என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஏழை குடும்பங்கள் சிரமப்பட்டு வந்தன.
தற்போது நிபந்தனையுடன் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதை அறிந்த அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் ஆசைத்தம்பி சொந்த செலவில் தேவகோட்டையில் உள்ள சுமார் 100 ஆட்டோக்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செந்தில்நாதன் ஆட்டோக்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லாகணேசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கார்த்திகேயன், நகர மாணவரணி மணி கண்டபிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராஜ். இவரது மனைவி முனியாயி (வயது60). இவர்களது மகன் ஜெயச்சந்திரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
ஜெயச்சந்திரனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது குழந்தைகளை பாட்டி முனியாயி பராமரித்து வந்தார்.
நேற்று பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்க முனியாயி, குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஜெயச்சந்திரன், குழந்தைகள் தனியாக இருப்பதை பார்த்து ஆத்தரம் அடைந்தார். அப்போது அவரது தாய் முனியாயி அங்கு வரவே ஜெயச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன் தாயை சரமாரியாக தாக்கினார். ரத்த காயம் அடைந்த முனியாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் சம்பவ இடம் வந்து முனியாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜெயச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அகழாய்வு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் பழங்கால செங்கல் சுவர் கட்டிடங்கள், சிறிய, பெரிய பானைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கொந்தகையில் ஏற்கனவே 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்ததில் 12 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இதில் ஒரே குழியில் 8 முதுமக்கள் தாழிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான மண்பானைகள், குடுவைகள், மூடிகளும் கிடைத்தன. மனித வலது, இடது கைகளின் எலும்புகளும் கிடைத்தன. மணலூரில் சுடுமண் உலையும், கீழடியில் விலங்கின எலும்புக்கூடும் கிடைத்தன.
கொந்தகையில் நேற்று கதிரேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னங்கன்று நட எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டன. அப்போது முதுமக்கள் தாழி போல் தென்பட்டது. அதை ஆழமாக தோண்டி பார்த்த போது உள்ளே மனித மண்டை ஓடு, எலும்புகள் எடுக்கப்பட்டன. இதை கேள்விப்பட்ட மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
அகரம் பகுதியில் மண்பாண்ட பாத்திரங்கள், பானை ஓடுகள், நத்தை கூடுகள் கிடைத்துள்ளன. நத்தைகளில் கடல்நீர் நத்தை, நன்னீர் நத்தை என இருவகை உண்டு. நன்னீர் நத்தைகள் உணவாகவும், மருந்தாகவும் பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அகரத்தில் சேரிக்கப்பட்ட நத்தை கூடுகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் பிரிவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பனைமரங்கள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றிச்செல்வதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து சிவகங்கை ஆர்.டி.ஓ. சிந்து மற்றும் சிவகங்கை தாசில்தார் மாலாவதி ஆகியோர் சிவகங்கை- மதுரை சாலையில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் பனை மரங்களை ஏற்றிசென்றது தெரிந்தது. இதையடுத்து லாரியுடன் பனைமரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை அருகே பனை மரத்தை வெட்டி லாரியில் கொண்டு செல்ல முயன்றவர்களுக்கு ரூ.12,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பனைமரம் வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் உள்ள மரங்களை பொதுமக்கள் பராமரித்து மேலும் மரங்களை வளர்க்க முன்வரவேண்டும்.
இதுபோன்று மரங்கள் வெட்டுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா புளியால் அருகே உள்ள சக்கந்தி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மனைவி சீதாலெட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை சக்கந்தி கிராமத்தை சேர்ந்த கோபால் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருவாடானை அருகே உள்ள மேல்பனையூர் விலக்கு சாலை அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த சீதாலெட்சுமி உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.
சீதாலெட்சுமி, அவரது மகன் அஜீத்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சீதாலெட்சுமி பரிதாமாக உயிரிழந்தார். அஜீத்குமார் உள்பட 3 பேரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்க அவ்வப்போது வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது வடமாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளி படை பல்வேறு பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சிஸ்டோசெர்கா கிரிகேரியா என்று அழைக்கப்படும் பாலை வன வெட்டுக்கிளிகள் நடப்பாண்டில் ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பாலைவனப் பகுதிகளை கடந்து ராஜஸ்தான் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆங்காங்கே தென்படும் வெட்டுக்கிளிகள் உள்நாட்டு வெட்டுக்கிளிகள் என ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் வேளாண் துறை மூலம் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதனை மீறி எதிர்பாராத சூழலில் பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன மருந்துகள் மற்றும் தெளிப்பு உபகரணங்கள் போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால் விவசாயிகள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை ஆலோசித்த பிறகு அவற்றை அழிக்கும் முறைகளை பின்பற்ற வேண்டும்.
எனவே சிவகங்கை மாவட்ட விவசாய பெரு மக்கள் வயல்வெளிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகளை கண்டு பாலைவன வெட்டுக்கிளிகள் என அச்சப்பட வேண்டாம். வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால் அவற்றை புகைப்படம் எடுத்து உழவன் செயலியில் பூச்சிநோய் கண்காணிப்பு பிரிவில் பதிவேற்றம் செய்தும், அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டும் ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடி ஊராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது. 6-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை கீழடியில் மட்டும் நடைபெற்ற அகழாய்வு பணிகள் 6-ம் கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
கீழடியில் நீதி அம்மாள் என்பவரது நிலத்தில் சில குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதில் சிறிய பானை, பெரிய பானை, செங்கல் கட்டுமான பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு கொந்தகையில் சில குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் செய்ததில் முதுமக்கள் தாழி மற்றும் சிறிய வகை பானைகள், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அகரத்தில் மண் பானை ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதன் முதலாக மணலூரில் கடந்த 23-ந் தேதி முதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று மணலூரில் சுடுமண் உலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொல்லியல் துறையினரின் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறும்போது, இந்த உலையானது அணிகலன்களை வடிவமைப்பதிலும், உலோகம் தயாரிக்கவும் பயன்பட்டுள்ளதா என இனி வரும் நாட்களில் முழுமையாக தெரியவரும் என கூறியுள்ளார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சத்திரத்தார் வீதியில் உள்ள ஒரு வீட்டை திருப்பத்தூரை சேர்ந்த பெரியசாமி (வயது48) என்பவர் சினிமா படப்பிடிப்பிற்கு வாடகைக்கு எடுத்தார்.
அவர் தன்னை ஜமீன்தார் போன்று அடையாளப் படுத்திக் கொண்டு இந்த வீட்டுக்கு சொத்து பத்திரம் கொடுத்தால் அதற்கேற்ப கோடிக்கணக்கில் கடன் தருவதாக கூறினார்.அதற்கு முன் பணமாக லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்ய திட்டமிட்டார்.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரை சேர்ந்த நாகராஜன் என்பவரை தேவகோட்டைக்கு வரவழைத்தார். அவர் வழங்கிய வீட்டின் சொத்து பத்திரத்தை பார்த்த நாகராஜன், மாலையில் 5 கோடி ரூபாய் தருவதாகவும் அதற்கு முன்னர் 5 லட்ச ரூபாய் முன்பணம் வேண்டும் என்றும் கூறினார்.
இதை நம்பிய நாகராஜன் 2 லட்ச ரூபாய் முன்பணமும், 6 செக்குகளையும் கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட பெரியசாமி மாலையில் பணம் தருவதாகக் கூறி உடனடியாக வீட்டை காலி செய்ய கூறினார்.
பெரியசாமிக்கு உடந்தையாக திருப்பத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுந்தர பாண்டியன் (29), குருசாமி, செல்லத்துரை ஆகியோர் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து நாகராஜன் தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பேபிஉமா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். நூதன மோசடியில் ஈடுபட்ட பெரியசாமி, சுந்தர பாண்டியன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 6 செக்குகள் மற்றும் மோசடிக்கு பயன் படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த மோசடியில் தொடர்புடைய குருசாமி, செல்லத்துரை ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். புகார் கொடுத்த சில மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் பேபி உமாவை பொதுமக்கள் பாராட்டினர்.
சிவகங்கை மாட்டத்தில் கொரோனா தடையால் கடந்த 50 நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் பஸ் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் நேற்று காலை 6 மணிமுதல் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின. தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
சிவகங்கை பகுதியில் இருந்து சென்ற பஸ்களில் சுமார் 10 பயணிகள் வரை சென்றனர்.பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் முககவசம் அணிந்திருந்தனர். அத்துடன் பஸ்சில் சென்ற பயணிகளும் முக கவசம் அணிந்து அமர்ந்து இருந்தனர்.
பஸ் பயணிகளுக்கு கண்டக்டர்கள் கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னர் பஸ்சில் அமர செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-
அரசு 50 சதவீத பஸ்கள் இயக்க தெரிவித்து இருந்தாலும், இந்த மாவட்டத்தில் மக்களின் தேவைகளுக்காக சுமார் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 9 மணிவரை பஸ்கள் இயக்கப்படும். தேவை அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்புவனம் போலீஸ் சரகம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். மேல ரத வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அண்ணன், தம்பிகளான இவர்கள் இடையே இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்தநிலையில் மாயகிருஷ்ணன் மகன் கவுதமன், ரகுவேல், செல்வராஜ் ஆகிய 3 பேரை பொன்னுச்சாமி மகன் விக்னேசுவரன், ராமநாதன், புவனேசுவரன் உள்பட 5 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டி உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கவுதமன் கொடுத்த புகாரின்பேரில் 5 பேர் மீது திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பம்புசெட்டுகளை 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு 2020-21-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்திற்கு 640 சோலார் பம்புசெட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 5 எச்.பி. முதல் 10 எச்.பி. வரை சோலார் பம்புசெட்டுகள் அமைத்துத்தரப்படும். 5 எச்.பி. சோலார் பம்புசெட்டுகள் அமைக்க அதிக பட்சமாக ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 330-ம், 7.5 எச்.பி. சோலார் பம்பு செட் அமைக்க அதிக பட்சமாக ரூ.3 லட்சத்து 67ஆயிரத்து 525 மற்றும் 10 எச்.பி. சோலார் பம்பு செட் அமைக்க அதிகபட்சமாக ரூ.4 லட்சத்து 39ஆயிரத்து 629 செலவாகும். இதில் 70 சதவீத தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.
ஏற்கனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவர்களுடைய முன்னுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்பொழுது சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தினை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கை-தொண்டி ரோட்டில் அமைந்துள்ள சிவகங்கை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் காரைக்குடி சூடாமணிபுரம் புகழேந்தி தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை கொடுத்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






