண்காணிப்பு செவிலியர்கள் தங்க நிறத்திலான காந்தம் பொருந்திய பேட்ஜ் அணிந்திருப்பார்கள். அதில் செவிலியரின் பெயர் சிவப்பு நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் நிலை கண்காணிப்பு செவிலியர்களின் பெயர் நேவி புளூ நிறத்தில் தங்க நிறத்திலான காந்தம் பொருந்திய பேட்ஜில் பொறிக்கப்பட்டிருக்கும்.

    இதர செவிலியர்களின் பேட்ஜில் கருப்பு நிறத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

    இந்த புதிய மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய மாற்றம் மீது ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனர் நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

    இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment #GovernmentNurses
    சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் திடீரென பணிகளை புறக்கணித்து விட்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டுகளிலும் செவிலியர்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கேபின்களை அகற்ற மருத்துவ கல்லூரி முதல்வர் உத்தரவிட்டாராம். இதற்கு செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கழிவறை கூட ஒதுக்கி தராமல் தரக்குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களும் திடீரென தங்களது காலை பணியை புறக்கணித்து விட்டு மருத்துவமனையின் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் அவசர சிகிச்சை பிரிவு, டெங்கு காய்ச்சல் பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா சமதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்பினர். செவிலியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரம் நோயாளிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகினர்.
    ×