search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேவகோட்டையில் சொத்து பத்திரத்துக்கு ரூ.5 கோடி தருவதாக நூதன மோசடி- 2 பேர் கைது

    தேவகோட்டையில் சொத்து பத்திரத்துக்கு ரூ. 5 கோடி தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சத்திரத்தார் வீதியில் உள்ள ஒரு வீட்டை திருப்பத்தூரை சேர்ந்த பெரியசாமி (வயது48) என்பவர் சினிமா படப்பிடிப்பிற்கு வாடகைக்கு எடுத்தார்.

    அவர் தன்னை ஜமீன்தார் போன்று அடையாளப் படுத்திக் கொண்டு இந்த வீட்டுக்கு சொத்து பத்திரம் கொடுத்தால் அதற்கேற்ப கோடிக்கணக்கில் கடன் தருவதாக கூறினார்.அதற்கு முன் பணமாக லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்ய திட்டமிட்டார்.

    இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரை சேர்ந்த நாகராஜன் என்பவரை தேவகோட்டைக்கு வரவழைத்தார். அவர் வழங்கிய வீட்டின் சொத்து பத்திரத்தை பார்த்த நாகராஜன், மாலையில் 5 கோடி ரூபாய் தருவதாகவும் அதற்கு முன்னர் 5 லட்ச ரூபாய் முன்பணம் வேண்டும் என்றும் கூறினார்.

    இதை நம்பிய நாகராஜன் 2 லட்ச ரூபாய் முன்பணமும், 6 செக்குகளையும் கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட பெரியசாமி மாலையில் பணம் தருவதாகக் கூறி உடனடியாக வீட்டை காலி செய்ய கூறினார்.

    பெரியசாமிக்கு உடந்தையாக திருப்பத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுந்தர பாண்டியன் (29), குருசாமி, செல்லத்துரை ஆகியோர் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து நாகராஜன் தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் பேபிஉமா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். நூதன மோசடியில் ஈடுபட்ட பெரியசாமி, சுந்தர பாண்டியன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 6 செக்குகள் மற்றும் மோசடிக்கு பயன் படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த மோசடியில் தொடர்புடைய குருசாமி, செல்லத்துரை ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். புகார் கொடுத்த சில மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் பேபி உமாவை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×