என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை அருகே உள்ள அம்மனாபட்டியை சேர்ந்த முருகன் மனைவி உமையாள் (வயது25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் பீர்க்கலைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். கோட்டையூர் அருகே வரும்போது ஆம்புலன்சில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு மருத்துவ உதவியாளர் பிரியா சிகிச்சை அளித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர், சுவாச பொடி, மூலிகை டீ ஆகியவைகள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் இருந்து வந்தது. பலர் குணமாகி வீடு திரும்பினர். இந்தநிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 2 ஆண்கள், கல்லல், காளையார்கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த தலா ஒரு பெண்கள் வீதம் 3 பேருக்கும், தேவகோட்டை அருகே கண்ணமங்கலம், சிவகங்கை, சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்களுக்கும், நாட்டரசன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், அவரது 10 வயது மகள் மற்றும் 11, 13 வயது மகன்கள் ஆகியோருக்கும், இளையான்குடி அருகே கீழாயூரை சேர்ந்த 7 வயது சிறுமிக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள்.
நேற்று மாவட்டத்தில் 2 சிறுவன், 2 சிறுமி உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,990 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 475 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 127 பேர் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 4 தனிமைப்படுத்தும் முகாம்களில் 206 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிவகாசி எழில்நகரை சேர்ந்த 39 வயது போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இதே போன்று மீனம்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாத்தூரை சேர்ந்த 26 வயது நபருக்கும், நடுசூரங்குடியை சேர்ந்த 28 வயது நபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திரும்பியவர்கள். சாத்தூர் டிரான்ஸ்போர்ட் காலனியை சேர்ந்த 27 வயது நபரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திரும்பி உள்ளார்.
இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள், சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் கொரோனாவால் வருமானம் இழந்து தவிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு நிவாரண நலத்திட்ட கடன் உதவி வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் மாவட்டத்தில் உள்ள 197 குழுக்களுக்கு ரூ.4 கோடியே 47லட்சத்து 16 ஆயிரம் கடன் உதவியை வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், துணைத் தலைவர் என்.எம். ராஜா, மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி, கூட்டுறவு வங்கி மண்டல இணை இயக்குனர் பழனீஸ்வரி, கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளாபாலசந்தர், கூட்டுறவு சரக துணைப் பதிவாளர் ராஜேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிமுத்து, கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பான உறுதிமொழி அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் ஏற்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26,228 மதிப்பில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், எம்.எல்.ஏ. நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் சரவணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் கீழடியில் தொழிற்சாலை நிறைந்த பகுதியாகவும், கொந்தகையில் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியாகவும், அகரம் மற்றும் மணலூர் பகுதியில் பழங்கால மக்கள் வசிப்பிட பகுதியாக இருந்ததாகவும் அங்கு கிடைக்கும் சுவடுகள் மூலம் தெரிய வருகிறது.
நேற்று நடந்த அகழாய்வில் மணலூரில் மண் திட்டு பகுதியும், அகரத்தில் கவிழ்ந்த நிலையில் சிறிய பானையும், அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானையும் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது:-
அகரம் பகுதியில் சங்கு வளையல்கள், பாசிகள் மற்றும் மணிகள் கிடைத்துள்ளன. கீழடி போல் அகரம், மணலூர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி செய்தால் முன்னோர்கள் வசிப்பிடம் இருந்த கட்டிடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் கொந்தகை பகுதியில் ஆராய்ச்சி பணிகள் நடைபெறும் இடத்திற்கு எதிரே தனியார் நிலத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுவதற்கு முன்பு சிவகங்கை-இளையான்குடி ரோட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையை சீரமைத்து அதை கொரோனா சிறப்பு வார்டுடன் தனிமைப்படுத்தும் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் தனிமைப்படுத்துதல் மருத்துவமனையை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யபட்டவர்களுக்கு சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மருத்துவமனைக்கு வரும் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிவகங்கையில் ஏற்கனவே செயல்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை ரூ.30 லட்சம் செலவில் சீரமைத்து கொரோனா சிறப்பு வார்டுடன் தனிமைப்படுத்துதல் மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 45 படுக்கை வசதிகள் கொண்ட அறைகளும், 7 படுக்கைகள் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவு சிறப்பு வார்டுகளும் என மொத்தம் 52 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 124 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சொந்த ஊராகக் கொண்ட 51 வயது தொழில் அதிபர் சென்னை எழும்பூரில் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். அவர் கடந்த சில தினங்கள் முன்பு சென்னையில் இருந்து காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
இதற்கிடையே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அவர் காரைக்குடி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து உடனடியாக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைபெற்று வந்த அவர் நேற்று அதிகாலை 3 மணிஅளவில் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் முன்னிலையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காரைக்குடி கழனிவாசல் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த கீரனூரை சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 8-ந் தேதி சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்தநிலையில் அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் மானாமதுரையைச் சேர்ந்த 52 வயதுடையவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
தினந்தோறும் இவர் காரில் மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது எப்படி? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா உள்ளதா? என்று சுகாதார துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கொரோனா நிவாரண தொகையாக மத்திய அரசு சார்பில் ரூ.7ஆயிரத்து 500-ம், மாநில அரசின் சார்பில் ரூ.5ஆயிரம் வழங்க கோரி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் உலகநாதன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மானாமதுரையில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஆண்டி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், காளையார்கோவிலில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலும், மறவமங்கலத்தில் அப்துல்ரகுமான், திருச்செல்வம் ஆகியோர் தலைமையிலும், திருவேகம்புத்தூரில் பொன்னுச்சாமி, வேலு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தேவகோட்டையில் மார்க்சிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு காமராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் மார்க்சிஸ்டு தாலுகா செயலாளர் சின்னகண்ணன், இந்திய கம்யூனிஸ்டு ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலும், கல்லலில் மார்க்சிஸ்டு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் குணாலன் ஆகியோர் தலைமையிலும், பட்டமங்கலத்தில் மார்க்சிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையிலும், திருப்பத்தூரில் மார்க்சிஸ்டு மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையிலும், இடையமேலூரில் முத்துக்கருப்பன், முருகன் ஆகியோர் தலைமையிலும், பூவந்தியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில், எஸ்.புதூரில் சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்து கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசித்து வரும் வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் இரு பாலருக்கும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட உள்ளது.
எனவே கொரோனா தொற்று நோய் பரவுதல் ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கிராம பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாளர்களையும், நகர்புற பகுதிகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள சமுதாய ஒருங்கிணைப்பாளர்களையும் தொடர்பு கொண்டு உரிய விவரத்தினை பதிவு செய்து பயனடையுமாறு சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய-மாநில அரசுகள் சார்பில் அகழாய்வு பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்றது. தற்போது 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன. கீழடியில் நீதி அம்மாள் என்பவர் நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இதில் சிறிய பானை, பெரிய பானை, செங்கல் கட்டுமான பகுதி, விலங்கின எலும்புக்கூடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. கொந்தகையில் சில குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் முதுமக்கள் தாழி மற்றும் சிறிய வகை பானைகள், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அகரத்தில் மண் பானை ஓடுகள், நத்தைகூடுகளும் மணலூரில் சுடுமண் உலையும் கிடைத்தன.
இந்தநிலையில் கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழியை நேற்று தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மனித உடல் எலும்புகள் அதிகமாக கிடைத்துள்ளன. அவைகளை சேகரித்து தனியாக கவரில் வைத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வுக்கு பிறகு எந்த வருடத்தை சேர்ந்தது என்ற விவரம் தெரியவரும். இதுபோல் இன்னும் சில முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்படாமல் மணல் மூடியபடியே உள்ளன.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளில் மணல், சவடு அள்ளப்பட்டு வருகிறது. 0.9 மீட்டர் அளவு ஆழத்திற்கே மணல் அள்ள கனிம வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் மணல், சவடு 40 முதல் 50 அடி வரை அள்ளப் படுகின்றன.
சவடோ, மணலோ அள்ளக்கூடாது என்று உயர்நீதிமன்றம் 2019-ல் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கனிமவளத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
அதாவது உபரி மண் அள்ளிக் கொள்ளலாம், 0.9 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே அள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மணல், சவடு மணல், திருப்புவனம் அருகே உள்ள சங்கட்டி, கானூர், பாப்பாகுடி, கருங்குளம் ஆகிய பகுதிகளில் அள்ளி வருகிறார்கள்.
இந்த சட்ட விரோத காரியத்தை தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம் பாண்டி திருப்புவனம் வட்டாட்சியரிடம் கூறினார்.
இதனால் ஏனாதி கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனுவும் கொடுத்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாண்டியப்பன், நீலமேகம், ஜோதி, பிரபாகரன் ஆகியோர் வட் டாட்சியர் மூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.
சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசுவரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் குறுவைப் பட்டத்தில் காப்பீடு பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டாரங்களை சேர்ந்த உளுந்து, நிலக்கடலை மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் காப்பீடு பதிவு செய்ய தகுதியானவர்கள். பயிர்கடன் பெறும் மற்றும் பயிர்கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.
குறுவைப் பருவத்தில் பருத்தி காப்பீடு செய்ய பதிவுகட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.480 செலுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய பதிவுக்கட்டணம் 1 ஏக்கருக்கு ரூ.331 செலுத்தி ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு பதிவுகட்டணமாக ரூ.416 செலுத்தவேண்டும். உரிய காலக்கெடுவுக்குள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தி பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்கள் அறிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






